இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்தை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.

 

tgte_singature_0182ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள கையெழுத்து இயக்கமானது நியூயோர்கில் ஐ.நா தலைமைகத்துக்கு முன்னாலும், ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலிலும் தொடங்கப்பட்டது.

 

நியூயோர்க்கில், முதற்கையெழுத்தினை அமெரிக்காவின் முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் ராம்சே கிளார்க் அவர்கள் ஒப்பமிட்டு தொடக்கி வைத்திருந்தார். கையொப்ப மனுவினை நிவேதா ஜெயக்குமார், சூமியா கருணாகரன் ஆகிய இளந்தலைமுறையினர் வாசித்தனர்.

 

‘போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் ‘அமைதிக்கான அச்சுறுத்தல்’ தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது’ என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ள இக்கையெழுத்து இயக்கத்தில் www.tgte-icc.org என்ற இணையத்தளத்தின் வழியே உலகெங்கும் உள்ளவர்கள் ஒப்பமிட்டுக்
கொள்ளலாம். அத்தோடு இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக சர்வதேசக் குற்றங்களை, சர்வதேச மன்றங்களிலும் – அயல்நாடுகளில் உள்ள உள்நாட்டுத் தீர்ப்பாயங்களிலும் முன்னிறுத்துவதற்கும், வழக்குப் பணிகளுக்கான நிதியைத் திரட்டுவதற்கான வேண்டுகோளும் முன்வைக்கப்படுகிறது.

 

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையால் குறிப்பிடப்பட்டுள்ளது போல தமிழர்களுக்கான நீதி கிடைக்க ஏதுவான அரசியல் சூழல் அங்கு இல்லை என்பதையும் இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. சிங்களர்கள் மேலாதிக்கம் பெற்றுள்ள ஒரு நீதித்துறை சிங்கள இராணுவ அதிகாரிகளை விசாரிக்க முயற்சி செய்வது நீதியைக் கொண்டு வராது என்றும், இது கடந்தகால விசாரணை ஆணையங்களின் சான்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த மனு வாதிடுகிறது. 1983 இனப் படுகொலைகளைத் தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்துவோம் என்று ஐ.நா.விடம் சிரிலங்காத் தூதர் அளித்த வாக்குறுதியைக் குறிப்பிட்டு அந்த வாக்குறுதி ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதும் கையொப்ப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிறிலங்கா இராணுவத்தின் முன்னால் படைத் தலைவர் தற்போதைய அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராக இருக்கிறார் என்பதும், புதிய அதிபர் சிறிசேனாவின் உள்ளார்ந்த குற்றத்தன்மை நீதி வழங்கப்படுவதற்கு உகந்ததாக இருக்காது என்பதும் எந்த விதத்திலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவது தவிர வேறு வழியில்லை எனபதும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.