1990ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் இன்னும் மூடப்படவில்லை.

 

ஆரம்பித்து வைத்த கலைஞர்கூட இறந்துவிட்டார். ஆனால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை.

 

கடந்த 28 வருடங்களாக இந்தியாவில் ஈழ அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது.

 

தற்போது திருச்சியில் இச் சிறப்புமுகாம் இயங்கி வருகிறது. அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி வருகின்றனர்.

 

எவ்வித நீதி விசாரணையும் இன்றி அடிப்படை உரிமைகள் மற்றும் வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் இவ் அகதிகள் உள்ளனர்.

 

அவர்கள் விடுதலைகோரி உண்ணாவிரதம் இருக்கும்போது அதிகாரிகள் வாக்குறுதி கொடுப்பதும் பின்னர் அதனை நிறைவேற்றாது ஏமாற்றுவதுமாக இருக்கின்றது.

 

கடந்த காலங்களில் பல கட்சிகளும் அதன் தலைவர்களும் இச் சிறப்புமுகாமை மூடும்படி குரல் கொடுத்தனர். தற்போது அவர்களும் இதனை மறந்து விட்டனர்.

 

இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஈழத் தலைவர்களும் இவ் அகதிகளை விடுதலை செய்யுமாறு இதுவரை கோரியதில்லை.

 

இந்நிலையில் சீமானின் நாம்தமிழர் கட்சியினர் மட்டுமே ஜ.நா வில் இச் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து சுட்டிக்காட்டி மகஜர் அளித்துள்ளனர்.

 

மோடி அரசு உதவும் என்று நம்பி இந்து தமிழீழம் கேட்டுள்ள காசி ஆனந்தன் அய்யாகூட இச் சிறப்புமுகாம் குறித்து இதுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை.

 

யுத்தம் முடிந்து 9 வருடமாகிவிட்டது. இன்னும் எதற்காக சிறப்புமுகாம்? ஏன் இன்னும் அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யவில்லை என்று ஒரு தலைவரால் கூட கேட்கப்படவில்லை என்பது வேதனையே.

 

இன்று தமிழருக்கு பல ஊடகங்கள் உள்ளன. அவைகூட இச் சிறப்புமுகாம் பற்றி பேசாதது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

 

இனியாவது யாராவது இதில் அக்கறை காட்டுவார்களா? அந்த அகதிகளின் விடுதலைக்கு வழி செய்வார்களா?

 

பிறக்கும் 2019 வருடமாவது இந்த அகதிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்குமா?

 

நன்றி: பாலன்