சிறீலங்கா அரச தலைவர் தேர்தலை புறக்கணிப்பதா? அல்லது அதில் போட்டியிடும் ஒருவரை ஆதரிப்பதா? என்பது தான் தற்போது ஈழத்தமிழ் மக்கள் முன்வைக்கப்படும் கேள்வியாகவும், விவாதமாகவும் உள்ளது.

ஏறத்தாள 74 சதவிகிதமுடைய சிங்கள மக்களைக் கொண்ட சிங்கள தேசத்திற்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் மாற்றத்தை கொண்டுவரமுடியாது அல்லது அதற்கு பெறுமதி இருக்கப்போவதில்லை என்பது ஒரு சாராரின் கருத்து.

சிங்கள இனவாதிகள் யார் வந்தாலும் அவர்களால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பது மறு தரப்பின் வாதம். தமிழரின் தேசம் வேறுபட்டது சிங்கள தேசத்தில் எமக்கு என்னவேலை? எனவே தேர்தலை புறக்கணிப்போம் என்பது இன்னொரு தரப்பின் கருத்து.

ஆனால் சிங்கள இனத்திற்குள் ஏற்படப்போகும் மோதல்களை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையே நாம் இங்கு முதன்மைப்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய யதார்த்தமாகும். இவ்வாறான ஒரு நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிறீலங்கா அரச தலைவருக்கான தேர்தலில் சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவை வழங்கவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

maithee
சிங்கள தேசத்தின் இரு இனவாதிகளுக்கு இடையிலான மோதல்களை வலுப்படுத்தி அதில் நாம் வெற்றியும் கண்டோம். போர் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் கூட போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதற்கான நகர்வை ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் ஒரு அங்குலம் கூட மேற்கொள்ளவில்லை. பல விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன அதன் மூலம் காலமும் இழுத்தடிக்கப்படுகின்றது என்பது தான் யதார்த்தம். உண்மை கசப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில் தான் எமது அடுத்த கட்ட நகர்வை சரியான திசையில் எடுத்துவைக்க முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கையும் கூட எந்த நேரத்தில் எந்த வல்லரசு நாட்டால் முறியடிக்கப்பட்டு முற்றாக முடக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. இனப்பிரச்சனை என்ற பதத்தை தவிர்த்துவிட்டு போர்க்குற்றவாளிகளை குறிவைக்கும் நடவடிக்கையாகவே ஐ.நாவின் நடவடிக்கையும், மேற்குலகத்தின் நகர்வுகளும் உள்ளன. ஆனால் அதனை மேற்கொள்ள எம்மால் முடியும். அதாவது தண்டனை என்பதை நாம் இந்த தேர்தலின் மூலம் வழங்க முடியும்.

2010 ஆம் ஆண்டு பொன்சேக்காவை ஆதரிப்பது என்ற முடிவு சிங்கள தேசத்தின் இரு போர்க்குற்றவாளிகளுக்குள் ஒருவரை அழிப்தற்காக மேற்கொள்ளப்பட்ட முடிவு. சிங்கள தேசம் எம்மை பயன்படுத்தும் போது நாம் ஏன் எமது இராஜதந்திரத்தை சிங்கள தேசத்திற்கு எதிராக பயன்படுத்த முடியாது.

தான் போரை வெற்றிகாரமாக முடிவுக்கு கொண்டுவந்ததாக மகிந்த மிகப்பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தபோதும் பலத்த மோதல்கள் மற்றும் தில்லுமுல்லுகளுக்கு மத்தியிலேயே மகிந்தவால் மயிரிழையில் வெற்றியீட்ட முடிந்தது.

தமிழ் மக்களை பெருமளவில் படுகொலை செய்து விடுதலைப்புலிகளை முற்றாக அழித்த தன்னை சிங்கள மக்கள் ஒரு துட்டகெமுனுவாகவே பார்ப்பார்கள் எனவும், நீண்ட காலத்திற்கு தானே சிங்களத்தின் தலைவன் என்ற இறுமாப்பில் தனது குடும்பத்தையே அரசாங்கத்திற்குள் களமிறக்கிய மகிந்தாவுக்கு எதிராக அவரின் உடைவாளை உருவி தாக்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது அதனை நாம் பயன்படுத்திக் கொண்டோம்.

விழ்ந்தால் மகிந்தாவின் தலை அல்லது அவரின் உடைவாள் என்ற திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த முடிவில் எது அழிந்தாலும் எமக்கு இலாபம் தான். இறுதியில் வாள் உடைந்தது. சரத்பொன்சேக்கா மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையினால் கூட இன்றுவரை வழங்க முடியாத தண்டனையை அந்த தேர்தல் தோல்வி அவருக்கு வழங்கியிருந்தது. பதவி பறிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடும் தகுதி பறிக்கப்பட்டு வெள்ளைக்கச்சட்டையுடன் சில வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பொன்சேக்கா தான் எப்போதும் கொல்லப்படலாம் என்ற அச்சத்துடனே மண்டியிட்டு வாழ்ந்திருந்தார்.

SF in Prison_CI
தற்போதும் அவர் தான் அனுபவித்த துன்பங்களை மறக்கவில்லை என்பதுடன் பழிவாங்கும் எண்ணத்தையும் அவர் கைவிடவில்லை. எனவே தான் எதிரணி வெற்றிபெற்றால் தனக்கு கோத்தபாயாவின் தற்போதைய பதவி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எனவே விரும்பியோ விரும்பாமலோ தோல்வியடையும் அணி பேரழிவைச் சந்திக்கும் என்பது சிறீலங்கா அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கம். எதிரணி வெற்றிபெற்றால் தனது குடும்பத்தின் அரசியல் அத்திவாரம் முற்றாக தகர்க்கப்படும் என்பது மகிந்தாவுக்கு நன்கு தெரியும்.

தமிழ் மக்கள் மீதான மகிந்த அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான தண்டனைகளை எதிரணி முன்னெடுக்கப்போவதில்லை என்பது ஒருபுறமிருக்க லசந்தா விக்கிரமதுங்காவின் கொலை உட்பட தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த நடவடிக்கைகளுக்கான சந்தர்ப்பம் எதிரணிவசம் உள்ளது.

அமெரிக்காவுக்கோ அல்லது வேறு ஒரு நாட்டுக்கோ தப்பியோடுவது என்ற மகிந்தாவின் திட்டம் என்பது எண்ணையில் இருந்து தப்பி நெருப்பில் விழுந்த கதையாகவே மாறுமே தவிர வேறு எதுவுமில்லை. ஏனெனில் சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைகளை புலம்பெயர் தமிழ் சமூகம் திடமாக முன்னெடுக்குமாக இருந்தால் மகிந்தா அரசு தப்பமுடியாது.

இது மகிந்தாவுக்கும் நன்கு தெரியும், எனவே தான் திருப்பதியில் யாகம் வளர்த்த மகிந்தா பின்னர் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் வாக்குகளை நோக்கி தனது கவனத்தை திசைதிருப்பியுள்ளார்.

ஓருபுறம் தனது பிரச்சாரத்தை மகிந்தா தீவிரப்படுத்தும் அதேசமயம், தோல்வியைச் சந்தித்தால் ஒரு இராணுவப்புரட்சி மூலம் பதவியை கைப்பற்றும் நடவடிக்கையை அவரின் சகோதரர் கோத்தபாயா மேற்கொண்டு வருகின்றார். அதற்காகவே கஜபா அணி தயார்படுத்தப்படுவதுடன், படை அணிகளும் சிங்கள தேசத்தில் நகர்த்தப்படுகின்றன.

gota
இந்த தேர்தல் என்பது தற்போதைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கு வாழ்வா அல்லது சாவா என்ற போராட்டம். எனவே தான் அரசியல் யாப்பை மாற்றி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் அரச தலைவர் பதவியை வகிக்க முடியும் என்ற 18 ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டுவந்திருந்தார்.

எனவே மகிந்தா வெற்றிபெற்றால் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா உட்பட தென்னிலங்கையின் போர்க்குற்றவாளிகள் பலர் பேரழிவைச் சந்திப்பார்கள். எதிராணி வெற்றிபெற்றால் தற்போதைய போர்க்குற்றவாளிகளின் கூட்டம் அழிவைச் சந்திக்கும். எனவே தமிழ் மக்களுக்கு இழப்பதற்கு இங்கு ஒன்றுமில்லை.

இராணுவ ஆட்சி என்பது சிங்கள இனம் சந்திக்கப்போகும் மூன்றாம் கட்ட வன்முறைக்கான தெரிவாகவே இருக்கும் என்பதுடன் மூன்றாவது தடவை மகிந்தா ராஜபக்சா பதவியேற்றால் அது சர்வாதிகார ஆட்சி முறைக்குள் அடக்கப்படும். அவரை அகற்றுவதற்கான விலையையும் சிங்கள தேசமே செலுத்தவேண்டும்.

ஆனால் போர்க்குற்றவாளிகளைக் கொண்ட இரு குழுக்களில் எந்த குழுவை அழிப்பது என்ற முடிவை தமிழ் மக்கள் எடுக்க முடியும். இதன் அடிப்படையில் நாம் முடிவு எடுப்பது தான் எம்மிடம் உள்ள தெரிவாகும்.

தேர்தவை புறக்கணிப்பது என்பதும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவுக்கு ஆதரவு வழங்குவதாகவே முடியும். இந்த தேர்தலில் பங்கெடுப்பது என்பது சிறீலங்காவின் ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்வதாகவே அமையும் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கு சென்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டே அங்கு சென்று வருகின்றனர்.

தமிழ் மக்களின் நன்மை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு கூட சிறீலங்கா அரசினதும், இந்திய மத்திய அரசினதும் அனுமதிக்காக காத்துக்கிடக்கின்றனர்.

எனவே சிங்கள தேசத்தை தண்டிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக தமிழ் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்த முடியும்.

mahin
மகிந்தா ராஜபக்சா இருக்கும் வரையில் தான் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக அனைத்துலக சமூகம் பேசும் அவர் பதவி இழந்தால் அந்த பேச்சுக்கள் கலைந்துபோகும் அல்லது புதிய அரசு அதனை கலைத்துவிடும் என்ற கருத்துக்களும் உண்டு.

இனப்பிரச்சனை என்பது மகிந்த ராஜபக்சா என்ற ஒருவரை கொண்டு பின்னப்பட்டதல்ல, காலம் காலமாக ஆட்சியில் இருந்த சிங்கள அரசுகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை மேற்கொண்டவையே. எனவே மகிந்த ராஜபக்சா பதவியில் இருந்தால் மட்டுமே உலகம் எமது இனப்பிரச்சனை தொடர்பில் பேசும் என்று நாம் கருதினால் அவரை மேற்குலகம் எதாவது ஒரு வழியில் பதவியில் இருந்து அகற்றும் போது எமது இனப்பிரச்சனையும் காணாமல்போய்விடும்.

எனவே சிங்கள அரசியல்வாதிகள் எவ்வாறு தமிழ் மக்களைப் பயன்படுத்திக் கொண்டார்களோ அதனைப்போல சிங்கள அரசியல்வாதிகளை பயன்படுத்தி அவர்களுக்கான தண்டனையை வழங்கும் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடலாகாது. யாருக்கு தண்டனையை வழங்கப்போகின்றோம் என்பது தான் இங்கு முக்கியமானது.

ஈழம்ஈநியூஸ் இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.