களுத்துறை மாவட்டத்தில் உள்ள அளுத்கம, பேருவெல நகரங்களில் நேற்றுமாலை சிங்கள பௌத்த அடிப்படைவாத பொதுபல சேனா அமைப்பு நடத்திய பேரணியை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சம்பவங்களில், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டதுடன், பலர் காயங்களுக்கும் உள்ளாகினர்.

muslim33
இதையடுத்து, அளுத்கம, பேருவெல பகுதிகளில் 15.06.2014 தொடக்கம் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறைக்கு வித்திட்ட பொதுபல சேனா

கடந்த வியாழக்கிழமை குருந்துவத்த சிறி விஜயராம விகாரையின் பிரதம பிக்கு, வண அயகம விஜித தேரரும், அவரது சாரதியும், முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, நேற்றுமாலை அளுத்கம நகரில், பொதுபல சேனாவின் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய, பொதுபலசேனாவின் பொதுச்செயலர் கலகொடதத்த ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான கருத்துக்களை வெளியிட்டதுடன், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள சிறிலங்கா அரசாங்கத்தையும் கண்டித்தார்.

எம்மை அவர்கள் இனவாதிகள், மத அடிப்படைவாதிகள் என்கிறார்கள்.

ஆம், நாங்கள் இனவாதிகள் தான். இந்த நாடு ஒரு சிங்கள காவல்துறையை கொண்டுள்ளது.

ஒரு சிங்கள இராணுவத்தைக் கொண்டிருக்கிறது.

சிங்களவர் ஒருவர் மீது கைவைத்தால், அதுவே அவர்கள் எல்லோருக்கும் முடிவாக இருக்கும் என்று ஆவேசமாக பேசினார்.

இந்தக் கூட்டத்தில், பெருந்தொகையான சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கல்வீச்சுடன் தொடங்கியது வன்முறை

இந்தநிலையில், தர்கா நகரில், உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது, குண்டர் குழுவொன்று கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகவும்,அதையடுத்தே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சிங்களவர்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்த வன்முறைகளை துவக்கியது யார் என்பது குறித்து சரியான விபரங்கள் தெரியவரவில்லை.

எனினும், அண்மைக்காலமாக பதற்றம் நிலவிய அளுத்கமவில், பொதுபல சேனாவுக்கு பேரணி நடத்த காவல்துறை அனுமதி அளித்ததே இந்த வன்முறைக்கு முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு

15.06.2014 மாலை பரவிய வன்முறைகளை அடுத்து, மாலை 6.45 மணியளவில், அளுத்கம நகரில் காவல்துறை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

பின்னர், பேருவளையிலும் வன்முறைகள் வெடித்ததால், அங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அளுத்கம நகருக்கு உடனடியாக வரைவழைக்கப்பட்ட 1200 காவல்துறையினர் மற்றும் 400 சிறப்பு அதிரடிப்படையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரமுயன்றனர்.

எனினும், நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

முதலில், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், குண்டர்களைக் கலைக்க மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி?

இந்தநிலையில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

வல்பிட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூன்று பேர் பலியானதாகவும், மேலும் பலர், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், காவல்துறை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த வன்முறைகளின் போது, முஸ்லிம்களின் கடைகள், வீடுகள், பள்ளிவாசல்கள், வாகன்ஙகள் என்பன, தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன.

இதனால், நேற்றிரவு, அளுத்கம நகரில் இருந்து பெரும் புகை மண்டலம் மேல் எழுந்ததை தொலைவில் இருந்தே காண முடிந்தது.

பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் தஞ்சம்

முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் பல தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்கள் அச்சத்தில், வீடுகளை விட்டு வெளியேறி, பள்ளிவாசல்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனினும், முஸ்லிம்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

மேலும், நாடெங்கும் உள்ள முஸ்லிம் மத வழிபாட்டு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

தர்க்கா நகரில் முஸ்லிம்களின் 10 கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. கொட்டப்பிட்டிய, மீரிபென்ன, அதிகாரி கொட பகுதிகளில் உள்ள பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

சிங்கள பௌத்த இனவெறியர்களால் தர்கா நகரில் இடம்பெற்ற வன்முறைகளில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 150 பேர்க்கு மேல் காயமுற்றதுடன் பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தீவைக்கப்பட்டு முஸ்லிம் மக்களது பெருமளவு சொத்துக்கள் அழித்தொழிக்கப்பட்துள்ளது

அளுத்கம மற்றும் பேருவெல பகுதிகளில், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதக் குண்டர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றுமாலை பொதுபல சேனாவினர் அளுத்கமவில் நடத்திய பேரணியை அடுத்து, தொடங்கிய இந்த வன்முறைகள், ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

அளுத்கமவில் தொடங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறை, பேருவெல, தெகிவளைக்கும் பரவியிருந்தது.

அளுத்கம மற்றும் பேருவெலவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச்சட்டம், இன்னமும் நீக்கப்படவில்லை.

நேற்று இரவு அளுத்கமவில் பள்ளிவாசல் அருகே, முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்த்து ஏழு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு முழுவதும் நடந்த வன்முறைகளில், 80இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுத்துறை தள மருத்துவமனை, பேருவெல மாவட்ட மருத்துவமனை, தர்கா நகர் அரச மருத்துவமனை, அளுத்கம கிராமிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுகாயமுற்ற சிலர், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை, 150 பேருக்கும் மேல் காயமுற்றதாகவும், அவர்களில், சில சிறிலங்கா காவல்துறையினரும் அடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருவெலவில் முஸ்லிம்களின் 34 வீடுகள் எரிக்கப்பட்டு இரண்டு பள்ளிவாசல்களும் சேதமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

100 பௌத்த பிக்குகளும், 3000 சிங்களவர்களும் ஒன்றுகூடிய பேரணியே இந்த வன்முறைக்கு காரணம் என்று மாகாணசபை உறுப்பினர் முகமட் இப்திகார் ஜனீல் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த வன்முறைகளில் 30 வீடுகள் எரிக்கப்பட்டதுடன், 500 வீடுகள் சேதமாக்கப்பட்டன. முஸ்லிம்களின் 47 கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழ் ஊடகங்கள்.