common-KamaleshSharmaசிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை கருத்தில் எடுக்காது சிறீலங்கா அரசுக்கு சார்பாக செயற்படும் இந்தியாவை சேர்ந்த, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா மீது அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்மா மௌனம் சாதிப்பது மிகவும் வெக்கப்பட வேண்டிய விடயம் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை என்பன தெரிவித்துள்ளன.

இதனிடையே, மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்கள் குறித்து, ஊடகவியலாளர் பரணி கிருஷ்ணரஜனி முகநூலில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:

அனைத்துலக மன்னிப்பு சபையை தொடர்ந்து மனித உரிமைகள் கண்காணிப்பகமும் மிக முக்கியமான ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து பொதுநலவாய அமைப்பு உதாசீனப் போக்கை கடைபிடிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீம்பிள்ளை அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் அது குறித்து பொதுநலவாய நாடுகள் தலைவர் அமைப்பு கவனம் செலுத்த வேண்டுமெனவும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் எனறும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்படின் பொதுநலவாய அமைப்பின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரம் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு உள்ளதாகவும் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்..

இவற்றை விட முக்கியமானது பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகள் புறக்கணித்து விட்டு விமர்சனங்களில் இருந்து அந்த நாட்டை பாதுகாப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது…

இது இந்தியாவின் அப்பட்டமான தமிழின துரோகம். இன அழிப்புக்கு வெள்ளையடிக்க இந்தியா கமலேஸ் சர்மாவை பயன்படுத்துகிறது. இன்னும் நாம் இந்தியாவை நம்ப வேண்டும் என்று எமக்குள்ளேயே உளறித்தொலைப்பவர்களின் பார்வைக்கு இது.

மக்கள் போராட்டத்தை விரிவுபடுத்துவதும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுடன் கைகோர்த்து செயற்படுவதுமே எமது நீதியை நோக்கிய பயணமாகும். அதை விடுத்து தேர்தல் மோசடிகளுக்குள்ளும் அன்னிய நிகழ்ச்சி நிரல்களுக்குள் இயங்குவதும் எம்மை விடுவிக்காது. மாறாக இன அழிப்பை விரிவுபடுத்தவே உதவும்.

சிந்திப்போம்.