Kirubakaranஐ.நா. மனித உரிமை சபையின் 28வது கூட்டத் தொடர் முடிவடைந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. சிலர் களைப்பாறுகின்றனர், சிலர் கவலையுடன் உள்ளனர், வேறு சிலர் களைப்பும் கவலையுடனும் சோர்வடைந்துள்ளனர். ஆனால் நாம் அதிர்ச்சியும், வேதனையுடனும் காணப்படுகின்றோம்.
இவற்றிற்கு பல பல காரணிகள் காணப்பட்ட பொழுதிலும், சிறிலங்கா பற்றிய ஐ.நா. விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் வரை பின்போடப்பட்டுள்ளமை ஒர் முக்கிய காரணி என்பதை, ஐ.நா.மனித உரிமை ஆணையாளர், மனித உரிமை சபை தலைவர் உட்பட சகலரும் அறிவார்கள்.

 

ஐ.நா. மனித உரிமை சபையின் 28வது கூட்டத் தொடரில் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆற்றிய உரை, பல கேள்விகளையும் சந்தேகங்களையும் கொண்டிருந்த பொழுதிலும், இவரின் உரையில், “கிழக்கில் பெரும்பான்மையை கொண்ட முஸ்லிம் மக்களென” குறிப்பிடப்பட்டுள்ளமை, கிழக்கில் வாழும் தமிழ், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடையே சர்ச்சைகளை உருவாக்குவதற்கு அத்திவாரக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மை.

 

பல வருடங்களாக அரசியலில் ஈடுபாடுள்ள மங்கள சமரவீரவிற்கு, கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் புள்ளி விபரங்கள் தெரியவில்லை என்பது உண்மை அல்ல. அமைச்சர் மங்கள சமரவீரவின் போக்குகளை நீண்ட காலமாக கவனித்து வருபவர்கள், இவர் எவ்வளவு தூரம் சர்ச்சைகளை தூண்டக் கூடிய மிகவும் விசமத்தனமான போக்குகளை கையாழுகிறார் என்பதை புரிந்து கொள்வார்கள்.

 

மிக அண்மைக்காலமாக மங்கள சமரவீரவுடன் நட்பை உருவாக்கியுள்ள சில புலம்பெயர் வாழ் தமிழர்கள், இவர் பற்றிய பல உண்மைகளை அறியாது, மிக பெருமையாக இவருடன் விருந்தோம்பல் செய்கிறார்கள்! மிக சுருக்கமாக கூறுவதானால், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை போராட்டத்தை உலகிற்கு பயங்கரவாதமாக காண்பித்து வெற்றி கண்டவர் தான் இந்த மங்கள சமரவீர என்பதை, இவ் புலம்பெயர் வாழ் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

பிரித்தானியாவின் அறிக்கை

 

அடுத்த படியாக, இக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதியின் சிறிலங்கா பற்றிய உரை என்பது, தமிழ் மக்களை பொறுத்த வரையில் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ந்த’ கதையாகி விட்டது. இவர் தனது உரையில், உள்நாட்டு விசாரணைகளை சிறிலங்கா மேற்கொள்ளக் கூடியதற்கான அடித்தளத்தை மிகவும் சாணக்கியமாக அமைத்து கொடுத்துள்ளார். இவை பற்றி ஐ.நா.வில் உள்ள பிரித்தானிய பிரதிநிதிகளிடம் பல செயற்பாட்டாளர்கள் வினாவிய பொழுது, ‘இவற்றை பெரிதுபடுத்த வேண்டாம்’ என்ற பதிலே கொடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதிநிதிகளது பதிலிலேயே அவர்களது கபடத் தன்மை தெளிவாகியுள்ளது.

 

ஆகையால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐ.நா. அறிக்கை வெளிவரும் வேளையில், சிறிலங்கா உள்நாட்டு விசாரணைகளையே மேற்கொள்வதற்கான அத்திவாரக்கல் பிரித்தானியாவினால் ஏற்கனவே நாட்டப்பட்டுள்ளது என்பது தற்பொழுதே புலனாகிறது.

 

இவ்வாறாக, சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர், பிரித்தானிய பிரதிநிதியின் உரைகள் எமது மனங்களை பாதித்துள்ள நிலையில், மார்ச் 11ம் திகதி சர்வதேச மன்னிப்பு சபையினால் ‘சிறிலங்காவில் காணாமல்போனோர்’ பற்றி நடாத்தப்பட்;ட கூட்டத்தில் வெளியிடப்பட்ட திடுக்கிடும் தகவல், எம்மை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

 

கூட்டத்தில் உரைகள் முடிவடைந்து, கேள்வி அல்லது கருத்துக்கள் பரிமாறும் நேரத்தை அடைந்ததும், சுவிற்சலாந்திலிருந்து இயங்கும் மிகவும் இனத்துவேசம் கொண்ட, ‘சர்வதேச பௌத்த ஸ்தாபனம்’ என்ற அமைப்பு, வழமைபோல் தனது இனவாத கருத்துக்களை அங்கு முன் வைத்தது. இவர்களது இனவாத கருத்துக்களிற்கு, என்னால் அக் கூட்டத்திலேயே உடனடியாக பதில்கள் வழங்கப்பட்டன.

 

பரம இரகசியம் வெளியாகியது

 

இதனை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற மிக பிரபல்யமான அரச சார்பற்ற பிரதிநிதி, திரு ஏட்றியன் சி சோழார், தனது மனதிற்குள் நீண்ட காலமாக புழுங்கிக் கொண்டிருந்த ஓர் பரம இரகசியத்தை இக் கூட்டத்தில் கூறி, அங்கு கூடியிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தார்.

 

பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் ஆகிய நாம், எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட 1990ம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரிவில் சகல பிரிவுகளுக்கும் (சிறுபிள்ளைகள், பெண்கள், கைது, சித்திரவதை, காணாமல் போதல், படுகொலைகள், இடப் பெயர்வுகள் போன்றவற்றிற்கு) வேறுபட்ட தகவல்களை ஆதாரங்கள், ஆவணங்களுடன் கொடுத்து வருகிறோம்.

 

இதில் விசேடமாக, ஐ.நா. ஆட்கள் காணாமல் போனோர் குழுவிற்கு, நூற்றுக்கணக்கான, சத்தியக் கடதாசிகளை கொடுத்துள்ளோம். இப் பிரிவின் செயலாளராக, முன்பு சில வருடகாலம், சிறிலங்காவை சேர்ந்த தாமர குணநாயகம் அவர்கள் கடமையாற்றினார். அவ் வேளையில் நாம் சிறிலங்காவில் காணாமல் போனோர் பற்றிய தகவல்களை, காணாமல் போனோரது உறவினர்களிடமிருந்து பெற்ற பல சத்தியக் கடதாசிகளை, தாமர குணநாயகத்திடம் வழங்கியிருந்தோம்.

 

திரு ஏட்றியன் சி சோழார் பல முக்கிய புள்ளிகள் முன்னிலையில் கூறிய அதிர்ச்சி தகவல் என்னவெனில், ”சிறிலங்கா சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான காணாமல் போவோர் பற்றிய விபரங்களையும் கோவைகளையும், ஐ.நா. காணாமல் போனோர் குழுவின் செயலாளராக கடமையாற்றிய தாமர குணநாயகம் அவர்கள் அழித்தார் எனவும், இதற்கு பிரதி உபகாரமாக சிறிலங்காவின் தூதுவர் பதவியை பெற்றுக் கொண்டார் எனவும்” கூறினார். இச் செய்தியை அடுத்து கூட்டம் ஒரு சில நிமிடங்கள் மிகவும் அமைதியாகி விட்டது. இக் கூட்டத்தில் சிறிலங்கா தூதுவராலயத்தின் பிரதிநிதி உட்பட, பல முக்கிய செயற்பாட்டாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உண்மைகள் உறங்குவதில்லை

 

உண்மையை கூறுவதானால், எமது மனதில் பல வருடங்களாக இருந்து வந்த மாபெரும் கேள்விக்கு அன்று பதில் கிடைத்தது எனலாம். தமிழர் மனிதர் உரிமைகள் மையம் ஆகிய நாம் மட்டுமல்லாது, வேறு பல நிறுவனங்களும், சிறிலங்காவில் காணாமல் போவோர் பற்றிய விபரங்களை ஐ.நா. ஆட்கள் காணாமல் போனோர் குழுவிற்கு மிக நீண்டகாலமாக கொடுத்து வந்த பொழுதிலும், சிறிலங்கா தொடர்ந்து ஈராக்கிற்கு 2வது இடத்திலேயே காணப்பட்டது என்பது எமக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

 

அது மட்டுமல்லாது, தாமர குணநாயகம் அவர்கள் ஐ.நா. காணாமல் போனோர் குழுவில், கடமையாற்றிய காலங்களில், சிறிலங்காவின் பிரதிநிதிகளுடன், ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்தின் மூலை முடுக்குகளில் நின்று, ‘புசு புசுப்பதை’ நாம் பல தடவை அவதானித்துள்ளோம். இவை மிகவும் மசவாசனவை என்பதையும் நாம் அவ்வேளையில் உணர்ந்து கொண்டோம். உடல் மொழி, உடலியல் ஆகியவற்றை நன்கு தெரிந்தவர்கள், மற்றவர்களின் நடை, உடை, பாவனை மூலம் அவர்களது உண்மைத்துவத்தை அறிந்து கொள்வார்கள் என்பது உலகறிந்த உண்மை.

 

இக் கூட்டத்தை தொடர்ந்து, திரு ஏட்றியன் சி சோழாரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பல விடயங்களை விபரமாக அறிந்து கொண்டேன். தாமர குணநாயகம் அவர்கள், ஐ.நா.வில் சிறிலங்கா சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான காணாமல் போவோர் பற்றிய விபரங்களையும் கோவைகளையும் அழித்தார் என்ற உண்மை பற்றிய தகவல்களை தான், “Human Rights Features” (மனித உரிமை அம்சங்கள்) என்ற சஞ்சிகையில் எழுதியுள்ளதாகவும், 2003ம் ஆண்டு ஐ.நா. காணாமல் போனோர் குழுவின் தலைவர் அவரது பதவியை இராஜினமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாரெனவும், ஏட்றியன் என்னிடம் கூறினார்.

 

நிர்வாக சிக்கல்கள்

 

தமிழர் மனிதர் உரிமைகள் மையம் ஆகிய எம்மால் கடந்த 1990ம் ஆண்டு முதல் ஐ.நா. காணாமல் போனோர் குழுவிற்கு சமர்ப்பித்த தகவல்களை தேடி எடுப்பதில் எமக்கு பல நிர்வாக சிக்கல்கள் காணப்படுகின்றன. இதற்கான ஒரு காரணம் என்னவெனில், மகிந்த ராஜபக்ச ஜனதிபதியாக பதவியேற்றவுடன் எமது அமைப்பின் கோவைகள் யாவும் பல இடங்களுக்கு மாற்றப்பட்டதுடன், எமது காரியாலயத்திலிருந்து சில கோவைகள் தமிழ் விசமிகள் சிலரால் திட்டமிட்டு களவாடப்பட்டது.

 

அது மட்டுமல்லாது, பாரிஸில் உள்ள எனது இருப்பிடத்திற்குள், 2013ம் ஆண்டு யூன் மாதம் புகுந்த இனம் தெரியாதோர் என கூறப்படுவோரினால் மேற்கொள்ளப்பட்ட சில நாசகார வேலைகள், சில விடயங்களை மீளப் பெற்றுக்கொள்ளக் முடியாமல் காணப்படுகிறது. இவை பற்றிய விபரங்களை எனது முன்னைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.

 

சர்வதேச மன்னிப்பு சபையினால் நடாத்தப்பட்ட கூட்டத்தில் திரு ஏட்றியன் சி சோழாரினால் வெளியிடப்பட்ட திடுக்கிடும் தகவலுக்கு அமைய, ஐ.நா. காணாமல் போனோர் குழுவிற்கு எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட பல தகவல்கள், குழுவின் பதிவிலிருந்து நீக்கப்பட்டிருந்ததால், இவற்றிற்கு இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

 

உதாரணத்திற்கு, யாழ். குடாவில் காணாமல் போய் செம்மணியில் புதைக்கப்பட்டோரது விபரங்களை நாம் ஐ.நா. காணமல் போனோர் குழுவிற்கு வழங்கியிருந்தோம். அப்படியானால், பாதிக்கப்பட்டோருக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவு என்ன பதில் கூறப்போகிறது?

 

தற்போதைய சூழ்நிலையில், சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தாமர குணநாயகத்திற்குமிடையில் பல போட்டி பொறாமைகள் ஏற்பட்டுள்ளதை நாம் நன்கு அறிவோம். ஆகையால் இவற்றை சமரவீரவின் சார்பாக, தாமர குணநாயகத்திற்கு கரி பூசும் நோக்கில் இவை எழுதப்பட்டவை அல்ல. எம்மைப் பொறுத்தவரையில், இருவரும் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களிற்கு உடந்தையானவர்கள். மனித உரிமை மீறல்களுக்கு துணை போகும் எவரையும் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதே எமது கடமை.

 

போட்டி பொறாமைகளால் பிரிவுபட்டு நிற்கும், முன்னாள் நண்பர்களான மங்கள சமரவீரவும், தாமர குணநாயகமும் இக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள உண்மைகளை மறைப்பதற்காக மீண்டும் இணைந்தால், நாம் ஒரு பொழுதும் புதுமைப்பட மாடடோம்.

 

ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
tchrfrance@hotmail.com