வட மாகாணம் 3 தசாப்த கால யுத்தத்தின் பிடியிலிருந்து மீண்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறி வருகின்றது.ஆனாலும் ஜனநாயகத்தின் 4வது தூண் என உவமிக்கப்படும் ஊடகத்துறை வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மிக்கதாகவே காணப்படுகின்றது. என யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய தினம் ஓமந்தை பகுதியில் யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்த மேற்கொள்ளப்பட்ட முயறசி குறித்து யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடயம் தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது.

Jurnalist-jaff
நாம் மேற்குறிப்பிட்ட விடயத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக நேற்றைய தினம் வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இடம்பெற்ற சம்பவம் அமைந்துள்ளது. யாழ் குடாநாட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை.மாலை 5 மணிக்கு 16 ஊடகவியலாளர்கள் இன்று கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு பற்றிய பயிற்சிப் பட்டறையிpல் கலந்து கொள்ளவதற்காக சென்றிருந்தனர்.

இரு வாகனங்களில் பயணித்த ஊடகவியலாளர்களை யாழ் நகரப் பகுதியிலிருந்து இனந்தெரியாத நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் மாங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த இராணுவப் பொலிஸார் ஊடகவியலாளர்களின் பெயர்கள் விலாசம் மற்றும் அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றை பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்யும் போது ஒருவர் மட்டுமே இராணுவப் பொலிஸ் சீருடையில் இருந்துள்ளார் மற்றைய மூவர் சிவில் உடையில் இருந்துள்ளனர்.

எதற்காக சோதனையிடுகின்றீர்கள்? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஆனையிறவு சோதனைச்சாவடியில் நாங்கள் உங்கள் வாகனத்தை மறித்தோம். ஆனால் நீங்கள் நிறுத்தவில்லை. என்ற காரணத்தை மட்டுமே அவர்கள் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பயணித்து ஓமந்தை சோதனைச் சாவடியை அடைந்த போது அங்கே 6 வரையான வாகனங்கள் சோதனைக்காக நின்றிருந்தன. ஆனால் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்தை மட்டும், 5 இராணுவச் சிப்பாய்களும், 3பொலிஸாரும் சோதனையிட்டனர்.

வாகனத்தில் இருந்த அனைத்தும் கடுமையாக சோதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒரு இராணுவச் சிப்பாய் வாகனத்தின் சாரதி இருக்கைக்கு கீழ் ஒரு சிகரட் பெட்டியை போட்டார். அதனை வாகனத்தில் பயணித்த 3 ஊடகவியலாளர்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்க அங்கிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் அதனை எடுத்து, அதனுள் போதைப் பொருள் (கஞ்சா) இருந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் வாகனத்தையும், ஊடகவியலாளர்களையும், ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே வைத்து ஊடகவியலாளர்களின் அடையாள அட்டைகள் மற்றும், கைத்தொலைபேசிகள், மடிகணனிகள் அனைத்தையும் பொலிஸார் பறித்துக் கொண்டனர்.

பின்னர் தெற்கில் உள்ள ஊடக அமைப்புக்கள் விடயத்தை அறிந்து பொலிஸாருடன் பேசிய பின்னர் ஊடகவியலாளர்களின் உடமைகள் மீண்டும் வழங்கப்பட்டது. எனினும் சாரதியை கைதுசெய்ய வேண்டும் என பொலிஸார் உறுதியாக கூறினர்.

எனினும் சோதனையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் போதைப் பொருள் இருந்தாக கூறப்படும் சிகரட் பெட்டியை அங்கே வைத்தமையினை நோரில் பார்த்த ஊடகவியலாளர்கள் சாரதியை கைதுசெய்ய முடியாது. இராணுவ சிப்பாயை கைதுசெய்யுங்கள். என கேட்டபோதும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை 5மணிக்கே பொலிஸ் நிலையத்திலிருந்து ஊடகவியலாளர்கள் கொழும்பு பயணமாகினர்.

எனவே இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பதனை சுட்டிக்காட்டும் அதேவேளை இவ்வாறான அநாகரிகமான நடவடிக்கைகளினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். வடக்கு ஊடகவியலாளர்களை எந்தவகையிலேனும் முடக்கவேண்டும். அவர்கள் தெற்கில் உள்ள ஊடக சமுகத்துடன் தொடர்பினை பேணக் கூடாது. என்பதில் சிறீலங்கா அரசாங்கம் திடமாக இருப்பதையே நாம் இந்தச் சம்பவத்தின் மூலம் உணர்கிறோம்.

முன்னரும் யாழ்.குடாநாட்டிலிருந்து ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறைக்குச் சென்ற ஊடகவியலாளர்களை அந்த பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விடாது, சிங்கள இனவாத அமைப்புக்கள் இரு முறை விரட்டிடித்த சம்பவத்தை நாம் இங்கே நினைவுகூர்கிறோம்.

சிறீலங்கா அரசாங்கம் குடாநாட்டு ஊடகவியலளர்களை ஒரு புறம் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயற்சிக்கும் நிலையில், மறுபக்கம் அவர்களுடைய தொடர்புகள் பரந்து பட்டதாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும் பிரயத்தனம் எடுக்கின்றது.

எனவே இவ்வாறான மிகமோசமானதும், அநாகரிகமானதுமான நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், சிறீலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான கபடத்தனமான முயற்சிகளுக்கு மத்தியில் யாழ்.ஊடகவியலாளர்கள் எத்தகைய அச்சுறுத்தல்களுடன் கடமையாற்றுகின்றோம். என்பதனையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.