vallipuranathanசுன்னாகத்தில் நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் அவர்களுக்கு யாழ் மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதன் விபரம் வருமாறு.

 

சுன்னாகத்தில் நீர் மாசடைதல் தொடர்பான பிரச்சனை:

 

யாழ்ப்பாண மருத்துவர் சங்கத்தின் தலைவர் மற்றும் விசேட புலமையாளர் (சமூக மருத்துவம்) என்கின்ற காரணங்களால் இந்த விடயம் தொடர்பாக நான் இதனை தங்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதுகின்றேன்.

 

2014 கார்த்திகை மாதத்தில் இந்தப் பிரச்சனை எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட பொழுது நான் கொழும்பில் சுகாதார அமைச்சுடன் தொடர்பு கொண்டு சந்தேகத்துக்கு இடமான கிணறுகளிலிருந்து மாதிரி நீரினை அரச பகுப்பாளருக்கு அனுப்பப்படுவதற்காக சேகரிக்க ஒழுங்கு செய்தேன்.

 

அதற்கு மேலாக சகல தரப்பினர்களுடனும் ஆய்வாளர்களுடனும் யாழ்ப்பாண சமூகத்தினை மிக மோசமாக பாதிக்கும் இந்த விடயம் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு கருத்தரங்கினை 2014 மார்கழியில் யாழ்ப்பாண மருத்துவர் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தின் போது ஓழுங்கு செய்தேன்.

 

இந்தக் கருத்தரங்கில் அநேக மருத்து புலமையாளர்களும், தொழிலநுட்ப வல்லுனர்களும் பங்குபற்றினர். இந்தக் கருத்தரங்கு நிலத்தடி நீரில் கழிவோயில் பிரச்சனையின் பெருக்கத்தினையும் வளர்ச்சியையும் பகிரங்கப்படுத்தியது.

 

அதே வேளையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச சபையின் பிராந்திய ஆய்வகம் 2012 முதல் 2014 வரையான காலப்பகுதியில் நிலக்கீழ் நீர் தொடர்பான தரம் பற்றிய விரவான ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டது.

 

அவ்வறிக்கை சுன்னாகத்தைச் சூழவுள்ள நில படிமங்களில் அமைந்த கிணறுகளில் சுன்னாக எரிபொருள் மின் உற்பத்தி நிலையம், பெற்றோலிய கழிவுகளை மட்டுமன்றி உலோக (ஈய) நச்சுப் பொருட்களையும் நிலக்கீழ் நீருடன் சேர்த்துள்ளமையை உறுதிப்படுத்தியது தொடர்ந்து என்னாலும் ஏனைய ஆய்வாளரகளாலும் (விபரம் இணைக்கப்பட்டுள்ளது) தொற்று நோய் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த மின் உற்பத்தி இயந்திரப்பிரதேசம் யாவும் குறிப்பிடப்பட்ட மின் உற்பத்தி இயந்திரப் பாவனைக் கழிவுப் பொருட்களாலேயே ஏற்பட்டமையை உறுதிப்படுத்தியது.

 

மேலும் சுன்னாகப் பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போன்ற ஏனைய காரணங்களாலேயே நிலக்கீழ் நீர் மாசடைந்ததாக கூறப்படும் மாற்றுக் கருத்துக்களையும் இல்லாதொழித்தது.

 

அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைக்காக காத்திருக்கும் இவ்வேளையில் தங்கள் கவனத்திற்கும் அவசரமான நடவடிக்கைகளுக்குமாக பின்வரும் தீர்மானங்களைத் தங்களுக்கு நான் சமர்ப்பிக்கின்றேன்.

 

1. நச்சு உற்பத்திக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ள இடங்கள் இனங்காணப்பட்டு அவற்றைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான ஆரம்ப விரைவான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

 

2012 இல் சுன்னாக இலங்கை மின்சார சபை பிரதேசத்தில காணப்பட்ட பாரிய பெற்றோலிய கழிவுகள் கொண்ட குளம் தற்போது எவ்வித அடையாளமுமின்றி அழிக்கப்பட்டடமைக்கு போதிய சான்றுகள் உண்டு. இலங்கை மின்சாரச் சபையும் அதன் உப ஒப்பந்தக்காரர்களும் இந்த பெற்றோலியக் கழிவுக் குளம் எவ்வாறு மறைந்ததெனவும் எவ்வாறு அக் கழிவுகள் இநதப் பிரதேசத்தில் தொடர்ந்தும் பரவிக் கொண்டிருக்கின்றதெனவும் விளக்கமளித்தல் வேண்டும்.

 

2. நச்சுத் தன்மை காணப்படுவதற்கான கிணறுகள் யாவும் முத்திரையிடப்படல் வேண்டும். யாழ்ப்பாண தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆய்வு செய்த 50 கிணறுகளில் நான்கு கிணறுகள் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க அளவுக்கு மீறிய அளவில நச்சுத் தன்மையைக் கொண்டுள்ளதாக கூறியுள்ளது.

 

இந்தக் கிணறுகள் உடனடியாக இனங்காணப்பட்டு பாவனையிலிருந்து விலக்கப்படுவதற்காக முத்திரையிடப்படல் வேண்டும். இந்தக் கிணறுகள் விவசாயத் தேவைகளுக்குப் பாவிக்கப்பட்டாலும் உணவுச் சங்கிலித் தொடர் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்துண்டாகும். அத்துடன் பாதிப்புடைய பிரதேசத்தின் அனைத்துக் கிணறுகளும் பரிசோதிக்கப்பட்டு நச்சு மற்றும் உலோகக் கலப்பு உண்டாவென அறிக்ககையிடப்படல் வேண்டும்.

 

3. பாதிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள சகல மக்களுக்கும் போதுமான அளவு நீர் (ஆளுக்கு 3 முதல் 4 லீற்றர் குடிநீர்த் தேவைக்கு) வழங்கப்படல் வேண்டும்.

 

4. பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் நீர் வடிகட்டிகள் பாவிக்கப்படல் வேண்டும். மாசடைந்த பிரதேசங்கள் அனைத்துக்கும் நீர் வழங்கல் நடைமுறைச் சாத்தியமன்று எனவும் நீர் வழங்கல் சபையால் வழங்கப்படும் நீரில் எண்ணை நச்சு உள்ளதெனவும் சுட்டிக் காட்டப்படுகின்றது. வீட்டுப் பாவனைக்காக மலிவான காபன் செயலாற்றும் வடிகட்டிகள் பாவனை செய்யப்படுதனால் ஓரளவு நச்சுத்தன்மையை குறைக்கலாம்.

 

5. விஞ்ஞான மற்றும் அறிவுபூர்வமான உண்மைத் தன்மைகள் கொண்ட அனைவராலும் விளங்கிக் கொள்ளக் கூடிய சரளமான மொழி நடையிலுள்ள துண்டுப் பிரசுரங்கள் இந்தப் பிரதேசம் எங்கும் வநியோகிக்கப்படல் வேண்டும்.

 

6. இந்த மாசடைதலுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்ககை எடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பொருத்தமான அளவு நட்டஈடு வழங்கப்படல் வேண்டும்.

 

யாழ்ப்பாண மருத்துவர் சங்க தலைவர் என்ற கோதாவில் ஏனைய மருத்துவ புலமையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இவ் விடயம் தொடர்பாக தங்களின் ஆதரவையும் முயற்சியினையும் இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக எடுக்குமாறு எதிர்பார்க்கின்றேன்.

 

நன்றி,
மருத்துவர்: முரளி வல்லிபுரநாதன்.