தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை நூற்றுக்கணக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி வருகிறார். இதை கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியானது.

இந்த கட்டுரைக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே கண்டனம் தெரிவித்தன. நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.அக்கடிதத்தில் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனால் இலங்கை அரசு அந்த கட்டுரையை நீக்கி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.இலங்கையின் இந்த இழிசெயலைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இலங்கை தூதரகத்தை இழுத்து மூடும் வகையில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

velmurugan-02-600
இந்தப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் தலைமை வகித்தார். அவர் தலைமையில் நூற்றுக்கணக்கான தமிழ வாழ்வுரிமைக் கட்சியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் இலங்கை கட்டுரை: கருணாநிதி கடும் கண்டனம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கை சிங்களவாத அரசின் பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வமான இணையதளத்தில், தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், தமிழக முதல்வரை அநாகரிகமாக இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

velmurugan-protest-120-600
அ.தி.மு.க. தலைவருக்கும், நமக்குமிடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவர் தமிழக மீனவர்களின் இன்னல்களைக் களையும் விதத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தும் அளவுக்கு சிங்கள அரசினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து சிங்கள அரசின் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதை யாவரும் புரிந்துகொள்ள முடியும்.பொதுவாக இதுபோன்ற இழிவான விமர்சனங்களை தி.மு.க. எப்போதுமே ஆதரிப்பதுமில்லை. அந்த கடுமொழிகளை, இழிமொழிகளைக் கண்டிக்கத் தவறியதும் இல்லை.

அப்படிப்பட்ட சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்துகொள்ளக்கூடாது என்றுதான் தமிழகத்தின் சார்பில் அனைத்து கட்சியினரும் தொடர்ந்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

அந்த கட்டுரை இழிவுபடுத்தியிருப்பது தமிழக முதல்வரை மட்டுமல்ல; இந்திய நாட்டு பிரதமரையும்தான் இழிவுபடுத்தியிருக்கிறது என்ற எண்ணத்தோடு, இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெ.வை விமர்சித்து இலங்கை இணையத்தில் கட்டுரை: விஜயகாந்த் கடும் கண்டனம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து இலங்கை பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் கீழ்த்தரமான கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள இனவாத அரசான இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பான கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் அருவருக்கத்தக்க, அநாகரீகமான முறையில் புகைப்படம் ஒன்று வெளியிட்டிருப்பதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

velmurugan-protest-120-600
இலங்கை கடற்படை அத்துமீறி தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்கிறது. இதுகுறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். அதை கொச்சைப்படுத்தும் வகையில் இது உள்ளது.மேலும் தமிழக முதல்வரை மட்டுமல்ல பிரதமரையும் இழிவுபடுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விசமத்தனமான தரம் தாழ்ந்து செயல்படும் விமர்சனங்களைக் கண்டு தமிழக மக்கள் கொந்தளித்துள்ளனர்.

எனவே இது போன்று எதிர்காலத்தில் இலங்கை செயல்படக் கூடாது என்று மத்திய அரசு அறிவுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசு, இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வரை இழிவுபடுத்திய விவகாரம்: ராஜபக்சே பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: திருமாவளவன்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தியதற்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள இனவெறி அரசு தனது இராணுவத்துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிங்கள இனவெறியர்களின் இந்த நடவடிக்கையானது, தமிழக முதல்வரை மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாகும்.அத்துடன், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியையும் அக்கட்டுரையின் மூலம் அவமதித்துள்ளது. இராஜபக்சே கும்பலின் இந்த அநாகரிகமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

சிங்கள இராணுவத்தினரின் சிறுபிள்ளைத்தனமான, முதிர்ச்சியில்லாத இந்நடவடிக்கையானது, தமிழ்நாட்டு மீனவர்களின் அவலம் குறித்து இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதங்களைக் கேலி செய்யும் வகையில் வெளிப்பட்டுள்ளது.

தமிழர்களையும் தமிழ்நாடு மற்றும் இந்திய ஆட்சியாளர்களையும் நீண்ட காலமாகவே மிகக் கேவலமான முறையில் சிங்கள இனவெறியர்கள் விமர்சித்து வருகின்றனர். ‘இந்திய நாடு பல்வேறு நாடுகளாக உடைந்து சிதறும்’ என்றெல்லாம் கடந்த காலங்களில் சிங்கள இனவெறிக் கும்பல் தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது.தற்போது, அநாகரிகத்தின் உச்சத்தில் நின்று தமிழக முதல்வரை கேலி செய்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமது கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியவுடன், அதற்காக அதே இணையத் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சிங்கள இனவெறியர்களின் பொறுப்பில்லாத, போக்கிரித்தனமான இத்தகைய அநாகரிக நடவடிக்கைகளை எவ்வாறு மன்னிக்க இயலும்?இந்திய அரசு, சிங்கள இனவெறியர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில், அவ்வரசுடனான அரசியல் பொருளாதார உறவுகளை உடனடியாகத் துண்டித்திட வேண்டும். ராஜபக்சே வெளிப்படையாக சர்வதேசச் சமூகத்தின் பார்வையில் தமது அறுவறுப்பான இச்செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.இவ்வாறு தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுங்கள்! – ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் திரையுலகினர்

தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரையுலகினர் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி போராட்டத்தில் குதிக்கின்றனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்கள் சங்கத்தினர் இந்தப் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டனர். அதில், “தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பவரான நமது தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாகச் சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது.எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு இப்போது நிபந்தனையற்ற மன்னிப்பு எனும் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறது.

இப்போது மட்டுமல்ல, முதல்வர் அம்மா அவர்கள், எப்போதெல்லாம் ஈழத் தமிழர்களின் வாழ்வைப் பாதுகாக்க போராடுகிறார்களோ, அப்போதெல்லாம் அதைக் குற்றம் சாட்டுவதையோ அல்லது கொச்சைப்படுத்துவதையோ வழக்கமாக வைத்துள்ளது.தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதோடு, நமது மாண்புமிகு முதல்வரையும் அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இலங்கையின் ஒட்டு வாலாக விளங்கும் இலங்கை துணைத் தூதரகம் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.இந்த துணைத் தூதரகத்தை உடனடியாக மூடக் கோரி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் சென்னையில் உள்ள அந்த தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம்.

இதில் தமிழ் திரைப்படத் துறையில் உள்ள அனைத்து பிரிவைச் சேர்ந்த நடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்கிறார்கள்.திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.-இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.