தான் மேற்கொண்ட தமிழினப்படுகொலையை நியாயப்படுத்தி அதனை பயங்கரவாதப் பிரச்சனையாக சித்தரிப்பதற்கு சிறீலங்கா அரசதரப்பு மிகவும் தீவிரமாக இயங்கி வருகின்றது. 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து துன்புறுத்தல்களை மேற்கொண்ட சிறீலங்கா அரசு தமிழ் மக்களை குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என வேறுபாடின்றி படுகொலை செய்த சிங்களப்படையை வழிநடத்திய தளபதிகளை வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு ஒரு சுகபோக வாழ்க்கையை ஏற்படுத்தியதுடன், தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டங்களை முறியடிப்பதற்கு அனைத்துலக மட்டத்தில் தனது அரச பயங்கரவாத்தையும் கட்டவிழ்த்துவிட்டிருந்தது.

 
புலம்பெயர் நாடுகளில் இயங்கிய தேசியச் செயற்பாட்டாளர்கள் பலர் சிறீலங்கா அரச உளவுத்துறையினராலும், அவர்களுடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் குழுக்களாலும் தாக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர், பல தேசிய ஊடகங்கள் வியாபாரிகளில் கைகளுக்கு மாற்றப்பட்டன.

 
பல வருடங்களாக தேசியத்திற்கு ஆதரவாக செயற்பட்டு தமிழ் மக்களின் ஆதரவைப்பெற்ற ஊடகங்களைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ் மக்களிடம் புலி நீக்க அரசியல் ஒன்றை மேற்கொண்டு அவர்களின் விடுதலை உணர்வுகளை முறியடிப்பதே சிறீலங்கா அரச புலனாய்வுத்துறையினரின் நோக்கம்.

 
அது மட்டுமல்லாது போர்க்குற்றவாளிகள் என தமிழ் மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வெளிநாட்டு தூதரகங்களிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பதவிகளில் அமர்த்துவதன் மூலம். சிறீலங்கா அரசுக்கும் சிங்கள மக்களுக்குமே அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகள் உண்டு, தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்தால் புறக்கணிக்ப்பட்டவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் மனவுறுதியை சிதைப்பதே சிறிலங்கா அரசின் நோக்கமாக இருந்தது.

 
எனினும் சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ் மக்கள் தொடர்ந்து போராடியே வருகின்றனர். 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் பணியாற்றுவதற்காக நியமனம் பெற்ற 55 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்னா டி சில்வாவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கினால் அவர் தனது பணியை இடையில் நிறுத்தி சிறீலங்காவுக்கு திரும்பப்பெறப்பட்டிருந்தார்.

 
எனினும் சிறீலங்கா அரசு தனது தோல்வியை மறைப்பதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான பிரதித் தூதுவராக நியமித்திருந்தது. ஆனால் அவரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையின் ஆலோசனைக் குழுவில் பணியில் அமர்த்துவதற்கு சிறீலங்கா அரசு மேற்கொண்ட முயற்சியானது, தமிழ் மக்களும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் முன்னாள் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களும் மேற்கொண்ட அழுத்தங்களால் தோல்வியில் முடிந்திருந்தது. அவரின் சேவை ஐ.நா அமைதிப்படைக்கு அவசியமற்றது என ஐ.நாவிற்கான கனேடிய பிரதிநிதி லூஜிஸ் பிரச்சே அன்று தெரிவித்திருந்தார்.

 
அதனைப்போல தென்அமெரிக்க நாடுகளுக்கான சிறிலங்கா தூதுவராக பணியாற்றிய சிறீலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவுக்கு எதிராகவும் போர்க்குற்ற வழக்குகள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அவர் நாடு திரும்பியிருந்தார். 2009 ஆம் ஆண்டு போர் உக்கிரம்பெற்ற போது வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதியாக அவர் பணியாற்றியிருந்தார்.

 
அதாவது தமிழீழத்தில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தை அனைத்துலக மட்டத்திற் கொண்டுவருவதற்கு சிறீலங்கா அரசு மேற்கொண்ட பல முயற்சிகள் தமிழ் மக்களின் நடவடிக்கைகளினால் முறியடிக்கப்பட்டுள்ளன.

 
எனினும் அனைத்துலகத்தில் உள்ள தனது தூதரகங்களுக்கு சிறீலங்கா படை அதிகாரிகளையும், புலனாய்வு அதிகாரிகளையும் அனுப்புவதன் மூலம் தமிழ் மக்களின் செயற்பாடுகளை வேவு பார்த்து அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றது.

 
சிறீலங்கா அரசின் நாடுகடந்த அரச பயங்கரவாத்தின் தொடர்ச்சியே கடந்த ஆண்டு சிறீலங்காவின் சுதந்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக தமிழ் மக்கள் மேற்கொண்ட பேராட்டத்தை அச்சுறுத்தும் விதமாக சிறீலங்கா இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணன்டோ மேற்கொண்ட கொலை அச்சுறுத்தலாகும். அதற்கு எதிராக புலம்பெயர் தமிழ் மக்கள் வழக்கு ஒன்றை பதிவுசெய்திருந்தனர். இந்த வழக்கில் சிறீலங்கா இராணுவ அதிகாரி குற்றம் இழைத்தவர் என்ற தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், அவரை கைதுசெய்யுமாறும் பிரித்தானியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
இது தொடர்பில் தமக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என சிறீலங்கா அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதும், இந்த வழக்கின் வெற்றியானது தமிழ் மக்களுக்கு ஒரு மனவுறுதியை வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 

அதாவது சிறீலங்கா அரசின் நாடுகடந்த அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அஞ்சி ஓடாமல் எதிர்த்துப் போராடினால் வெற்றியீட்டலாம் என்ற தகவல் சொல்லப்பட்டுள்ளது.

 
அனைத்துலகத்தின் சட்டதிட்டங்களையும், இராஜதந்திர நகர்வுகளையும் நான்கு அறிவதன் மூலம் சிறீலங்கா அரசுக்கு தொடர்ந்து எம்மால் நெருக்கடிகளை கொடுக்கமுடியும் என்பதுடன், அனைத்துலக மட்டத்தில் சிறீலங்காவின் செயற்பாடுகளை முடக்குவதன் மூலம் நாம் ஒரு அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களையும், படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

 
இந்த வழக்கில் பிரித்தானியா அரசு எமக்காக எதனையும் செய்யவில்லை ஆனால் நாம் முன்வைத்த ஆதாரங்களை அவர்களால் நிராகரிக்க முடியவில்லை. எனினும் பல தடவைகள் சிறீலங்கா அதிகாரிகளை வழக்குகளில் இருந்து காப்பாற்றி சிறீலங்காவுக்கே அது பாதுகாப்பாக அனுப்பியிருந்தது.

 
இதனைப்போல முன்பும் பல தடவைகள் புலம்பெயர் தமிழ் மக்கள் தமது மதிநுட்பத்தால் சிங்களத்தை கலங்கடித்திருந்தனர். 2012 ஆம் ஆண்டு சிறீலங்கா அரச தரப்பு எதிர்பார்க்காத தருணத்தில் சிறீலங்கா இராணுவத்தின் பிரதம போர்க்குற்றவாளியும், ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீது தொடுக்கப்பட்ட வழக்கும், மேற்குலக கூட்டணி நாடு ஒன்றின் ஊடாக சிறீலங்கா அரசு மீது தீர்மானத்தை கொண்டுவர எடுத்த முயற்சியையும் நாம் இங்கு குறிப்பிடலாம்.

 

 

ஐ.நாவிற்கான சிறீலங்காவின் பிரதிப் பிரதிநிதியாக உள்ள ஒருவருக்கு அவரின் அலுவ-லகத்திற்கு அனுப்பப்படும் நீதிமன்ற அழைப்பாணை செல்லுபடியற்றது. எனவே தம்மீது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்ற இறுமாப்பில் மிதந்த சிறீலங்கா அரச தரப்புக்கு அமெரிக்காவின் நீதிமன்ற விதிகளில் உள்ள நுட்பங்களை ஆய்வு செய்து. சவீந்திர சில்வாவின் தனிப்பட்ட வதிவிடத்திற்கு அழைப்பாணையை அனுப்பி, அதனை மத்திய கிழக்கை சேர்ந்த அல்ஜசீரா தொலைக்காட்சி மூலம் உறுதிப்படுத்திய தமிழர் தரப்பின் மதிநுட்பம் மிகவும் வியக்கத்தக்க விடயம்.

 

 

அதனைப்போலவே சிறீலங்கா இராணுவத்தின் 57 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியும், ஜேர்மனி, சுவிற்சலாந்து மற்றும் வத்திக்கானுக்கான தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீண்டும் சுவிற்சலாந்து வந்தால் அவர் மீதான போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுவிஸ் நீதி ஆணையாளர் முன்னர் அறிவித்துள்ளதும் சிறீலங்கா அரசுக்கு பலத்த அடியாக அன்று வீழ்ந்திருந்தது.

 

 

இரண்டாவது உலகப்போரின் போது சுவிற்சலாந்து மீது ஹிட்லர் தனது படைகளை ஏவவில்லை, ஏனெனில் போரில் வெற்றிபெற்ற பின்னர் தானும் தனது படைகளும் ஓய்வெடுக்கப்போகும் அழகிய தேசத்தை சிதைத்துவிட அவர் விரும்பவில்லை. ஆனால் அன்று போர் நிறைவடைந்தபோது ஹிட்லர் உயிருடன் இல்லை. எனினும் முள்ளிவாய்க்காவில் 40,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என்ற வேறுபாடு இன்றி படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத்தின் போர்க்குற்றவாளிகளான படை அணிகளின் தளபதிகளை சிறீலங்கா அரசு திட்டமிட்டே சுவிஸ் இற்கும், நியூயோர்க்கிற்கும், லண்டனுக்கும் ஓய்வெடுக்க அனுப்பியிருந்தது.

 

 

இது தமிழ் மக்களையும், சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துவரும் மனிதஉரிமைகள் அமைப்புக்களையும் அவமதிக்கும் செயலுமாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மாற்றமடைந்த உலக விதிகளை தனக்கு சாதகமாக சிறீலங்கா அரசு பயன்படுத்திய போதும், அதில் உள்ள சில நுட்பமான சரத்துக்களை தமிழர் தரப்பும் பயன்படுத்தி சிறீலங்கா அரசின் இனவாதத்தையும், இறுமாப்பையும் சிதறடித்துவருகின்றது.

 

 

அதாவது அனைத்துலக மட்டத்தில் நாம் ஒற்றுமையாக முன்னெடுக்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதே உண்மை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒருங்கிணையும் தமிழ் மக்களின் பலமும் அதற்கு வழியை ஏற்படுத்தும்.

 

 

எனினும் சிறீலங்கா அரசு தனது தமிழின விரோதப்போக்கில் பின்வாங்குவதாகத் தெரியவில்லை. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்டு சிறீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை புறம்தள்ளி வரும் சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்தை அவமதிக்கும் வகையில் போர்க் குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை சிறீலங்காவின் இராணுவத்தளபதியாக நியமித்துள்ளது.

 
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் வைத்தியசாலைகள் மீதும் பொதுமக்கள் மீதும் மீண்டும் மீண்டும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு பெருமளவான பொதுமக்களையும், காயமடைந்த நோயாளிகளையும் படுகொலை செய்ததில் சில்வாவின் பங்கு அதிகம். அது மட்டுமல்லாது சரணடைந்த போராளிகளையும், பொதுமக்களையும் சில்வா தலைமையிலான 58 ஆவது படையணியே அதிகளவில் படுகொலை செய்திருந்தது.

 
இவரின் நியமனம் தொடர்பில் உலகின் பல தரப்புக்களிடம் இருந்து எதிர்ப்புக்கள் வெளிவந்துள்ளதுடன், அமெரிக்காவும் தனது கவலையை வெளியிட்டுள்ளது. போர்க்குற்றவாளி என ஐ.நா நம்பும் ஒருவரின் நியமனம் அமெரிக்கா மற்றும் சிறீலங்கா அரசுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களைப் பாதிக்கும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு தலைவர் எலியட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.

 
அதேசமயம் சிறீலங்காவின் புதிய இராணுவத்தளபதி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என நீதிக்கும் உண்மைக்குமான அனைத்துலக அமைப்பின் தலைவரும், மனித உரிமை வழக்கறிஞருமான ஜஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

 
அவரை கைது செய்து அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தேவையான பெருமளவான ஆதாரங்கள் உள்ளதாகவும், சிறீலங்கா அரசு குற்றம் புரிந்தவரைத் தண்டிக்காது அவரை கௌரவப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் மரணம் தொடர்பில் தமிழர் ஒருவரை ஜேர்மன் காவல்துறையினர் அண்மையில் கைது செய்துள்ளனர். இதன் பின்னனியிலும் சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையே செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
ஜேர்மனின் இந்த நடவடிக்கையானது மேற்குலகத்தின் மீது கடுமையான நம்பிக்கையீனத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. பெருமளவான ஆதாரங்களை இருந்தும்;, சிறீலங்கா படை அதிகாரிகளையும், அரச அதிகாரிகளையும் தப்பிக்கவிடும் மேற்குலக அரசுகள் தமிழ் மக்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்வது கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும்.

 
தமிழ் மக்கள் மீது நடவடிக்கை எடுத்துவரும் ஜேர்மன் அரசு ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள தனது பிரதிநிதி மூலம் சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக பரிந்துரையை மேற்கொள்ளுமா? என்பதே தமிழ் மக்களின் தற்போதைய கேள்வி
சிறீலங்கா அரசினதும், அதன் புலனாய்வுத்துறையினரினதும் அழுத்தங்களே மேற்குலகத்தின் நடவடிக்கையின் பின்னனியில் உள்ளது. தனது பாதுகாப்புச் செலவீனத்தில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் உள்ள தமது தூதரகங்களின் ஊடாக தமிழ் மக்களுக்குள் ஊடுருவும் பணிகளை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசு செலவிட்டு வருகின்றது.

 
பல சிங்களப்புலனாய்வாளர்கள் சாதாரண சிங்கள குடிமக்களைப் போலவே வெளிநாடுகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். முன்னாள் போராளிகளை குறிவைத்தல், தேசிய ஊடகம் மற்றும் ஊடகவியாளர்களை அச்சுறுத்துதல், அவதூறுபரப்புதல், தகவல் சேகரித்தல், தேசிய ஊடகங்களைக் கைப்பற்றுதல் என அனைத்துலக மட்டத்தில் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் புலம்பெயர் சமூகத்தின் செயற்பாடுகள் ஒரு தேக்கநிலையை அடைந்துள்ளதுடன், தம்மை மறுசீரமைத்துக் கொள்ளும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 
எனினும் பிரியங்கா பெர்ணான்டோ மீதான வழக்கு சிறீலங்கா புலனாய்வாளர்களினதும், அவர்களுடன் இணைந்து இயங்கும் குழுக்களினதும் நடவடிக்கைக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

 
இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரையும் சிறீலங்கா அரசுக்கு அதிக அழுத்தங்களை ஏற்படுத்தும் கூட்டமாக மாற்ற வேண்டிய கடமை உலகத் தமிழ் மக்களுக்கு உண்டு.

 

 

சிறீலங்கா அரசு மீதான அழுத்தங்களை ஏற்படுத்தி எமது உரிமைகளை பெறுவதற்கான சிறந்த தெரிவாக தமிழகத்துடன், ஈழத்தமிழ் மக்கள் ஏற்படுத்திக் கொள்ளும் வலுவான உறவு அத்தியாவசியமானது. சிறீலங்கா அரசுக்கு எதிராக போராடும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு தமிழகத்தின் உதவிகள் இன்றியமையாதது.

 

 

தாயகத்து அரசியலை பொறுத்தவரையில் ஐ.நா மனித உரிகைள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் தொடர்பாகவோ, சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவோ அல்லது எதிர்க்கட்சி என்ற முறையிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

 

 

சிங்களக் குடியேற்றம், புத்தரின் அத்துமீறிய குடியேற்றம், முன்னாள் போராளிகளை கைது செய்தல் அல்லது அச்சுறுத்துதல் என வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் மீது தற்போதும் மறைமுகமாக திட்டமிட்ட இனஅழிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. அதனைக்கூட முழுமையாக எதிர்க்கமுடியாத அடிபணிவு நிலையில் கூட்டமைப்பு உள்ளபோது, அவர்களால் எவ்வாறு அரசியல் உரிமைகள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் குறித்து பேசமுடியும்?

 

 

எனவே தான் புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழகத்தை தம்முடன் இணைத்துக்கொள்வது, தற்போதைய இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நகர்வாக அமையும் என கருதப்படுகின்றது.

 

 

நன்றி: இலக்கு மின்னிதழ் (26-02-2019)