கலாச்சாரம்…
பண்பாடு…
வெளிநாட்டு சதி… என்ற காரணங்களை சுட்டிக்காட்டி ஆதரவு தெரிவிக்க நான் அடிப்படைவாதியோ அல்லது சோ கால்ட் தேச பக்தனோ அல்ல.

 

வேறு என்னதான் காரணம்?

 

சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கி வளர்க்கும் என் வீட்டு நாய்க்குட்டிக்கு, தூக்கி எறியும் பந்தை கவ்வி எடுத்துவர பழக்கபடுத்தி ஒரு அகன்ற மைதானத்தில் ஓடிபிடித்து விளையாடுவதும், அவ்வாறு விளையாடும்போது நாய்க்கோ, எனக்கோ ஏற்படும் சிறு சிரமங்களை காரணம்காட்டி ஒரு கும்பல் என் பொழுதுபோக்கை வலுகட்டாயமாக தடுப்பதை எக்காலத்திலும் என் சுய கவுரவம் ஏற்றுக்கொள்ளாது. எளிய உயிரினங்களை வலிய உயிரினங்கள் வேட்டையாடி உண்பதும், பசி தீர்ந்தால் அதே உயிரினங்களை சீண்டி விளையாடி பொழுதை கழிப்பதும் உயிரினங்களுக்கான இயற்கையின் இயல்பான விதிகளில் ஒன்று. மனிதன் சற்றே மேம்பட்ட சக உயிரின அணுகுமுறைய கொண்டிருப்பதால் அவனின் பொழுதுபோக்குகளில் சக உயிரினங்கள் கொஞ்சம் வரைமுறை படுத்தபட்டு கையாளப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வேண்டுமானால் சிரமமின்றி நானும், என் நாயும் பொழுதை கழிப்பது எப்படி என்று ஆலோசனை வழங்கிவிட்டு ஓரமாக நின்று வேடிக்கை பாருங்கள். என் தனிபட்ட பொழுதுபோக்கு சமாச்சாரங்களில் உனக்கான உச்சபட்ச அதிகாரம் அவ்வளவே.

 

அப்படியானால் காளைகளை அப்படி கொடுமைபடுத்திதான் என் பொழுதை கழிக்க வேண்டுமா?

 

நிச்சயமாக இல்லை. ஜல்லிகட்டில் கட்டவிழ்த்து விடப்படும் ஒவ்வொரு காளைகளின் உரிமையாளர்களும் குழந்தையை கவனித்துக்கொள்ளும் 10 பெற்றோருக்கு சமம். தன் காளையை வரம்பு மீறி அடக்க முயலும் வீரர்களை அடுத்த நொடியே அடையாளம் கண்டு தடுத்து / தண்டித்து விடுவார்கள். அதே போல உண்மையான ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரர் மறந்தும்கூட வரம்பு மீறமாட்டார். இதையெல்லாம் நேரடியாக சம்பந்தபட்டவர்களே பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.

 

இதையெல்லாம் மீறி, மைதானத்தில் அம்பயரை ஸ்டம்பால் குத்தும் கிரிக்கெட் வீரரை போலவும், ரெஃபரியை முகத்தில் குத்தி கீழே தள்ளும் கால்பந்து வீரரை போலவும், முதலிடம் பெறுவதற்க்காக குதிரையை மூர்க்கமாக தாக்கும் ஜாக்கிகளை போலவும் சில பல வீரர்கள் இங்கேயும் இருக்கலாம். அத்தகைய மேல் தட்டு விளையாட்டுகளை பொழுதுபோக்காக பார்த்து, ரசித்து கடந்து போக தெரிந்த உன் கண்ணுக்கு…

 

குரோமோசோம்களை வன்புணர்வு செய்து பெற்றெடுத்த வெளிநாட்டு விலங்கு வகைகளை வாங்கி வீட்டில் உன் மன திருப்திக்காக அலங்கார பொருளாக வைத்து இன்பபட்டுக்கொள்ளும் உனக்கு, எங்கோ ஒரு குளத்தில் சுதந்திரமாக நீந்தி திரியவேண்டிய வண்ண மீன்களை பிடித்து ஒரு சிறு தொட்டியில் போட்டு அதோடு செல்பி எடுத்துக்கொள்ளும் உனக்கு, ஜல்லிக்கட்டு மட்டும் விலங்கு வதையாக தெரிந்தால், என் நடு விரலை உனக்கு உயர்த்தி காட்டிவிட்டு, போட்டியை நடத்தி பொழுதை போக்குவதை தவிர வேறு வழியில்லை.

 

இன்னொருசாரர் கிளம்பியிருக்கிறார்கள். ஜல்லிகட்டுக்கு குரல் கொடுக்கும் இவர்கள், அதற்கு குரல் கொடுத்தார்களா? இதற்கு குரல் கொடுத்தார்களா? (குரல் கொடுத்திருக்கிறார்களா என்று அமர்ந்து நோட் பண்ணுவார்கள் போலும்) என்று.

 

வெரி சிம்பிள். நீங்கள் அதற்கு குரல் கொடுங்கள். நாங்கள் இதற்கு குரல் கொடுக்கிறோம். எவருக்கு எது முக்கியம் என்றோ, இது இதுக்குதான் குரல் கொடுக்கவேண்டும் என்றோ வரையறுக்க யாருக்கும் உரிமையில்லை. நன்றி.

நன்றி: பாபு ராஜேந்திரன்