சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் இடம்பெறும் விசாரணைகளுக்கு உதவும் முகமாக மூன்று நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று (25) அறிவித்துள்ளது.

un-expert-srilanka
பின்லாந்து நாட்டின் முன்னாள் அரச தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான மாற்றி அற்றிசாரி, நியூசிலாந்து நாட்டின் முன்னாள் நீதிபதியும், பொதுத்துறை ஆளுணருமான சில்வியா கற்றைற் மற்றும் பாகிஸ்த்தானின் மனிஉரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜகன்கீர் ஆகியவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் மிகவும் சவாலான இந்த பணியை ஏற்றுக்கொண்டுள்ளது தொடர்பில் தான் மிகவும் பெருமைகொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

மூன்று நிபுணர்களும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்கள் மிகவு உயர்ந்த நம்பிக்கைக்குரிய, சுயாதீனமான, பாரபட்சமற்ற மற்றும் நீதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவுவார்கள் என ஐ.நா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவானது 12 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் விசாரணையாளர்கள், தடவியல் நிபுணர்கள், சட்ட ஆய்வாளர்கள் உட்பட பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அடங்கியுள்ளனர்.

பத்து மாதங்களில் விசாரணைகளை நிறைவு செய்யும் இந்தக்குழு எதிர்வரும் 2015 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விசாரணைக்கு சிறீலங்கா அரசும் மக்களும் தமது ஆதரவுகளை வழங்கவேண்டும் என நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.