angajanகடந்த வாரம் சிறீலங்காவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் பல நெருக்கடிகளை சந்தித்த போதும் தமிழ் இனத்திற்கு எதிரான போரில் அவர்களின் அரசியல் சிந்தனையானது எள்ளளவும் பிசகவில்லை என்பதை தேர்தலுக்கு பின்னர் இடம்பெறும் சம்பவங்கள் எமக்கு எடுத்துச் சொல்லியுள்ளன.

 

சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலானது சிங்களக் கட்சிகளிடம் பெரும் பிளவுகளை ஏற்படுத்திய போதும் அந்த பிரிவினையில் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அனுகூலங்களை அடைந்துவிடக்கூடாது என்பதில் சிங்கள தேசம் ஒற்றுiமாக செயற்பட்டுள்ளதையே தற்போது தென்னிலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

 

தேசியப் பட்டியில் உட்பட 106 ஆசனங்களை பெற்றுள்ள சிறீலங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியானது ஆட்சி அமைப்பதற்கு குறைந்தது 7 ஆசனங்கள் தேவையாகவே இருந்தது. இந்த நிலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெற்றிருந்தததால் அவர்களின் ஆதரவு சிங்கள அரசுக்கு தேவைப்படும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 

அவ்வாறு தமிழ் கட்சி சிறீலங்கா அரசமைப்பில் பங்கு பற்றினால் அவர்கள் ஒரு பேரம்பேசும் சக்தியாக விளங்க முடியும் அல்லது சில விடயங்களில் சிறீலங்கா அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கலாம் எனக் கருதப்பட்டது.

 

எனினும் அவ்வாறு ஒரு நிலை ஏற்படாது சிங்கள கட்சிகள் தமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொண்டால் தமிழ் கட்சியானது எதிர்க்கட்சி என்ற நிலைக்கு உயரும் வாய்ப்பு ஏற்படும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த இரு அனுமானங்களையும் உடைத்து தமிழர் தரப்புக்கு எந்த வித பேரம்பேசும் அதிகாரமும் வழங்கப்படக் கூடாது என்பதில் சிங்களக் கட்சிகள் உறுதியாகவே செயப்பட்டுள்ளன.

 

சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா மற்றும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா ஆகியோரின் கூட்டணியாக இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியானது இரு பிரிவாக பிரிந்து ஒன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க மற்றைய அணி எதிர்க்கட்சி வரிசையில் உக்காரவுள்ளது.

 

அதாவது சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சியானது ஒரு சிறுபான்மைக் கட்சியாகவே இருக்கவேண்டும் என்பதில் சிங்களத் தலைமைகள் உறுதியாகவே உள்ள.

 

அது மட்டுமல்லாது சிறீலங்கா சுதந்திரக் கட்சியானது தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவை பயன்படுத்திய விதம் அரசியல் அவதானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

தனது கட்சியில் உள்ள மிக முக்கிய தலைகள் கூட தேர்தலில் தோல்வியை தழுவிய போதும், அவர்களை விடுத்து தனது தேசியப் பட்டியல் இடங்களில் ஒன்றை தென்னிலங்கை சிங்களக்கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு 12,000 வாக்குகளுடன் தோல்லியடைந்த அங்கஜனுக்கு வழங்கியுள்ளது.

 

சிங்கள அரசுகளும் சரி சிங்களக் கட்சிகளும் சரி திட்டமிட்டு அரங்கேற்றும் மிகவும் நுட்பமான இன அழிப்பு மற்றும் தமிழர் தாயகக் கோட்பாடுகளை சிதைக்கும் நடவடிக்கையின் திட்டமே அங்கஜனுக்கு வழங்கப்படும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி.

 

இன்று தேர்தலில் தோல்வியடைந்துள்ள அங்கஜன் நாளை நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணத்தில் தனது நடவடிக்கைகளை ஆரப்பிக்கப்போகின்றார். எதிர்வரும் ஐந்து வருடங்களில் அவர் அங்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்துவதுடன், சிறீலங்கா அரசின் தமிழர் விரோதக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பார்.

 

எதிர்வரும் ஐந்து வருடங்களில் அவர் ஆற்றும் பணிகள் மூலம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிங்களக் கட்சிக்கான வாக்கு வங்கியை அவரால் கணிசமாக அதிகரிக்க முடியும். இதனை மறுவளமாகக் கூறுவதானால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் கணிசமான அளவு இழக்கப்படும்.

 

சிறீலங்காவின் முன்னைய அதிபர் சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் வடக்கில் கொண்டுவரப்பட்ட ஈ.பி.டி.பி ஓட்டுக்குழுவானது தற்போதைய தேர்தலிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிறீலங்கா அரசின் நுட்பமான இன அழிப்பின் ஒரு அங்கம் தான் இது.

 

ஆனால் தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் தன்னிடம் உள்ள இரண்டு தேசியப் பட்டியல் இடங்களை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் இழுபறி நிலையே காணப்பட்டதுடன் அதனை தற்போது வடக்கிற்கே வழங்கியுமுள்ளது.

 

அந்த ஆசனங்களை கிழக்கு மாகாணத்திற்கு வழங்கி அங்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து எதிர்வரும் தேர்தலில் சிங்கள மூஸ்லீம் கட்சிகளை தோற்கடிப்பதறாகான பதையை ஏற்படுத்த வேண்டும் என ஈழம் ஈ நியூஸ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.

 

கிழக்கில் அதிகரிக்கப்படும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அங்கு எமக்கான ஒரு தேசிய பலத்தை கட்டியெழுப்புவதற்கு பயன்படும். அடுத்த தேர்தலில் தமிழ் மக்களின் வாங்குகளின் பலத்தை அதிகரிப்பதற்கான சக்தியாகவும் அது உருவெடுக்கும் என்பதே யதார்த்தம்.

 

ஆனால் இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்வதற்கு கூட அரசியல் கலப்படமல்லாத தமிழத் தேசியம் சார்ந்த சிந்தனைகள் தேவை. எனவே தான் சிங்கள அரசிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறையவே எமக்குண்டு. அதிலும் குறிப்பாக எமது தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உண்டு.

 

ஈழம் ஈ நியூஸ்.