சிறிலங்கா அரசாங்கம் என்னை தன்நாட்டுக்குள் நுழைவதற்கு விதித்துள்ள தடை சட்டத்திற்கு முரணானது என்பதுடன், எனது உரிமையை மீறும் செயலாகும். எனினும் எவ்வாறான நெருக்கடிகளுக்கும் தடைகளுக்கும் நான் அஞ்சப்போவதில்லை

சிறிலங்கா அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் 16 அமைப்புகள் உட்பட 424 தனிநபர்களை இலங்கைக்குள் செல்வதற்கு தடைவிதித்துள்ளது. அதில் நானும் அடங்குகின்றேன்.

moorthy
என்னைப் பொறுத்தவரை நான் பிரித்தானியாவில் குடியமர்வதற்கோ அல்லது தங்கியிருப்பதற்கோ செல்லவில்லை. அது மாத்திரமின்றி நான் சட்டரீதியற்ற முறையிலும் செல்லவில்லை. இவற்றுக்கு மாறாக நான் நாடாளுமன்ற உறுபபினராக இருந்த போது 2008 டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சட்டப்படி அனுமதி பெற்று பிரித்தானியாவுக்கு விடுமுறையில் சென்றிருந்தேன். அதுவும் எனது தூதாண்மை கடவுச்சீட்டில் (DIPLOMATIC PASSPORT) சென்றிருந்தேன்.

எனினும் நான் சில மாதங்களில் நாட்டுக்குத் திரும்புவதற்கு ஆயத்தமான போது 2009 மே மாதம் இறுதிப்போர் முடிவடைந்தவுடன் என்னை சிறிலங்கா அரசு கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இதன் காரணமாக எனது செயலாளர் மற்றும் உதவியாளர்கள் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு நாலாம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து நான் தொடர்பான பல தகவல்களைப் பெற்றுக் கொண்டதுடன், எனது கொழும்பு அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு அலுவலகம் வீடு என்பன சோதனை இடப்பட்டு பல ஆவணங்கள் மற்றும் கணணிகள் என்பன புலனாய்வுப் பிரிவினரால் எடுத்துச் செல்லப்பட்டதுடன் எனது வாகனத்தையும் அவர்கள் கொண்டு சென்றனர். (தற்போதும் கொழும்பு நாலாம் மாடியில் எனது வாகனம் உள்ளது)

எனவே எந்தவித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அரசாங்கம் என்னைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக நான் கொழும்பில் உள்ள எனது சட்டத்தரணியிடம் தொடர்பு கொண்டபோது நான் கொழும்பு திரும்புவது ஆபத்தானது என அவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக நான் நாட்டுக்குச் செல்வதை நிறுத்தியதோடு தற்போதுவரை பிரித்தானியாவில் தற்காலிகமாகத் தங்கியுள்ளேன்.

நான் பிரித்தானிய பிரசையோ அல்லது நிரந்தர வதிவிட அனுமதியைப் பெற்றவனோ கிடையாது. மாறாக நான் இன்றுவரை தாயகப் பிரஜை என்பதைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றேன்.

எனவே நான் சிறிலங்காவுக்கு திரும்பிச் செல்லாதற்குக் காரணம் சிறிலங்கா அரசும் அதன் புலனாய்வுப் பிரிவுமே ஆகும். எனினும் நான் எனது தாயகத்தில் இருந்து செய்த அரசியல் பணிகளையே தற்போதும் புலம்பெயர் நாட்டில் தங்கியிருந்து தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றேன். எனவே நான் எனது மக்களின் உரிமைக்காக எங்கிருந்தும் குரல் கொடுப்பதற்கு எனக்கு உரிமை உண்டு. இதைத் தடுப்பதற்கு சிறிகலங்கா அரசுக்கு மாத்திரமின்றி எந்நாட்டு அரசுக்கும் உரிமை கிடையாது.

ஆகவே சிறிலங்கா அரசின் இத்தடைகளைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை. எனது மக்களுக்கு உரிமை கிடைக்கும் வரை நான் தொடர்ந்து சர்வதேச ரீதியில் குரல் கொடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இது எனது உரிமை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அது மாத்திரமின்றி என்னுடன் இணைத்து தடைசெய்யப்பட்ட 423 தமிழின உணர்வாளர்களின் தடையும் அவர்களின் மனித உரிமைகளை மீறும் செயல் ஆகும். எனினும் இவர்களில் சிலர் தற்போதும் இலங்கையில் உள்ளனர். அத்துடன் சிலர் இறந்தும் ஒருசிலர் தடுப்பு முகாம்களிலும் உள்ளனர். எனினும் புலம்பெயர்ந்துள்ள இத்தடை செய்யப்பட்டவர்களின் தடைக்கு எதிராக சர்வதேச மற்றும் சிறிலங்கா நீதிமன்றில் முறைப்பாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தடை விதிக்கப்பட்ட போதிலும் இவற்றுக்கு அஞ்சாமல் அனைவரும் தமது அரசியல் பணிகளைத் தொடர வேண்டும். அத்துடன் இத்தடைக்குள் அடக்காமல் இருக்கும் தமிழின உணர்வாளர்களும் தொடர்ந்து தமது பணிகளை எமது மக்களுக்காக செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி.