அநியாயமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி ஜெயக்குமாரியின் விடுதலைக்காக இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக மாலை நான்கு மணியவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்றது.

colombo news-11
கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி போராட்டங்களை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரும் அவரது மகள் விபூசிகாவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இந்த வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.பின்னர் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது மகள் விபூசிகா வவுனியா சிறுவர் கண்காணிப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டு தற்போது 200 நாட்கள் கடந்துவிட்டன. பயங்கரவாத செயற்பாடுகளுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

எனினும் இதுவரை அது தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படவோ, பிணையில் விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் குற்றச்சாட்டுகளின்றி அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் இன்று மாலை ஆர்பாட்டம் நடை பெற்றது.