சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை – நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜேர்மனியில்

0
645

Dublin_01_84807_445சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அயர்லாந்தின் தலைநகர் டப்பிளினில் கூடிய (Permanent People’s Tribunal) நிரந்தர மக்கள் நீதிமன்றம் தனது கூட்டத்தொடரில் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தது நாம் அறிந்ததே.

இத்தாலியின் றோம் நகரை தலைமையிடமாகக் கொண்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் அதன் இரண்டாவது அமர்விற்கான காலத்தையும் அதில் அங்கம் வகிக்கும் நீதியாளர்களில் விபரத்தையும் தற்போது வெளியிட்டுள்ளது.

முன்னாள் நீதியாளர்கள், மனித உரிமை அதிகாரிகள், இனப்படுகொலை தொடர்பான அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஐ.நா அதிகாரிகள் என 11 பேரைக் கொண்ட இந்த குழுவானது எதிர்வரும் சனிக்கிழமை (7) முதல் செவ்வாய்க்கிழமை (10) வரை ஜேர்மனியில் உள்ள பேர்மன் பகுதியில் கூடி சிறீலங்கா மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான சாட்சியங்களை ஆய்வுசெய்ய உள்ளதாக அதன் செயலாளர் ஜியானி ரெனோனி தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியை தளமாகக் கொண்ட பேர்மன் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு, மற்றும் சிறீலங்காவில் அமைதிக்கான ஐரிஸ் மையம் ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்துள்ள சாட்சியங்களை அங்கீகரித்துள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றம் சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கான புதிய ஆதாரங்களையும் கோரி நிற்கின்றது.

நிரந்தர மக்கள் நீதிமன்றம் தனது முதலாவது கூட்டத்தொடரில் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான சாட்சியங்கள் திரட்டப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முன்வந்து சாட்சியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையும், சிறீலங்காவுக்கு கொடைவழங்கிய நாடுகளும், அனைத்துலக சமூகமும் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு சுயாதீன விசரணையை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் எனவும் அந்த கூட்டத்தில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனிடையே, இந்த அமர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இன்று நள்ளிரவுக்கு முன்னர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பேர்மன் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு மையத்தின் பிரதிநிதி நிகோலை ஜங் (Phone: 0049 177 406 2220 email: imrvbremen@gmail.com) மற்றும் சிறீலங்காவில் அமைதிக்கான ஐரிஸ் மையயத்தின் பிரதிநிதி ஜுட் லால் பெர்ணான்டோ (Phone: 00353 851 56 2980, email: irishpeaceforum@gmail.com)) ஆகியோர் தமிழ்நெற் இணையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

பின்னவரும் பிரதிநிதிகள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் நீதியாளர்களாக பணியாற்றவுள்ளனர்.

கப்ரிலா டெலா மொறி

கற்றோலிகா டீ மிலனோ பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சட்டவியல் பேராசிரியர், றுவாண்டா இனப்படுகொலை தொடர்பான விசாரணக்குழுவின் ஆலோசகர் (2003 – 2004). அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதிநிதி (1998), யூகோஸ்லாவாக்கியா இனப்படுகொலை தொடர்பான விசாரணைக்குழுவின் ஆலோசகர் (2000).

ஜோசே இலியாஸ் மோற்றோ
திபத்து தொடர்பான அனைத்துலக சட்டவியல் நிபுணர், வலன்சியா பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சட்டவியல்
பேராசிரியர், பர்மாவில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான ஆய்வாளர்.

டானியல் பெர்ஸ்ரீன்

நிகோனல் டி பெப்ரிரோ மற்றும் பூனோஸ் எரெஸ் பல்கலைக்கழகங்களின் இனப்படுகொலை தொடர்பான கற்கைகளுக்கான பேராசிரியர்.

செவனி கரிபியன்

அனைத்துலக சட்டவியல் மற்றும் இனப்படுகொலை தொடர்பான நிபுணர், ஜெனீவா பல்கலைக்கழகத்தின் அனைத்துலக குற்றவியல் கற்கைகளுக்கான உதவிப் பேராசிரியர்.

கலூக் ஜெகர்

மத்தியகிழக்கு நாடுகளின் பிரச்சனைகள் தொடர்பான ஆய்வாளர், அரசியல் நடவடிக்கைகள் காரணமாக துருக்கியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர். குர்திஸ் மக்களின் விடுதலைக்கு ஆதரவானவர்.

ஜவியர் ஜிராடோ மொரேனோ

பகோடாவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உப தலைவர். இனப்படுகொலை தொடர்பான ஆய்வாளர்.

டேனிஸ் கலிடே

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிப் பொதுச்செயலாளர், ஈராக் மீதான பொருளாதாரத் தடை தொடர்பில் தனது 34 வருடகால ஐ.நா பதவியை துறந்தவர்.

மன்பிரட் ஓ கின்ஸ்

பேர்மன் பல்கலைக்கழகத்தின் பொதுமக்கள் தொடர்பான சட்டம், அரசியல் விவகாரங்களுக்கான பேராசிரியர். ஆபிரிக்க விடுதலைப்போர் தொடர்பில் பங்கு கொண்டவர். ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பின் தலைவராக பணியாற்றியவர்.

கெலன் ஜவீஸ்

கம்போடியாவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான நீதிவிசாரணையில் பங்குபற்றியவர்.

ஓய்ரின் வெற்றர்

நோர்வேயை சேர்ந்த அனைத்துலக சட்டவியல் நிபுணர், பிரிப்பைன்ஸ் இல் இடம்பெற்ற நீதிக்குப்புறம்பான படுகொலைகள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தொடர்பான அதிகாரி.p

மோங் சர்ன

பர்மாவைச் சேர்ந்த ஜனநாயகவாதி, பர்மாவின் சுதந்திர கூட்டமைப்பை 1995 ஆம் ஆண்டு உருவாக்கியவர். பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்.

செய்தித் தொகுப்பு: ஈழம்ஈநியூஸ்.