சிங்கள தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு வரலாற்று நிகழ்வை சொன்னார்.

ganthi-thiru
தொடர் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்டிருந்த போர் நிறுத்த காலத்தில் தமிழீழ அரசு யாழ்ப்பாணத்தில் ஒரு கலைவிழாவினை ஏற்படுத்தியது. இந்த கலைவிழாவிற்கு சிங்களவர்களில் முதன்மையாகவும், சிறந்த கலைஞர்களாகவும் விளாங்கிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் என சிங்கள ஜனநாயக சக்திகளாலும், கலையுலகினாலும் கொண்டாடப்பட்டவர்களை அழைத்திருந்தார்கள் தமிழீழ அரசின் பிரதிநிதிகள். இந்த நிகழ்விற்கு யாழ்ப்பாண மக்களும் தமது சிங்கள நண்பர்களை அழைத்து தமது வீட்டில் விருந்தாளியாக இருக்க வைத்தார்கள். இந்த விழாவில் இந்த சிங்கள படைப்பாளிகள் தமிழீழ அரசினால் சிறப்பு செய்யப்பட்டார்கள். இதுதான் தமிழீழ அரசின் மிகப்பெரிய நல்லிணக்கமான செயலாகவும், முன்னனி நடவடிக்கையாகவும் இருந்தது. இது பெரும்பாலான சிங்கள தமிழீழ எதிர்ப்பு பொதுபுத்திக்கு அதிர்ச்சியானதாகவும் அமைந்தது.

அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த எங்களது சிங்கள தோழர் பின் சொன்னதுதான் மிக முக்கியமான பதிவாக இருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசினால் பாராட்டப்பட்ட சிங்கள படைப்பாளி தமது தோழர்களிடத்தில் பின் கொழும்புவில் பதிவு செய்திருக்கிறார் , “ யாழில் இருந்த நாளில், எதோ ஒரு தருணத்திலாவது புலிகள் எம்மிடம் ‘எங்கள் மக்கள் மீது குண்டு போட்டு அழித்த பொழுது ஏன் அமைதி காத்தீர்கள்?’ என்று கேட்பார்கள் என்கிற குற்ற உணர்வு இருந்தது. எந்த தருணத்திலும் இந்தக் கேள்வியை புலிகள் பிரதிநிதிகள் கேட்கவில்லை. புன்னகையும் சிறந்த உபசரிப்புமே அவர்களிடமிருந்து கிடைத்தது. இதை விட மிக முக்கியமாக எந்த ஒரு தமிழரும் (இயக்கத்தில் இல்லாத) கூட இந்தக் கேள்வியை எங்களிடத்திலும் எந்த சிங்களவரிடத்திலும் எழுப்பவில்லை. மகிழ்வுடன் தமது ஆகச்சிறந்த விருந்தாளிகளாகவே எங்களை நடத்தினார்கள். தமது வீட்டிற்கு வந்து உணவருந்தி சிறப்பு செய்யவேண்டுமென்று வேண்டினார்கள். வெறுப்பு என்பதோ, எதிர்கேள்விகளோ எங்களிடத்தில் அவர்கள் காட்டததே எங்களது குற்ற உணர்வினை அதிகப்படுத்தியது” ….

சிங்கள கலைஞர்களை சிறப்பு செய்கின்ற ஜனநாயகத் தன்மை வாய்ந்த கருத்தியலை உள்ளடக்கிய விடுதலைப்புலிகளையே இங்குள்ள சோ-கால்டு படைப்பாளிகள்; அறிவு சீவிகள் பாசிஸ்டுகள் என்று பதிகிறார்கள். தமிழீழ விடுதலையை முன்னெடுப்பது என்பது சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல என்பதையும், சிங்கள பேரினவாதமே ஆபத்தானது என்பதையும் புலிகள் உணர்ந்தே செயலபட்டார்கள். இதை தம் மக்களிடத்திலும் அரசியல் படுத்தவே செய்திருந்தார்கள். இந்த ஜனநாயக பண்பை திட்டமிட்டே மறைத்து பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஜனநாயக பண்பாட்டினை சிங்கள படைப்பாளிகளிடத்தில் கொண்டு சேர்த்த பணியையும் புலிகளே செய்திருந்தார்கள்.

தமிழ்த் தேசிய விடுதலை அரசியல் என்பதே சிறந்த நல்லிணக்கத்தினையும், உயர்ந்த நாகரீகத்தினையும் உள்ளடக்கியது. தமிழீழ மக்களுக்கு தமிழீழ விடுதலையும் , அரசியல் அதிகாரமும் கிட்டாத வரை நல்லிணக்கம் என்பது சிங்கள அரசிடமிருந்து சாத்தியமில்லை. நாகரீகத்தினை உள்ளடக்கிய கருத்தியலில் இருந்தே நல்லிணக்கம் சாத்தியம். அந்த வாய்ப்பினை தமிழீழ விடுதலை மட்டுமே சிங்களத்திற்கு ஏற்படுத்தி தரும்.

சிங்களப் பேரினவாதத்தினை முடக்குகின்ற/ தோற்கடிக்கிற கடமை சிங்கள முற்போக்குவாதிகளிடத்திலும், சிங்கள ஜனநாயக சக்திகளிடமும் இருக்கிறது. அதை பேச மறுக்கின்ற, புறக்கணிக்கின்ற எந்த ஒரு சிங்கள முற்போக்கும் பாசிச சிங்கள பேரினவாதத்தின் ஆதரவு ஆற்றலாகவே இருக்க இயலும். சிங்கள மக்களே இப்பேரினவாதத்திற்கு எதிராக வெளிப்படையாக பேச வேண்டும். இதை கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் தமிழர்களிடத்தில் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை..

அந்த சிங்களத் தோழர் இறுதியாக எங்களிடத்தில் சொன்ன வரிகள் வரலாற்று சிறப்பானதாக பார்த்தேன்.

“தமிழீழ விடுதலை மட்டுமே சிங்கள மக்களுக்குமான விடுதலை. அதுவே சிங்கள பேரினவாதத்திலிருந்து சிங்கள மக்களையும், முற்போக்கு அரசியலையும் விடுதலை செய்யும்” என்றார்.

இந்த உயரிய பண்பாட்டினையும், நாகரீகத்தினையும் உடைய அரசியல் பின்புலமே தமிழ்த் தேசிய கருத்தியலாக இருக்க முடியும். வெறுப்பு, வன்மம், பொய்மை, இனவெறி, இனத் தூய்மை இது எதுவுமே தமிழ்த் தேசிய கருத்தியலாக இல்லை என்பதை தமிழீழ அரசு நிருவியது.

இந்த கலை நிகழ்ச்சிக்கு பின் சிங்கள தோழர்கள் செய்த ஜனநாயக நடவெடிக்கையை அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

திருமுருகன்காந்தியின் முகநூலில் இருந்து.