tsunami-98ஆழிப்பேரலை(சுனாமி )அனர்த்தம் இடம்பெற்ற பிற்பாடு வடமராட்சிப் பகுதிக்கு வந்த மகிந்த ராஜபக்ச அவர்களை மக்கள் விரட்டியடித்ததாக ஒரு செய்தி பரவலாக அடிபட்டது. அதன் பிற்பாடு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்கா அவர்களிற்கு எதிர்ப்பிருக்கவில்லை. ரணிலுடன் டி.எம்.சுவாமிநாதன் அவர்களும் காலம் சென்ற ஜயலத் ஜயவர்த்தன அவர்களும் வருகை தந்திருந்தனர்.

 

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர், ஆழிப்பேரலை அழிவிலிருந்து மீண்டெழுவதற்காக அமைக்கப்பட்ட கூட்டுச் செயலணியின் பணியகத்திற்கு ரணில் தலைமையிலான குழு விஜயம் செய்தது.

 

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த யாழ் மாவட்டத்திற்கான பணியகத்தில், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அன்றைய அரசாங்க அதிபர் கே.கணேஸ் அவர்களும், விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அன்றைய யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களும் (தமிழர் தாயகத்தில் அமைக்கப்பட்ட குறித்த தலைமைச் செயலணிக்கான விடுதலைப் புலிகளின் முதன்மைப் பொறுப்பாளராக தூயவன் அவர்களும், வடமராட்சிக்கான பொறுப்பாளராக பாலையா அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்), சிவில் சமூகப் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

 

இந்த செயலணியில் உத்தியோகபூர்வ கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ரணில் பதிலளித்தார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான உதவிகள் தாமதமடைவதோடு, இதுவரை போதியளவில் கிடைக்கவில்லை.

 

இந்த குறையை நிவர்த்தி செய்யும் முகமாக, குறிப்பிட்ட காலத்திற்கு தன்னிலும் மனிதாபிமான அடிப்படையில் காங்கேசன்துறை துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உங்களால் செய்ய முடியுமா என என்னால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இது ஒரு நல்ல கேள்வி. இது முக்கியமானதொரு கேள்வி. கொழும்பு திரும்பியதும் நான் இதனை உடனடியாக நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவேன்” என வாக்குறுதி தந்துவிட்டுச் சென்றார் ரணில்.

 

ஆனால், நாட்கள் வாரங்களாகி, வாராங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்கள் ஆன போதும், ரணில் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரவில்லை. இது போன்று அன்றைய சந்திப்பில் வழங்கிய வாக்குறுதிகள் எதுவுமே ரணில் ஊடாக நிறைவேற்றப்படவில்லை.

 

சாதாரண ஒரு வாக்குறுதியையே நிறைவேற்றாத ரணில்தான் இன்று தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வழிசெய்வார் என்ற எதிர்பார்ப்பு ஊட்டப்பட்டுள்ளது.