நேற்று சிரியக் குழந்தைகளின் படுகொலைகளை முன் வைத்து திமுக வின் தமிழின அழிப்பில் அதன் பங்கை நினைவூட்டியிருந்தேன்.

 

உடனே சிலர் கருணாநிதி மீதான இந்த வரலாற்று குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் அவர் நினைத்திருந்தாலும் – பதவியை துறந்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது என்று கிளம்பி விட்டார்கள்.

 

கடவுளே ஏற்கனவே எழுதிய ஒரு விடயத்தை திரும்பத் திரும்ப எத்தனை தடவைதான் எழுதுவது?

 

இதுவே கடைசியாக இருக்கட்டும்..

 

‘புலிகளை அழிக்கிறோம்’ என்ற போர்வையில் தமிழர்களை அழிக்கிற நிகழ்ச்சி நிரல் இலங்கை, இந்திய மற்றும் மேற்குலகத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. எனவே கருணாநிதியால் அதை மாற்றியிருக்க முடியும் என்பது ஏற்புடைய ஒன்றில்லைத்தான்.

 

ஆனால் நடந்த விளைவுகளை திசைமாற்றியிருக்க முடியும். ஒரு தமிழர் தலைவராக – தமிழக முதலமைச்சராக – மத்திய அரசில் அங்கம் வகித்தவாராக ஈழத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் அவரிடம் ஒரு தோழமை உணர்வை எதிர்பார்த்தார்கள். மாறாக அவர் நிறைய தகிடுதத்தங்களை செய்தார். மக்கள், மாணவர் எழுச்சியை அடக்கியதுடன் போலி உண்ணாவிரத நாடகங்களை நடத்தி போர் நிறுத்தப்பட்டதாக போலிப்பரப்புரை செய்து இனஅழிப்புக்கு துணைநின்றார்.

 

குறைந்தது கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை நம்பி
பதுங்கு குழியை விட்டு வெளியே வந்து கொல்லப்பட்ட பல நூறு குழந்தைகள், பெண்கள் படுகொலைகளையாவது பொறுப்பெடுத்து மன்னிப்பு கோரினாரா? அதுவும் இல்லை.

 

கருணாநிதி பதவி விலகினாலும் போர் நிற்காது என்று எங்களுக்கு தெரியும். ஆனால் மத்திய அரசிலிருந்து இவர் வெளியேறும் நிகழ்வு எமக்கு தோழமைரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

 

தமிழீழத்தின் திறவுகோல் தமிழகம் என்ற அடிப்படையில் பிராந்திய பூகோள அரசுகளின் பகைடையாட்டத்திற்கு – தமிழின அழிப்புக்கு எதிராக வைக்கப்பட்ட “செக்” ஆக அது இருந்திருக்கும். அது நிச்சயம் எமக்கு சாதகமான அரசியல் விளைவுகளை தந்திருக்கும்.

 

ஆனால் கருணாநிதி தனதும் தனது குடும்பத்தினதும் நலன் கருதி காய் நகர்த்துவதிலேயே குறியாக இருந்தார். விளைவாக எந்தவித தடயமுமின்றி 146679 தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

 

கருணாநிதி நேர்மையாகவும் அறவுணர்வுடனும் செயற்பட்டிருந்தால் இந்த இழப்பில் பாதியையாவது குறைத்திருக்கலாம் என்பதே எமமுடைய ஆதங்கமாக இருக்கிறது.

 

அவரை தமிழின துரோகி என்று உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான தமிழ் மக்கள் தூற்றுவதன் பின்னணி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

 

போதும் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

 

பரணி கிருஸ்ணரஜனி