ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கொண்டாட எதுவுமேயில்லை. மாறாக இந்த தீர்ப்பினூடாக பிராந்திய அரசியலில் எமது விடுதலைக்கு எதிரான ஒரு “செக்” வைக்கப்பட்டுள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

jaya-27-sep-2014
ஜெயலலிதா எமக்கான நிரந்தர நேச சக்தி கிடையாது. அவரது ஆரம்ப கால நவடிக்கைகளை பார்த்தாலே அது புரியும்.

அத்தகைய ஒருத்தரை எமது தொடர் போராட்டங்களினூடாக எமக்குச் சார்பாகத் திருப்பியது சமகால வரலாறு.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணப்பிரதிபலிப்பாய், தமிழீழ பொதுவாக்கெடுப்புக்கு தீர்மானம் நிறைவேற்றியது தொடக்கம் அவரது சமகால பங்களிப்புக்களை நிறையவே சொல்லலாம்.

இது எம்மீதான அக்கறையின்பாற்பட்;டதல்ல என்றபோதும் சமகால அரசியல் களம் என்பது இத்தகைய நலன் சார்ந்த பின்புலத்தில்தான் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழீழம் சார்ந்து டெல்லிக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒருத்தரை நாம் இழப்பது எமது விடுதலை சார்ந்து நல்ல அறிகுறி அல்ல.

அதுவும் சிங்களத்திற்கு எதிராக அனைத்துலக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அழுத்தத்தின் மைய அச்சாக இருந்த அவரை நாம் இழந்தது இராஜதந்திர ஆட்டத்தின் போக்கையே திசைமாற்றும் அபாயம் நிறைந்தது.

தமிழர்களுக்கு எதிரான டெல்லியின் ஒரு நிகழ்ச்சி நிரலாகவே இதைப்பார்க்க வேண்டியிருக்கிறது.

ஜெயலலிதா தமிழீழ விடயத்தில் மட்டுமல்ல அண்மைக்காலமாக மீனவர் பிரச்சினை, மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்தமை என்று தமிழகம் சார்ந்துகூட மிகத் தீவிரமாக இருந்தது இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏகத்திற்கும் எரிச்சலை ஊட்டிய விடயமாகும்.

நீதித்துறைக்கும் அரச எந்திரத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்பது வாதத்திற்கு சரியாக இருக்கலாம், ஆனால் இந்தியா போன்ற தேசங்களில் இத்தகைய “தீர்ப்பு” களின் பின்னணயில் அரசியல் மறைந்திருப்பதையும் நாம் அறிவோம்.

ஒரு வேளை மோடி அரசு ஜெயலலிதாவின் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்திருந்தால், இந்த தீர்ப்பு இப்படியா அமைந்திருக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

ஜெயலலிதா தமிழர் நலன் சார்ந்த கோசங்களுடன் ஒரு பிரதமர் வேட்பாளராக கடந்த தேர்தலில் உருவெடுத்தது தமிழர் நலனுக்கு எதிரான கொள்கையுடயை இந்திய கொள்கை வகுப்பாளர்களை கலக்கப்படுத்தியதன் விளைவே இந்த கடுமையான “தண்டனைக்கு” ஜெயலலிதாவை உட்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது அவர் புராணம் பாடியபடி மீதிக்காலத்தை ஆளப் போகும் “பொம்மை அரசு” தமிழீழ விடுதலை சார்ந்து என்ன தீர்மானத்தை நிறைவேற்ற முடியும?

ஒரு வேளை இந்த இக்கட்டின் காரணமாக ஆட்சி மாறினாலும் இன்னொரு பெரும் சக்தியான திமுக வென்று என்னத்தை கிழிக்கப்போகிறது? எமக்கு கடைசியாக எஞ்சியுள்ள கோவணத்தையும் உருவிவிட்டுத்தான் கருணாநிதி மரணத்தை தழுவுவார்.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்று என்று நாம் நம்பும் மூன்றாவது அணி ஒன்று உருவாகும் என்று நாம கடந்த காலங்களில் பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் சிங்கள லொபியை காவும் ஒரு வியாபார நிறுவனமான “லைகா” எதிர்ப்பிலேயே ஒற்றுமை காணமுடியாத தமிழ்த்தேசிய சக்திகள் எப்படி மூன்றாவது அணியாக ஒரு மாற்று அரசியலை செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும்?

எனவே இந்த இக்கட்டான நேரத்தில் தமிழர்கள் ஜெயலலிதா என்ற துருப்பு சீ;ட்டை இழந்து நிற்பதுதான் உண்மை.

எல்லாவற்றையும் கடந்து வந்த நாம் இதையும் கடந்து போவோம். “தோல்வியைக்கூட எமக்கு சாதகமாக்கு” என்பது தேசியத்தலைவர் வாக்கு.

எனவே இந்த இடைவெளியை தமிழகத்திலுள்ள தமிழ்த்தேசிய சக்திகள் ஒன்றிணைந்து எதிர் கொண்டு நிரப்பினால் தமிழீழம் மட்டுமில்லை தமிழகம்கூட ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தும்.

ஈழம்ஈநியூஸ்.