ஆறு ஜோசியர்களை அழைத்துவந்த மகிந்தா ராஜபக்சா, அவர்களின் கணிப்புக்கு இணங்க இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரச தலைவர் தேர்தலை நடாத்தி அதில் தான் மூன்றாவது தடவை போட்டியிடுகின்றார். மகிந்தாவே வெற்றிபெறுவார் என ஆறு பேரும் கூறியதை நம்பி களமிறங்கிய மகிந்தாவுக்கு தற்போது தன்மீதும், தனது வெற்றியின் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

காலம் காலமாக சிறீலங்கா அரசில் பதவி வகித்து வந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ் மக்களை பெருமளவில் படுகொலை செய்த போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள். எனினும் பிரதானமான போர்க்குற்றவாளியாக மகிந்தா ராஜபக்சாவையே தமிழ் மக்கள் எண்ணுகின்றனர். அவரை பழி வாங்கவேண்டும் என்ற உணர்வே வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களின் மனங்களில் கொழுந்துவிட்டு எரிகின்றது.

குழந்தைகள், வயோதிபர், பெண்கள் என்று கூட பார்க்காது பல ஆயிரம் தமிழ் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்ததுடன் பல ஆயிரம் இளைஞர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து கடத்திச் சென்று படை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்தும் படுகொலை செய்திருந்தது மகிந்தா அரசு.

maithree
இந்த காயங்களை காலம் ஆற்றிவிடும் என்ற மகிந்தரின் கணக்கு தவறாகிப்போயுள்ளது. மாறாக பழிவாங்கும் உணர்வுகள் தமிழ் மனங்களில் எங்கும் வியாபித்துப்போயுள்ளது. உலகத்தின் வல்லரசுப் பேய்களுடன் சேர்ந்து நீ எம்மை அழிக்கலாம் என்றால் உன்னை அழிப்பதற்கு நான் ஏன் எந்த பேயுடனும் கூட்டுச்சேர முடியாது என்பது வன்னியில் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த பெண்மணியின் கருத்து.

தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும், நேரிடையாகவும் தமிழ் மக்களிடம் வாக்குகளை வேண்டி நிற்கும் மகிந்தா ராஜபச்சாவை நோக்கி யாழில் இருக்கும் தமிழர் ஒருவர் கேட்கும் கேள்வி ஒன்று தான். அதாவது கடத்திச் சென்ற எமது பல ஆயிரம் பிள்ளைகளை கொண்டுவந்து விட்டுவிடு நான் உனக்கு வாக்கு போடுகின்றேன் என்பது தான்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முடிவு மற்றும் முஸ்லீம் காங்கிரசின் விலகலுடன் மகிந்தாவும் அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுக்குழுக்களும் ஆட்டம் கண்டுள்ளன. தற்போது தாம் தப்பிப்பிழைப்பதற்காக அவர்கள் போராடிக்கொண்டிருக்கும் போது மூழ்கும் கப்பலில் இருந்து எலிகள் ஒடுவதுபோல அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைதெறிக்க ஓடுகின்றனர்.

ஆனால் தமிழினத்திற்காக குரல்கொடுக்கும் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், அமைப்புக்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் பல்வேறுபட்ட கருத்துக்கள் உண்டு.

இந்த தேர்தலை புறக்கணிப்பதா அல்லது வாக்குகளை எமது இராஜதந்திரத்திற்காக பயன்படுத்துவதா என்பதே தற்போதைய முதன்மையான கேள்வி?

தேர்தலை புறக்கணிப்பது என்பது முன்னர் எதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அந்த முடிவை எடுத்தபோது அதன் மூலம் ஒரு தரப்பை வீழ்த்துவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

ஆனால் 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா தேர்தலில் நின்றபோது விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு வேறு கோணத்தில் இருந்தது. அதனை அவர்கள் தமது அதிகாரபூர்வ ஏடான விடுதலைப்புலிகள் ஏட்டில் தெரிவித்தும் இருந்தனர்.

அதாவது அரசியல் கொள்கைகளும், வெளியுறவுக் கொள்கைகளும் ஏன் பாதுகாப்பு கொள்கைகளும் கூட சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுவதுண்டு. அதுவே உலக நியதி நாம் தப்பிப் பிழைப்பதற்காக வழியும் அதுவே. புறக்கணிக்கவேண்டும் என 10 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தற்போதும் அப்படியே பின்பற்ற வேண்டுமா? என்பதை காலமும் சூழ்நிலையும் தான் தீர்மானிக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மகிந்தாவை தவிர யாரையும் ஆதரிக்கலாம் அல்லது தேர்தலை புறக்கணிக்கலாமே தவிர மகிந்தாவை ஆதரிக்க முடியாது. அதற்கான காரணம் வெளிப்படையானது. அவர் கரங்களில் உள்ள தமிழ் மக்களின் குருதி இன்னும் காயவில்லை. தமிழ் மக்கள் மீதான போரை அனுமதித்த ஐக்கிய நாடுகள் சபை கூட பின்னர் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது ஐ.நாவின் பார்வையில் அவர் ஒரு போர்க்குற்றவாளி.

அது தவிர போரில் பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ் மக்களின் நிலையில் இருந்து சிங்கள தேசத்தை பார்க்கவேண்டிய தேவையும் அவர்களுக்கு உண்டு.

ஏறத்தாள ஐந்து வருடங்கள் ஆகியும் ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் தழிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத்தரவில்லை. தற்போதைய ஐ.நாவின் நகர்வு கூட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், தமிழருமான நவநீதம்பிள்ளை அவர்களின் அழுத்தம் காரணமாகவே கொண்டுவரப்பட்டுள்ளது.

போர் உக்கிரமாக இடம்பெற்றபோது சிறீலங்காவுக்கு வருகைதந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் லூயிஸ் ஆபர் கூட சிறீலங்கா அரசு மீது ஒரு அழுத்தத்தை கொண்டுவர முன்வரவில்லை. அன்று அவ்வாறு நிகழ்ந்திருந்தால் பல ஆயிரம் உயிர்களை அவர் காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால் ஐ.நாவும், இந்தியாவும் சிறீலங்காவின் போரை ஆதரித்து கைகட்டி நின்றன. எனினும் படுகொலைகள் நிகழ்ந்த பின்னர் போர்க்குற்றம் என்று கூறி விசாரைணைகளை மேற்கொள்வதாக மேற்குலகம் பேசிவருகின்றபோதும், அது தொடர்பில் அவர்களின் வேகம் நத்தை வேகத்தைவிட மந்தமாகவே உள்ளது.

எனினும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற (The International Criminal Court) உடன்பாட்டில் தான் கையெழுத்திடவிடவில்லை எனவே தன்னை தண்டிக்க முடியாது என்ற நம்பிக்கையில் மிதக்கின்றது சிறீலங்கா அரசு. அதற்கு ஆதரவான உதவிகளை இந்திய வழங்கி வருகின்றது.

கடந்த ஐம்பது வருடங்களில் உலகில் இடம்பெற்ற மிகப்பெரும் படுகொலைகளில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற படுகொலைகள் மிகவும் பாரதூரமானவை. ஆனால் அனைத்துலக சமூகமே, பிராந்திய வல்லரசுகளோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ அதனைக் கண்டுகொள்ளவில்லை.

mahi-thiruppathy
எனவே தான் சிறீலங்காவின் போர்க்குற்றங்களுக்கு எம்மால் தண்டணை வழங்கமுடியாதா? என்ற தமிழ் மக்களின் ஆதங்கம் இன்று மிகப்பெரும் ஒரு பழிவாங்கும் உணர்வாக மாற்றம் பெற்றுள்ளது. தற்போதைய அரசை பதவியில் இருந்து தூக்கி எறிவதன் மூலம் அவர்களுக்கான முதலாவது தண்டனையை வழங்கவேண்டும் என்பது தமிழ் இனத்தின் தற்போதைய நகர்வு.

எந்த பதவியை அடைவதற்காகவும், அதனை தக்கவைப்பதற்காகவும் அவர்கள் தமிழ் மக்களை பெருமளவில் படுகொலை செய்தார்களே அதனை பிடுங்குவது தான் முதலாவது நகர்வு. அதன் பின்னர் தண்டனையை அனைத்துலக சமூகம் மேற்கொள்ள வேண்டும்.

மகிந்தா ராஜபக்சா மேற்குலகத்திற்கு எதிரானவராக இருந்தால் அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் என்பதே அதன் பொருள். எதிரணி வேட்பாளர்கள் மேற்குலகத்திற்கு ஆதரவானவர்களாக இருந்தால் அவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்பதே அதன் அர்த்தம்.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தினுள் மேற்குலகத்தை அனுமதிப்பதற்கு இந்தியா விரும்பப்போவதில்லை. அதற்கான காரணம் நாம் அறிந்தவையே அதாவது இந்தியா, சீனா என்ற இரு பெரும் தேசங்கள் பல சிறிய தேசங்களாக உருமாற்றம் அடைவதே மேற்குலகத்தின் உள்நுளைவின் விளைவாகும். இது உடனடியான நடவடிக்கையாக அல்லாத போதும் நீண்டகாலத்திட்டம் என்பது அதுவே.

தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் மேற்குலகம் எம்மை கண்டுகொள்ளுமா அல்லது எம்மை அங்கீகரிக்குமா என்பதற்கான விடைகள் யாரிடமும் இல்லை. ஏனெனில் வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் என பல தேர்தல்களில் தமது நோக்கத்தையும், ஒற்றுமையையும் புலம்பெயர் சமூகம் முன்னரே தெளிவாக வெளிக்காட்டியிருந்தது.

ஆயுதப்போராட்டம், அதன் பின்னர் திம்பு பேச்சு, இந்திய இலங்கை உடன்படிக்கை, இந்திய இராணுவத்தின் வருகை, ஆயுத ஒப்படைப்பு, தியாகி திலீபன் கையில் எடுத்த அகிம்சைப்போர், விடுதலைப்புலிகள் – பிரேமதாசா அரசு பேச்சுவார்த்தை, நோர்வேயின் அனுசரணையுடனான பேச்சுவார்த்தை என்பன விடுதலைப்போர் சந்தித்த பல வடிவங்களாகும்.

kittu-kumaran
இந்த மாற்றங்கள் அனைத்தும் கால சூழ்நிலைக்கு தக்கவாறு எடுக்கப்பட்ட நகர்வுகளே தவிர போராட்ட இலட்சியத்தின் மாற்றங்கள் அல்ல.

ஆனால் தற்போது விடுதலைப்புலிகள் அற்ற நிலையில் எந்த முடிவை எடுப்பது என்ற தடுமாற்றங்களும், குழப்பங்களும் பலரிடம் உண்டு. தற்போதைய தேர்தலில் தமிழ் மக்களின் பங்கு தொடர்பான முரன்பட்ட கருத்துக்களும் அதன் விளைவாகவே ஏற்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் மக்களிடம் காணப்படும் உணர்வு ஒன்று தான். அது பழிதீர்க்கும் உணர்வு, தண்டனை வழங்கும் உணர்வு. அனைத்துலக சமூகத்தால் ஏமாற்றப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட விளைவுகளின் உள்ளக்குமுறல்கள். அனைத்துலக சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட நீதியை தற்போது தமிழ் மக்கள் கையில் எடுத்துள்ளனர்.

பெரும்பாலான தமிழ் மக்கள் சிறீலங்காவின் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் அலட்டிக்கொள்வதில்லை ஆனால் வாக்களிக்கச் செல்லும் சொற்ப தமிழ் மக்களிடமும் பழிவாங்கும் உணர்வே மேலோங்கியிருக்கும் என்பதே யதார்த்தமானது. அதன் விளைவு தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

ஈழம்ஈநியூஸ் இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.