கடந்த இரு மாதங்களாக சிறீலங்கா அரசியலில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றிருந்தது. அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம்.

 
அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சீனாவின் முக்கிய அதிகாரிகளை கொழும்பில் சந்தித்திருந்தனர். சீனாவும் இந்தியாவும் எதிர் எதிர் அணிக்குச் செல்லவேண்டிய காலம் நெருங்கிவரும் இந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

 
அதன் தொடர்ச்சியாக சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா மற்றும் அவரின் மகன் நமால் ராஜபக்சா உட்பட பலர் இந்தியா சென்றதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரை சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பை தமிழின விரோதியான சுப்பிரமணியன் சுவாமி ஏற்பாடு செய்திருந்தார்.

 
இந்த பயணத்தின் பின்னர் சிறீங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதாவது இந்திய உளவுத்துறை தன்னை படுகொலை செய்யத்திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

 
ஆனால் இந்த தகவலையும் இந்திய ஊடகமான த இந்து தான் முதலில் வெளியிட்டிருந்தது. இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதுடன், சிறீலங்கா விவகாரத்தில் இந்தியாவின் நேரிடையான தலையிடும் வெளிக்கொண்டுவரப்பட்டது.

 

ஆனால் இந்தியாவின் இந்த நகர்வு தொடர்பான மேலதிக வாதப்பிரதிவாதங்கள் அனைத்துலக மட்டத்தில் எழுவதற்கு முன்னதாகவே இந்தியா வேகமாக தனது காயை நகர்த்தியுள்ளது.

 
அதாவது 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் வாக்கு வங்கியால் பதவியில் இருந்து வெளியேறிய மகிந்தா மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

 
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்தா தனது சகோதரர் கோத்தபாயாவின் உதவியுடன் இராணுவப் புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டபோதும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

 
ஆனால் மீண்டும் மகிந்தாவின் வரவின் மூலம், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பதென்பது முடியாத காரியம் என்ற செய்தி மேற்குலகத்திற்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் ஆதரவு அணியைச் சேர்ந்த மகிந்தாவை இந்தியா ஆதரிப்பதற்காக காரணம் என்ன?

 
தமிழகத்தின் மீதான முற்றுகையின் ஒரு முயற்சி தான் மகிந்தாவின் மீள்வரவு, தனது வட முனையில் இருந்து தமிழகத்தை காண்காணிப்பது என்பது தற்போது இந்தியாவுக்கு இயலாத காரியமாக மாற்றம் பெற்றுள்ளது. எனவே தான் அண்மையான தளமாக சிறீலங்காவை அது மாற்றியுள்ளது.

 
அதாவது சீனாவுடன் கூட்டுச் சேர்ந்தாவது தமிழகத்தின் எழுச்சியையும், தமிழ் இனத்தையும் அழிப்பதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது. ஆனால் இந்தியாவின் இந்த முயற்சியும் 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்திய இலங்கை ஒப்பந்தம் போலவே தோல்வியில் தான் முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 
ஏனெனில் தமிழ் இனத்தின் இயங்குதளம் என்பது அனைத்துலக மட்டத்தில் வியாபித்துள்ளது. தமிழகம் எமது பிரதான தளமாக இருக்கும் போதும் அதற்கான ஆதரவுகளை உலகத்தமிழினம் வழங்க முடியும்.

 
ஆனால் தற்போதைய சிறீலங்கா அரச தலைவரின் வலுவிழந்த அதிகாரத்தின் மூலம் பின்கதவால் கொண்டுவரப்பட்ட மகிந்த ராஜபக்சாவின் எதிர்காலம் என்பது இலகுவனதாக இருக்கப்போவதில்லை. அவர் தனது பெரும்பான்மையை எதிர்வரும் வாரம் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு பல பேரம் பேசும் நடவடிக்கைகள் இடம்பெற்றாலும், சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுகளும் அவருக்கு தற்போது முக்கியமானது.

 
எனவே சிறுபான்மைக் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுடன், அதனால் சிங்கள தேசத்தில் ஏற்படும் எதிர்வினைகளையும் சந்திக்கவேண்டும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் முன்னரைப்போல போரைக் காட்டி வாக்குகளை சேகரிக்கும் சந்தர்ப்பம் அவரிடம் இல்லை.

 
அதாவது பூகோள அரசியலில் சிக்குண்ட சிங்களம் தன்னை சுற்றிய வலைகளை மேலும் இறுக்கியே வருகின்றது. இந்திய மற்றும் சீனாவின் இந்த நகர்வுகள் மேற்குலகத்தை முற்றாகப் புறம்தள்ளியுளளதுடன், அவர்கள் தமக்கான ஒரு பிரிவினரை தேடும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. மகிந்தாவின் மீள் வரவு அமெரிக்காவுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை, மாறாக தமிழ் மக்களும் அமெரிக்காவை நம்பும் நிலையில் தற்போது இல்லை.

 

அதாவது போர் நிறைவடைந்து ஏறத்தாள 9 வருடங்களாக மேகுலகத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ளதாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர். எனவே மேற்குலகம் காத்திரமான ஒரு செயற்திட்டத்தின் மூலம் தான் தமிழர் தரப்பை தன்பக்கம் ஈர்க்க முடியும்.

 
ஆனால் தற்போது எல்லோரினதும் கவனமும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மீது தான் உள்ளது. அதாவது சிங்களம் எதிர்கொண்டுள்ள இந்த சிக்கலான நிலையை தமிழர் தரப்பு எவ்வாறு தனக்கு சதகமாக பயன்படுத்தப்போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.

 
சந்தர்ப்பத்தை தவறவிடாது பேரம் பேசும் அரசியல் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவேண்டும். அதற்கு சமாந்தரமாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனைத்துலக மட்டத்தில் தமது இராஜதந்திர உறவுகளை ஏறபடுத்தி இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் அரசியல் விதியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழ் இனத்தை மாற்றவேண்டும்.

 
ஈழம் ஈ நியூஸ்.