ஆளும் பாஜக அரசு எப்போதும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு ஆதரவாக செயல்படாது என்பது அனைவரும் அறிந்ததே. திபெத் நாட்டை சொந்தம் கொண்டாடும் சீனாவின் அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இந்த வேளையில் இந்திய அரசு திபெத் மக்கள் எங்கு போராட்டம் நடத்தினாலும் அவர்களை கைது செய்து வருகிறது. சீன அதிபருக்கு எதிராக எப்படியாவது ஒரு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி விட வேண்டும் என திபெத்திய விடுதலை போராளிகள் முயன்றனர். அவர்களது ஜனநாயக உரிமையை முற்றிலும் மறுத்து வருகிறது இந்திய அரசு. சீன அதிபரின் கண்களில் திபத்தியர்கள் தென்படாத வண்ணம் பார்த்துக் கொண்டது இந்திய அரசு. திபெத்தியர்கள் மட்டுமின்றி திபெத்தியர்கள் போல உருவ ஒற்றுமை கொண்ட வடகிழக்கு மாநில இந்தியர்களைக் கூட சீன அதிபரின் கண்களுக்கு காட்டவில்லை இந்திய அரசு. இதை விட ஒரு கேவலமான செயல் வேறொன்றும் இல்லை.

thipet-india2
இந்நிலையில் இன்று டெல்லியில் சீன அதிபர் தங்கி இருந்த தாஜ் விடுதிக்கு எதிரில் உள்ள ஒரு கோபுரத்தில் திபெத்திய போராளிகள் மேலேறி திபெத் நாட்டை சீனா விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதப்பட்ட மாபெரும் பதாகை ஒன்றை தொங்கவிட்டனர். மேலும் காவல்துறை கோபுரத்தின் கீழ்த் தளம் வழியாக நுழைய முடியாத படி தங்களைத் தாங்களே கதவோடு இணைத்து பூட்டும் போட்டுக் கொண்டனர். இதை சற்றும் எதிர்பாராத டெல்லி காவல்துறை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தது. முடிவில் பூட்டு போடப்பட்ட சங்கிலியை அறுத்து கோபுரத்தின் கீழ் தளத்தில் நுழைந்தது காவல்துறை . நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மேலே உள்ள திபெத்திய போராளிகளையும் , அவர்கள் கொடி மற்றும் பதாதைகளை அப்புறப்படுத்தியது காவல்துறை.

இத்தனை கெடுபிடிகள் நடுவே வீரம் செறிந்த போராட்டம் நடத்திய திபெத்திய விடுதலைப் போராளிகளுக்கு நம் பாராட்டுகள். இந்திய நாடு திபெத் மக்களாக இருந்தாலும் சரி, ஈழ மக்களாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்காமல் அடக்கியாளும் அரசுகளின் பக்கமே நிற்கிறது. திபெத்திய மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு இந்திய அரசு மிகப் பெரிய அடக்குமுறையை பயன்படுத்தவில்லை.

thipet-india1
திபெத்திய மக்களுக்கு பல நல்ல நலத் திட்டங்களை இந்திய அரசு இதுவரை செய்து வருகிறது. திபெத்திய மக்களின் அரசியல் உரிமையை அங்கீகரித்து தலாய் லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. ஆனால் இதே இந்திய அரசு ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது, போராட்டங்களை நசுக்குகிறது. ஈழத்தை அடக்கி ஆளும் சிங்கள அரசு அதிபருக்கு முழு ஆதரவு வழங்குகிறது. தமிழர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிக்கிறது . போராளிகள் மீது பொய் வழக்குகள் போடுகிறது. திபெத்திய மக்களுக்கு வழங்கும் குறைந்த பட்ச ஆதரவைக் கூட ஈழப் பிரச்சனையில் தமிழர்களுக்கு வழங்குவதில்லை இந்திய அரசு.

இருப்பினும் திபெத் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றி அடைய தமிழர்கள் நாம் அவர்களுக்கு துணை நிற்போம். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒற்றுமையுடன் ஆதிக்க அரசுகளை எதிர்ப்போம். வெல்லட்டும் தமிழீழ, திபெத்திய தேசிய இன விடுதலை போராட்டங்கள்.

இராச்குமார் பழனிச்சாமி.