இலங்கைத் தீவில் இருப்பது மதப் பிரச்சினை அல்ல , அது இனப் பிரச்சினை. ஆனால் அந்த இனப் பிரச்சினையின் மையமாக இருப்பது மதம்.

 

சிறீலங்கா அரசின் இனவாதம் என்பது அதன் மத அடிப்படைகளிலிருந்தே தோற்றம் பெற்றது.

 

பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று நான்கு வகையான மதங்கள் இந்நாட்டில் உள்ள மக்களால் பின்றபற்றப்படுகிறபோதும் பௌத்த பேரினவாத சிந்தனையை மையப்படுத்தியே அதன் அரசியலமைப்பும் ஆட்சியதிகாரமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

 

மதமும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று ஆழமாகப் பின்னப்பட்டுள்ள நாடு சிறீலங்கா. இன்று சிறீலங்காவில் உள்ள அரசியல் பிரச்சினையின் மையமே ‘மகாவம்சம்’ என்ற புனைவு நூல்தான். அது சிறீலங்காவை ஒரு பௌத்த நாடாக – சிங்களவர்களுக்கானதாக புனைந்துள்ளது. மற்றவர்களை வந்தேறிகள் என்கிறது. அந்த நூல் பௌத்த மதம் குறித்த புனிதத்தையும் சிங்கள மொழியின் அதிகாரம் குறித்தும் பல ‘கதைகளை’ அவிழ்த்துவிட்டுள்ளது. அதை தொடர்ந்து போதிப்பவர்களாக – அரசியல் அதிகாரம் அதன்வழியேதான் கட்டமைக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்களாக பௌத்த மத நிறுவனங்களும் அதன் பீடாதிபதிகளும் இருக்கிறார்கள்.

 

வெளிப்படையாக ஜனநாயகத்தின் வழி தோந்தெடுக்கப்பட்ட அரசு என்று கூறிக்கொண்டாலும் சிறீலங்கா அரசின் ஆட்சிஅதிகாரத்தின் திரைமறைவில் இயங்குவது இந்த சிந்தனையே.. இதைத்தான் தலைவர் பிரபாகரன் ‘மகாவம்ச மனநிலை’ என்று குறிப்பிட்டார்.

 

இந்த மனநிலையில் சிங்களம் இருக்கும்வரை மற்றவர்களுக்கான தீர்வு என்பது சாத்தியமில்லை என்பதை அவர் அடிக்கடி சுட்டிகாட்டியபடியே இருந்தார். துரதிஸ்டவசமாக சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்த இந்த மனநிலை இப்போது ஒவ்வொரு சிங்கள மக்களிடமும் இடம் மாறியிருக்கிறது.

 

இனி சுரேன் ராகவனுக்கு வருவோம்.

 

இவர் தமிழராக இருந்தாலும் சிங்கள பெளத்தம் / அதன் தொன்மம் / அரசியலையே தனது ஆய்வாக/ செல் நெறியாகக் கொண்ட ஒரு ஆளுமை.

 

உலகளாவிய அளவில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் பௌத்த கற்கைகளுக்கான ஒக்ஸ்போர்ட் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து பெளத்த மதத்தின் தொன்மத்தை நிறுவியவர்.

 

இலங்கை தொல்பொருள் திணைக்களம் பெளத்த அடையாளங்களை தமிழர் தாயகத்தில் திணித்து இன அழிப்பில் குதித்துள்ள வேளை இவரது வரவை இதனோடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாததாகிறது.

 

அடுத்து இன்னும் ஒத்தோடி அரசியலுக்கு வராத எஞ்சியுள்ள தமிழ்த் தரப்பை தமிழ் முகம் / அறிவுஜீவி அடையாளத்துடன் இலக்கு வைக்கும் நோக்கமும் இதன் பின்னணியில் உள்ளது.

 

எனவே சுரேன் ராகவன் நியமனத்தைக் கொண்டாட எதுவுமில்லை, மாறாக இன்னும் அவதானத்துடன் கையாளப்பட வேண்டிய ஒருவராக அவர் இருக்கிறார்.

 

நன்றி: பரணி கிருஸ்ணரஜனி