ஆகஸ்ட் 5ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள சிறீலங்கா பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பெரிய வாக்குசீட்டைக் கொண்டிருக்கும் பெருமையை அம்பாறை மாவட்டம் தட்டிச் சென்றுள்ளது. அதன் வாக்குச்சீட்டு 22 அங்குல நீளமும் 10.5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கப்போகிறது. 7 பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்ட அம்பாறையில் 20 அரசியல் கட்சிகளும் 34 சுயேற்சைக் குழுக்களுமாக மொத்தம் 54 குழுக்கள் nhபாட்டிக்களத்தில் உள்ளமையே இதற்கான காரணமாகும். இவ்வளவு அதிகரித்த எண்ணிக்கையான குழுக்கள் உள்ள முன்னிலை மாவட்டமே அம்பாறை தான்.

அடுத்து கம்பகா மாவட்ட வாக்குச்சீட்டு 21 அங்குல நீளம் கொண்டதாக அமைந்துள்ளதாம். 18 பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்ட மக்கள் எண்ணிக்கையில் அதிகரித்த மக்கள் வாழும் இம்மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகள் 18 சுயேற்சைக்குழுக்கள் என 33 குழுக்கள் போட்டிக்களத்தில் உள்ளன.

அடுத்து யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்ட வாக்குச்சீட்டுகள் 20 அங்குல நீளம் கொண்டவையாக அமையவுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 பாராளுமன்ற ஆசனங்களும் புத்தளத்தில் 8 பாராளுமன்ற ஆசனங்களும் உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 19 அரசியல் கட்சிகளும் 14 சுயேற்சைக்குழுக்களும் என 33 குழுக்கள் பொட்டிக்களத்தில் உள்ளன. புத்தளத்தில் 13 அரசியல் கட்சிகளும் 19 சுயேற்சைக் குழுக்களும் என 32 குழுக்கள் போட்டியிடுகின்றன.

இதேவேளை பாராளுமன்ற ஆசனங்கள் குறைந்த தமிழ் மாவட்டங்களிலேயே அதிக போட்டிக்குழுக்களும் உண்டு. 25 மாவட்டங்களில் அதிகுறைந்த பாராளுமன்ற ஆசனங்களான நான்கைக் கொண்டது தான் திருகோணமலை மாவட்டம். அடுத்து 5 பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்ட 4 மாவட்டங்களில் ஒன்று தான் மட்டக்களப்பு மாவட்டம். அடுத்து 6 பாராளுமன்ற ஆசனங்களுடன் வன்னி மாவட்டம் உண்டு. அடுத்து 7 பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டுள்ள 3 மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் அம்பாறையு;ம் உண்டு. ஆகவே 225 பாராளுமன்ற ஆசனங்களிற்கு தேர்தல் மூலம் தெரிவாகும் 196 பேரில் 29 பேர் மட்டுமே வடக்குக்கிழக்கின் 5 மாவட்டங்களில் இருந்து தெரிவாவர்.

இதில் அம்பாறை மாவட்டம் 20 அரசியல்கட்சிகள் 34 சுயேற்சைக்குழுக்கள் என 54 குழுக்களுடன் 25 மாவட்டங்களில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து 17 அரசியல்க்கட்சிகள் 28 சுயேற்சைக்குழுக்கள் என 45 குழுக்களுடன் வன்னி மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்தே அதிகரித்த 19 பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டுள்ள கொழும்பு மாவட்டம் 16 அரசியல்க்கட்சிகள் 26 சுயேற்சைக்குழுக்கள் என 42 குழுக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்து 16 அரசியல்க்கட்சிகள் 22 சுயேற்சைக்குழுக்கள் என 38 குழுக்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளது மட்டக்களப்பு மாவட்டம்.

19 அரசியல்க்கட்சிகள் 14 சுயேற்சைக்குழுக்கள் என 33 குழுக்களுடன் கம்பகா மாவட்டத்துடன் 5ஆவது இடத்தில் உள்ளது யாழ்ப்பாணம் மாவட்டம். திருகோணமலை மாவட்டத்தில் 13 அரசியல்க்கட்சிகளும் 14 சுயேற்சைக்குழுக்களும் என 27 குழுக்கள் போட்டிக்களத்தில் உள்ளன. ஆகமொத்தத்தில் பாராளுமன்ற ஆசனங்களில் இறுதி நிலையில் உள்ள தமிழ்மாவட்டங்கள் தேர்தல் போட்டிக்குழுக்கள் விடயத்தில் முதன்மை மாவட்டங்கள் ஆனது எப்படி? என்பதை ஒவ்வொரு மாவட்டமான ஆய்வில் பின்னர் பார்ப்போம். இவை வெறும் தரவுகள் சார்ந்த பகிர்வுகள் மட்டுமே. இப்பாராளுமன்றத் தேர்தலும் அதில் தமிழர் வகிபாகமும் இத்தேர்தலின் பின்னரான சிறீலங்காவில் தமிழர் சவால்களும் என தனியாகப் பார்ப்போம்..

நன்றி: நேரு குணரட்னம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here