david2தமிழ் மக்களின் துயர் தீர்க்க காந்திய வழியில் போராடிய அறப் போராளி. அகிம்சை தோற்று போனால் ஆயுதம் ஏந்துவதை தவிர வேறு வழி இல்லை என உணர்ந்த தனக்கான போராட்ட மார்க்கத்தை இறுதி வரை தேடி தமிழ் மக்கள் விடுதலையை எண்ணி எண்ணி வருந்தி வலிகள் சுமந்தவர். வெலிக்கடை அரசியல் கைதிகளின் படுகொலைக்கு கண் கண்ட சாட்சி மட்டக்களப்பு சிறை உடைப்பில் உயிர் காக்கப்பட்ட சாட்சி.
அகவை 92 இல் நேற்று இந்த ஓய்ந்து போகாத உறங்காத போராளி ஆழ் துயில் கொண்டார்.

 

1924ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கரம்பனில் அருளானந்தம், மரியப்பிள்ளை இணையருக்கு மகனாக பிறந்த இவர் கரம்பனில் கொன்வென்டில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து ஐந்தாண்டுகாலம் பயின்ற பின்னர் இளவாலை ஹென்றிக் கல்லூரியில் ஆங்கிலக் கல்வி கற்றார்.

 

இவருக்கு ஓவியக் கலையில் இருந்த மிகுந்த ஆர்வத்தால் . இளவாலையில் படிக்கும் காலத்தில் நிறைய ஓவியர்களுடன் பழகும் வாய்ப்பு இவருக்கு உருவாகியதால் பல ஓவியங்களை வரைந்தார்.

 

இதுவே பின்னாளில் இவருக்கு கட்டிட வரைகலையில் அதிக ஆர்வம் எழ வழி கோலியது எனலாம். வேதநாயகம் என்றொரு ஆங்கில ஆசிரியர் அன்பிலும் அரவணைப்பிலும் இவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றார்.

 

தென்னிலங்கை வந்து தனக்கான வாய்ப்புகளை தேடி பல மனச்சோர்வுகள் கடந்த நிலையில் ஈற்றில் அவர் விரும்பிய ‘டிராட்ஸ்மேன்ஷிப்பை’ படித்து முடித்து பொதுப்பணித்துறையில் சில காலம் பணி ஆற்றி பின் பல சிங்கள இனவாதிகளின் சூழ்ச்சிகளையும் வென்று 1953 – 1956 வரை அவுஸ்திரேலியா சென்று பணியாற்றி நாடு திரும்பினார்.

 

பணி நிமித்தம் ஆபிரிக்காவில் உள்ள கென்யாவின் மும்பாஸா நகரில் நகர வடிவமைப்பாளராக மீண்டும் பணி ஏற்றுச் சென்ற டேவிட் ஐயா அங்குள்ள ஒரு நூலகத்தில் நிறைய நூல்கள் படித்தார்.

 

காந்தி அடிகள் பற்றி அறிந்த ஐயா அவரின் சத்திய சோதனை நூல் படித்து அவரில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

 

வெளிநாடுகளில் பணியாற்றும் பொழுதே தமிழினத்தின் துன்பங்களை அகற்ற பணியாற்ற எண்ணம் கொண்டார். இது பற்றி அவர் கூறுகையில்

 

“1976இல் தமிழர்களுக்காக தனது வாழ்வைச் செலவிட வேண்டும் என எண்ணினேன். தீவில் நிலவிய சூழல் என் நிம்மதியைக் குலைத்தது. அடிப்படையிலிருந்தே நாம் மாற வேண்டும். நமது தனித்துவத்தைப் பேண வேண்டும் என்றெல்லாம் எண்னினேன். அந்தக் காலத்தில் எனது வருமானம் நாற்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை வரும். உள்ளூரில் வேலை செய்யும் போது எனக்குப் பிடிக்காத வேலைகளைச் செய்ய மாட்டேன். என்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு என் இரண்டு சகோதரிகளுக்கும், சித்தி மாமா, அத்தை என அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்தேன். இப்போது அதெல்லாம் இல்லை. அவர்களும் சிங்கள இனவாத நெருப்பால் துரத்தப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள்.”

 

தமிழினத்தின் வலி இப்படித்தான் சிறுக சிறுக இவருள் உந்து சக்தியாக உருமாறியது
அதன் பின் பல நாடுகளுக்கு சென்றார். உலக கட்டிடக் கலைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்து தாயகத்தில் திருகோணமலையில் கட்டிடக் கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்றொரு கனவும் வளர்த்து ஒரு வரைபடத்தையும் தயாரித்தார். அதற்காக ஒரு நிகழ்ச்சியை துறைமுக வீதியில் ஏற்பாடு செய்து அதைத் துவங்கி வைக்க தந்தை செல்வாவையும் அழைத்திருந்தார். ஆனால் அவர் கனவுகள் நனவாக சிங்கள பேரினவாத அடக்குமுறைகள் வாய்ப்பளிக்கவில்லை.

 

வேலை ஒப்பந்தங்கள் முடிந்து ஊருக்கு வரும் போது மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்த போதும் அரசியல் வேட்கை இவருள் கனன்று கொண்டு இருந்தது. அது பல நேரங்களில் இவரின் நிம்மதியைக் குலைத்தது. மக்கள் நிம்மதியற்று அலைந்து திரிந்ததும், அரசியலில் வெளிப்படையாக சிங்கள பேரினவாதிகள் இனவாதத்தோடு நடந்து கொண்டதையும் அறிய நேரிட்ட போதெல்லாம் துடிதுடித்தார்.

 

1947ஆம் ஆண்டு நான் முதன்முதலாக தந்தை செல்வாவின் உரையைக் கேட்டார்.. அவர் பேசிய அத்தனை வார்த்தைகளும் அவரது மனதில் நிரந்தரமாகப் பதிந்தன.

 

 

அவுஸ்திரேலியாவில் படித்துவிட்டு இவர் 1956இல் திரும்பி வந்த மறுநாள் தந்தை செல்வா முதலானோர் சத்தியாகரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அங்கு பொலிஸ்காரர்கள் நிறையப்பேர் குவிக்கப்பட்டு இருந்தனர் . எங்கும் பதட்டம் நிலவியது.

 

உண்ணாவிரதம் இருந்தவர்களை பொலிசார் கண்மூடித்தனமாகத் தாக்கியதை கண்டார். அந்த அடி அவர் மனதில் ஆழமாக பதிந்தது..

 

ஈழ விடுதலைப் போராட்டத்தை . தமிழ் மக்களுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்திற்கான போராட்டமாக பார்த்தார். இது பற்றி அவர் கூறுகையில்
“இலங்கைக்கு திரும்பி வந்த நாள் தொட்டே தமிழ் மக்களுக்கு தனித்துவமான வாழ்க்கையை நாம் தேடித்தரவேண்டும் அது காந்தியத்தால்தான் சாத்தியமாகும் என்று நம்பினேன். சிங்களவர்களிடமிருந்து விடுதலை வாங்கித்தர வேண்டும் என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆனால் அந்த மக்கள் தங்களை சுயமாக ஆளத் தெரிந்தவர்களாக மாற வேண்டும் என விரும்பினேன். கல்வியும், காந்தீயமும் அதை சாதிக்கும் என நம்பினேன்.

 

வவுனியாவில் நாவலர் பண்னை என்ற பெரிய பண்ணையை உருவாக்கினோம். சுமார் 10 ஏக்கர் பரப்பில் அதை ஒரு விவசாய கல்விப் பண்ணையாக உருவாக்கினேன். அந்த இடத்தை நானே தேர்ந்தெடுத்து அதன் மூலம் தமிழ் இளைஞர்களுக்கு விவசாயத்தை அறிமுகம் செய்யலாம் என நினைத்து ஒரு டிராக்டரும் வாங்கினேன். அவர்களுக்கு வேண்டிய உணவு கொடுத்து வயலில் எப்படி விவசாயம் செய்வது என்று கற்றுக் கொடுத்தேன். ஆனால் இரண்டு வருடம் கழித்து அவர்கள் நெல்லை அறுவடை செய்து தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள் (சிரிக்கிறார்).

 

ஆனாலும் நான் சோர்ந்து போகவில்லை. நானும் டொக்டர் ராஜசுந்தரமும் புதிய வழிகளை ஆராய்ந்தோம். ராஜசுந்தரத்தைப்போல ஒருவர் இல்லாவிட்டால் எங்களால் காந்தீயத்தை வளர்த்திருக்க இயலாது. நித்திரை கொள்ளாமல் இருக்கச் சொன்னால் நித்திரை கொள்ளாமல் விழித்திருப்பார், வண்டியை ஓட்டவேண்டும் என்றால் உடனே வந்து உதவுவார், ரைப் செய்து கொடுக்க வேண்டும் என்றால் அதையும் விரைவாகச் செய்து கொடுப்பார். அவரது மனைவி சாந்தியும் கணவரைப் போலத்தான்.

 

அவரும் எல்லா உடல் சுகக்கேடுகளையும் பரிவாய் குணப்படுத்துவார். காந்தியம் என்ற அமைப்பு பெரும் வெற்றி பெறக் காரணமாக அமைந்தவர்கள் ராஜசுந்தரம் தம்பதிகளே. அவரும் நானுமாக பண்ணையில் தங்கியிருந்து படிக்கும் ஆர்வம் உள்ளவர்களைத் தேடினோம். 12,15 இளைஞர்கள் வந்தார்கள்.

 

அவர்களுக்கென சிறிய குடில்களை அமைத்து அங்கேயே கல்வி கற்றுக் கொடுக்க உரிய ஆசிரியர்களையும் நியமித்தேன். ஒரு பக்கம் உழைப்பு, இன்னொரு பக்கம் கல்வி என்பது காந்தியத்தின் விதியாக இருந்தது. அதை நான் அவர்களுக்குப் போதித்தேன். அந்த வழிமுறைகள் பெரும் வெற்றியடைந்தன.

 

நோர்வே, ஹொலண்ட் நாட்டைச் சார்ந்தவர்கள் எனக்கு பணம் கொடுத்து உதவினார்கள்.அத்துடன் நாங்களும் கொஞ்சம் பணம் போட்டு 600 பெண் குழந்தைகளுக்கு 3 மாதம் என்ற கணக்கில் பயிற்சி அளித்து வந்தோம் . ஐந்து பிரிவுகளாக பாடத்தினை வகைப்படுத்தி கற்பித்தோம் அதில் முதலாவதாக காந்தியம். காந்தி யார் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பனவற்றைக் கற்பித்தோம். பிறகு கல்வி, மூன்றாவதாக உடல் நலம். மருத்துவர் சாந்தி அதனைக் கவனித்துக்கொண்டார். அவர் கணவர் மற்றப் பொறுப்புகளை ஏற்றிருந்தார். குடும்பமாக அவர்கள் இந்தப் பணியினைச் செய்தார்கள்.

 

குழந்தைகளுக்கு படிப்பு பாரமாக இருந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம் . அவர்களுக்கென்று ஒரு பாடத்திட்டத்தை நாங்கள் உருவாக்கினோம். ஒவ்வொரு ஊராகச்சென்று அங்கிருந்த தலைமை அதிகாரியை சந்தித்து எங்களது நோக்கத்தை தெரிவித்து அங்கிருந்து ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தோம்.

 

இப்படியாக 500 கிராமங்களிலிருந்து 500 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த பாடத் திட்டத்தினை படிப்பித்தோம். அந்த 500 பெண்களும் இங்கே அனைத்தையும் கற்றுக் கொண்டு தங்களது ஊர்களுக்குத் திரும்பி மற்றவர்களுக்கு அதைக் கற்பிப்பர்கள்.

 

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை எங்கள் குடில்களில் விட்டுச் செல்வார்கள். இதற்கென ஒவ்வொரு ஊரிலும் ஓலையால் குடில்களை அமைத்து அதிலே சுத்தமான வெண் மணலைப் பரப்பி வைத்திருந்தோம். பயிற்சி பெற்ற பெண்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்கள். எங்களுக்கு நிதி உதவி வழங்கியவர்கள் நாங்கள் என்ன வேலை செய்கிறோம் என்பதைப் பார்க்க வவுனியாவுக்கு வருவார்கள். ஒரு கட்டத்தில் காந்தியம் பரந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று 500 பள்ளிக்கூடங்களாக விரிவடைந்திருந்தது.இதையெல்லாம் இலங்கை அரசும் அறிந்திருந்தது. நாங்கள் எங்கு கிணறு தோண்டுகிறோம், எங்கெல்லாம் எங்கள் பண்ணைகள் உள்ளன என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.”

 

காந்தியம் என்ற அறவழி அமைப்பில் இருந்த ஐயா பின்பு புளொட் இயக்கத்தின் ஆயுத போராளிகளோடு தன்னை இணைத்துக் கொண்டார். அவர்களின் ஆதரவோடு இந்த காந்திய அமைப்பை வளர்த்துக் கொள்ள நினைத்தார். அது பற்றி அவர் கூறுகையில்
.” ஏனைய அமைப்புகளை வீழ்த்தி புளொட் அமைப்பு முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்து அவர்களோடு நாங்கள் சேரவில்லை.இன் கொம்யூனிசப் பாறைகள் எனக்கு பிடித்திருந்தன. காந்திய அமைப்பை வளர்க்க அவர்கள் உதவினார்கள். அதனால் சேர்ந்தோம்.

 

ஆனால் அமைப்பினுள் சென்ற பின்னர் அனுபவங்கள் வேறு மாதிரி இருந்தன. துப்பாக்கி வழியே சகல கோட்பாடுகளையும் வென்று விடலாம் என்ற மூட நம்பிக்கை புளொட்டில் இருந்தது. அளவு கடந்து ஆயுதங்களை வழிபடும் மூட நம்பிக்கை எந்த அமைப்பையும் விட்டு வைக்கவில்லை. இது என்னைப் போன்றவர்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கியது.

 

சந்ததியார் காந்தியம் அமைப்போடு நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவரே புளொட் அமைப்பிலும் செயற்பாட்டாளராக இருக்க நாங்களும் இலங்கை அரசின் வளையத்தினுள் கொண்டு வரப்பட்டோம்.

 

————————————————————————–

 

வெலிக்கடைச் சிறையில் 1983 இல் நடந்தேறிய தமிழ் கைதிகள் மீது கட்டவிழ்க்கப்பட்ட கோர இனப்படுகொலைகளின் வாழும் சாட்சியாக திகழ்ந்தவர் ஐயா என்பது குறிப்படத்தக்கது. சிங்கள படையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் கொடூரமாக நடத்திய சித்திரவதைகள் பற்றியும் நடந்த விடயங்கள் பற்றியும் கூறுகையில் பின்வருமாறு கூறுகின்றார். இந்த சாட்சியத்தில் அவர் மட்டக்களப்பு சிறையில் என்ன நடந்தது என்றும் சாட்சியம் கூறுகின்றார்.

 

————————————————-

 

“கொழும்பு வை எம் சி ஏ (லுஆஊயு) வில் வைத்து இரவு 12 மணிக்கு என்னைக் கைது செய்து நான்காம் மாடி குற்றப்புலனாய்வு விசாரணை முகாமுக்குக் கொண்டு சென்று ஓர் அறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.
அங்கே கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ஒருவர் வந்தார். அவர் என்னிடம் “உங்களது அனைத்து வேலைகளும், திட்டங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் அனைவரையும் நாங்கள் தீவிரமாகக் கண்காணித்த பின்னரே சிறைப் பிடித்தோம். ஆக எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி மாட்டிக்கொள்ளாதீகள்.

 

மாறாக என்ன செய்தீர்களோ அதைக் கூறிவிட்டு குறைவான தண்டனையுடன் விடுதலையாகுங்கள்” என்று கூறினார்.

 

எனது வாக்குமூலத்தை அவர்கள் பதிவு செய்து கொண்டார்கள். அப்போது புன்னியா டி சில்வாதான் சி.ஐ.டி. பெரியவராக இருந்தார். நான்காம் மாடியில் என்னுடன் இன்னொருவனும் இருந்தான்.

 

அவனுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவன் எம்.பி.ஏ படித்துக்கொண்டிருந்தான். அவனையும் எங்களைப் போல அங்கிருந்த மேசையின் மீதே படுத்துறங்கச் சொன்னார்கள். ஆனால் அவன் மிகவும் வசதி படைத்தவன். யாருக்கோ தொலைபேசிமூலம் பேசி, அவனது ஆட்கள் உயர் அதிகாரிகளோடு பேசி அவனை அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

 

என்னிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக சி.ஐ.டி. அதிகாரியின் உதவியாளரை அனுப்பி வைத்திருந்தனர். அவர் அதிகாலையிலேயே வந்து என்னிடம் வாக்குமூலம் வாங்க ஆரம்பித்தார். எனது வாழ்க்கையில் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் கூறினேன்.

 

அதனைக் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிக்கே தலை சுற்ற ஆரம்பித்தது. இத்தனை படித்தவர், உலகத்தினைச் சுற்றி வந்தவர் நைஜீரியா கென்யா போன்ற இடங்களில் பணியாற்றியவர் இப்படி சாரத்துடன் தன்முன் அமர்ந்து வாக்குமூலம் கொடுப்பதை எண்ணிச் சற்றுக் கலங்கினார்.

 

பிறகு அனைத்தையும் பதிவு செய்தபின்னர், அதனை எழுதி சி.ஐ.டி. உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தார். அதனை முழுதாக வாசித்துப் பார்த்து விட்டு புன்னியா டி சில்வா மறுநாள் காலையில் என்னைப் பார்க்க வந்தார். என்னிடம் ஒன்றும் பேசாமல் கை குலுக்கிவிட்டு “நீங்கள் குற்றமற்றவர் என்று எனக்குத் தெரியும். நான் எல்லா அதிகாரமும் உள்ளவனாக இருந்தால், உங்களை என்னோடு காரில் வை.எம்.சி.ஏவிற்கு அழைத்து சென்று விட்டு விட்டு வந்திருப்பேன். ஆனால் மந்திரியின் உத்தரவின் பேரில் உங்களை நான் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.” என்று கூறினார்.

 

பிறகு என்னையும் டாக்டர் ராஜசுந்தரத்தையும் பனாகொடை இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள இராணுவ அதிகாரிகளிடம் என்னை அடிக்க வேண்டாமெனவும் அவர் ஒன்றும் அறியாதவர் என்றும் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 

அவர் சென்றதுதான் தாமதம் எங்களைச் சுற்ற இராணுவ வீரர்களை நிற்க வைத்து விட்டு பள்ளிச் சிறுவர்களை அழைத்து வந்து எங்களை வேடிக்கைப் பொருட்களைப் போல அவர்களுக்குக் காட்டினார்கள்.
வேடிக்கை பார்க்க நிறையப் பேர் கூடிய நிலையில் என் உடுப்புகளை அவிழ்த்து விட்டு நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் என் நெஞ்சில் ஒருவன் குத்தினான். நான் வலியில் அப்படியே சுருண்டு கீழே விழுந்து விட்டேன். வலியிலும் பயத்திலும் சிறுநீர் கழித்து விட்டேன்.

 

கீழே கிடந்த என் ஆடையும் நனைந்து விட்டது. பின்னர் அந்த சிறுநீரால் நனைந்த ஆடையை உடுத்தச் சொல்லி என்னையும் டொக்டர் ராஜசுந்தரத்தையும் வெலிக்கடை சிறையில் அடைத்தார்கள். அங்கு ஏராளமான பொடியன்களை அடைத்து வைத்திருந்தார்கள்.

 

அவர்கள் எம்மைக் கண்டதும் நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம் என்று சொன்னார்கள். சில சாரங்களை எங்களுக்குக் கொடுத்து உதவினார்கள்.

 

சிறையில் நடந்த சித்திரவதைச் சம்பவங்களையெல்லாம் நான் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். ஏனெனில் மக்களுக்கு இந்த விஷயங்கள் தெரிய வேண்டும். இப்படியெல்லாம் கூட கஷ்டப்பட்டார்களா? என்று அனைவருக்கும் தெரிய வேண்டும்.

 

ஆகவேதான் கூறுகிறேன். சிறையில் சில நேரங்களில் நான்கு காலில் சென்று சாப்பாட்டினைக் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லி அதனை மேற்பார்வையும் செய்வார்கள்.

 

அப்போது அங்கே இன்னொரு அதிகாரி வந்தான். அவன் எங்களுக்கு அன்று ஒரு பரீட்சை வைக்கப்போவதாகக் கூறி எங்களை முழங்காலில் இருக்கச் சொல்லி சாப்பாடுத்தட்டினை வேறொரு மூலையில் வைத்துவிட்டு யார் நான்கு கால்களில் வேகமாகச் சென்று எடுத்துக்கொண்டு வருகிறீர்களோ அவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது என்று கூறினான். நாங்கள் எதிர்க்க வலுவில்லாமல் அவர்களுக்கு கேளிக்கை பொருளாக மாறி வாழ்ந்து கொண்டிருந்தோம்.

 

இதெல்லாம் நடந்த 1983ஆம் ஆண்டு. எனக்கு வயது 63 அல்லது 65 இருக்கும் என்று நினைக்கிறேன்.கதவை உடைத்துத் திறந்து உள்ளே வந்தவர்கள் டொக்டர் ராஜசுந்தரத்தை வெளியில் இழுத்துப்போட்டு அவர் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.

 

பின்னர் அறையின் ஓரத்திற்கு எங்களை ஒதுங்கச் சொல்லி சுடுவதற்காகத் தயாரானார்கள்
சித்திரவதைகள் இருந்ததுதான். ஆனால் இப்படி ஒட்டு மொத்தமாக கொலை செய்வார்கள் என்று நான் அப்போது நினைக்கவில்லை.

 

1983 யூலை 25இல் கொழும்பில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். சிங்கள வெறியர்கள் சிறைச்சாலையின் கீழ் தள அறைகளுக்குள் புகுந்தார்கள். நாங்கள் மேல் மாடியில் அடைக்கப்பட்டிருந்தோம். சிறை அதிகாரிகள் பூட்டுக்களைத் திறந்து சிங்களக் கைதிகளைத் திறந்து விட்டார்கள். அவர்கள் வெறியோடு தமிழர்கள் இருந்த ஒவ்வொரு அறையாகத் தாக்கினார்கள்.

 

ஒரே நாளில் 35 பேர் கொல்லப்பட்டார்கள்.

 

குட்டி மணி, ஜெகன், தங்கதுரை போன்ற போராளிகள் எல்லாம் முதல் நாள் கொல்லப்பட்டார்கள். பின்னர் இரவாகி விட்டதால் நிறுத்தினார்கள்.

 

ஆனால் காயமடைந்தவர்களுக்கு வைத்தியம் பார்க்காதபடியால், ரத்தம் வீணாகி பல இளைஞர்கள் இறந்து கொண்டிருந்தார்கள்.

 

மறு நாள் 26 ஆம் தேதி சிறை அமைதியாக இருந்தது. 27ஆம் தேதி விடிந்ததும் மீண்டும் தாக்கத் தொடங்கினார்கள். எங்களைப் போன்றவர்களை முதல் மாடியில் அடைத்து வைத்திருந்தார்கள்.
நாங்கள் எட்டு, ஒன்பது பேர் வயதானவர்கள் சுமார் 40 அடி அகலமுள்ள அறையில் முதல் மாடியில் இருந்தோம். அதில் டொக்டர் ராஜசுந்தரம், பாதிரியார் சின்னராசா, ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தோம்.
முதல் நாளே டொக்டர் தர்மலிங்கம் – அவருக்கு 75 வயதிருக்கும், – அவர் எங்களிடம் “யாரும் இந்த அறையை உடைத்து சண்டை போட வந்தால் நாமும் சண்டை போட்டுதான் சாகவேண்டும்” என்று கூறினார்.
எப்படியும் நாமும் கொல்லப்படுவோம் என்றார் அவர்.மறுநாள் அவர் கூறியபடியே எங்கள் அறைக்கு வந்தார்கள்.

 

ஆனால் எங்களின் அறை வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்தது. எங்களது பாதுகாவலர் பூட்டிவிட்டு சாவியைக் கொடுக்காமல் போய்விட்டார் . அவர்கள் பூட்டை உடைக்க ஆரம்பித்தார்கள். அப்போது எங்களுடைய ஆட்கள் அவர்களை எதிர்த்துப் போராடினார்கள் .

 

டாக்டர் ராஜசுந்தரத்திற்கு சிங்களம் நன்கு தெரியும் அவர் அவர்களிடம் “எங்களை ஏனப்பா இப்படிக் கொல்கிறீர்கள், எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. நாங்கள் ஈழத்துக்கு ஆதரவாகத்தான் உள்ளோம், ஆனால் நாங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை.” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்தக் கதவினுடைய பூட்டு உடைந்தது.

 

எங்களை அடிப்பதற்காகக் கொண்டுவந்த பொல்லுகளைப் பிடித்து தடுத்துக் கொண்டு டொக்டர் தர்மலிங்கம் நின்றார்.

 

அவருக்கு அந்த வயதில் இருந்த பலம் சொல்லில் அடங்காதது. கதவை உடைத்துத் திறந்து உள்ளே வந்தவர்கள் டொக்டர் ராஜசுந்தரத்தை வெளியில் இழுத்துப்போட்டு அவர் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.

 

பின்னர் அறையின் ஓரத்திற்கு எங்களை ஒதுங்கச் சொல்லி சுடுவதற்காகத் தயாரானார்கள். அந்த நிமிடம் என் மனதில், இப்படிச் சாவது பெருமையானதுதான் என்று தோன்றியது.

 

அந்த நேரம் கீழேயிருந்து ஒரு கொமாண்டர், அவர் ஒரு முஸ்லீம் – எங்களை கீழே அழைத்து வரும்படி உத்தரவிட்டார். எங்களைப் பாதுகாப்பாக கீழே குனிந்து நடக்கும்படி சொல்லி, ஒரு திறந்த பாதை வழியாக அழைத்துச் சென்றார்கள். வழியில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை நான் கண்டேன்.
அதில் பலருடைய உயிர் பிரியாமல் உடல் துடித்துக் கொண்டிருந்தது.

 

அவர்கள் சாகட்டும் என்று அப்படியே விட்டிருந்தார்கள். பின்னர் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று லொறியொன்றில் ஏற்றி குப்புறப்படுக்கச் சொன்னார்கள். அப்படித்தான் நாங்கள் மட்டக்களப்புச் சிறைக்குப் போனோம்.நான் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள்.

 

அங்கும் ஏராளமான பொடியன்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்க ரொம்ப வேதனையாக இருந்தது. அங்கிருந்த பொழுது பலரது உதவியாலும் பல போராளிகள் இணைந்து மட்டக்களப்பு சிறையை உடைத்து எங்களை மீட்டார்கள்.

 

அதில ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும். சிறை உடைப்பின் போது, அங்கிருந்த கைதிகளின் அறைகளைத் திறந்த நேரம், இன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ன செய்தார் என்றால், சிறையில் திருட்டு, பாலியல் குற்றச்சாட்டுக்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாதாரண கைதிகளையும் திறந்து விட்டுவிட்டார்.சிறையை உடைத்து எல்லோரையும் மீட்டு விட்டார்கள் என்றதும் பெரும் எழுச்சி தமிழ் மக்களிடம் காணப்பட்டது. இயக்கங்களுக்கிடையில் அது உரிமைகோரல் போட்டியாகவும் இருந்தது.
மட்டக்களப்பிலிருந்து யாழ்பாணம் போக சுமார் இருபது நாட்களுக்கும் மேலானது. அங்கிருந்து படகு மூலம் ராமேஸ்வரம் தப்பிச் சென்றோம்.”

 

இவ்வாறாக சிறையில் இருந்து தப்பிய டேவிட் ஐயா தமிழகம் சென்ற நினைவுகளை இப்படி மீட்கின்றார்.
” அப்போது தமிழக மக்களும் போராளிகளும் எங்களை வரவேற்ற நினைவு இன்னமும் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

 

ஆனால் 1978இல் ஆரம்பித்த காந்தீயம் அமைப்பின் முதுகெலும்பாக இருந்த டொக்டர் ராஜசுந்தரம் இல்லை என்பதை நினைக்கும் போது மிகுந்த தனிமையை உணர்ந்தேன்.அவரும் அவரது மனைவி காராளசிங்கம் சாந்தியும் எப்பேர்ப்பட்ட மனிதர்கள். மிகவும் சுகபோகமாய் வாழ்ந்த லண்டன் வாழ்வை உதறிவிட்டு காந்தியம் அமைப்பிற்காக ஈழத்திற்கு வந்தவர்கள்.

 

மலையக மக்கள் வாழ்வில் அறிவொளியையும் விவசாயச் சேவைகளையும் செய்த 500 குடிகளைக் கொண்ட எங்கள் காந்தியம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டு டொக்டர் கொல்லப்பட நான் தமிழ்நாட்டிற்கு வந்து இறங்கியிருந்தேன்.

 

அந்தக் காலத்தில் தமிழக மக்கள் போராளிகளை மிகவும் மதித்தார்கள். எங்கு சென்று ஈழப் போராளி என்றாலும் ராஜ உபசாரம்தான். இந்திய அரசும், மாநில அரசும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டதால் இங்கு நல்ல சௌகரியத்துடன் வாழ்ந்தோம். ஆனால் எந்நேரமும் எங்களுக்குள் விடுதலை வேட்கை மட்டுமே இருந்தது. அது ஒன்றுதான் எண்ணம். அது பற்றியே சிந்தித்தோம்.

 

நான் புளொட்டுடன் சில மாதங்கள்தான் வேலை செய்தேன். நான் வந்தவுடன் புளொட்டில் உள்ள உயர்மட்ட ஆட்கள் என்னிடம் அனைத்து முக்கியமான வேலைகளையும் தந்தனர் . நீங்கள்தான் நிர்வாக வேலைகளைப் பார்க்க வேண்டும் என்று கூறினர். கணக்கு வழக்குகள், பத்திரிகை, தொலைத் தொடர்பு, போன்ற வேலைகள் எனக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் புளொட்டில் இணைந்த சில மாதங்களிலேயே எனக்கு அது சரிவரவில்லை.

 

ஒரு குழுவை அமைத்து அவர்கள்தான் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு தனி நபர் சர்வாதிகாரி போல இருந்து கொண்டு முடிவுகளை எடுக்க முடியாது என்று முகுந்தனிடம் சொன்னேன். முகுந்தன் இதைக் கேட்டு அமைதியாக இருந்தார். பின்னர் நான் உமா மகேஸ்வரனுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு என் அறையில் இருந்த ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த போது உமா எங்கே செல்கின்றீர்கள் எனக் கேட்டார். நான் எல்லாவற்றையும் சொன்னேன். பின்னர் கடும் சினங்கொண்டவராக அவர் சொன்னார் “உமக்கு எப்படி பாடம் படிப்பிக்க வேண்டும் என எமக்குத் தெரியும்”நான் வெளியேறி அந்த நகரத்தின் தெருவழியாக நடக்கத் துவங்கினேன்.

 

அண்ணா நகர் பேருந்து டெப்போ பக்கத்தில் சென்று கொண்டிருந்த என்னை காரில் வந்து தூக்கிச் சென்றார்கள். இப்போது கோயம்பேடு சந்தை, பேருந்து நிலையம் என எந்நேரமும் பரபரப்பான இடமாக இருக்குமிடம் அந்நாட்களில் மனித நடமாட்டம் அற்ற காடு போல இருக்கும். அந்தப் பக்கம் என்னைக் கொண்டு போனதும் நான் உரக்கக் கத்தினேன். எனது குரலைக்கேட்ட அந்த ஓட்டுனர் “யாரையடா பிடித்து வந்திருக்கிறியள் டேவிட் ஐயாவையா” என்று கேட்டு எனது கட்டுகளை அவிழ்த்து விட்டான்.

 

உண்மையில் அவர்கள் வேறு யாரையோ பிடிக்க வந்து அடையாளம் தெரியாமல் என்னைப் பிடித்துச் சென்று விட்டார்கள். உண்மையில் என்னைப் பிடிப்பதும் அவர்களுக்கு ஒரு நோக்கமாக இருந்த போதிலும், அது அவசரத் தேவையாக இருக்கவில்லை. ஒரு வேளை அவர்கள் சந்ததியாரைப் பிடிக்க வந்திருக்கலாம். பின்னர் நான் இரவு ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டேன்.

 

ஒரு வழியாக அறைக்கு வந்து சேர்ந்த போது சந்ததியார் எனக்காக அங்கே காத்திருந்தார். நான் அவரை எச்சரித்தேன். உன்னைப் பிடிக்க வந்துதான் தெரியாமல் என்னைப் பிடித்துச் சென்று விட்டார்கள். நீ கவனமாக இரு என்று எச்சரித்தேன். நான் திரும்பி வந்த மூன்றாம் நாள் சந்ததியாரைப் பிடித்துச் சென்றார்கள்.

 

அவன் என் அறைக்கு அடிக்கடி வருவான் என்றாலும் அவன் தங்கியிருந்த இடம் வேறு. அதை ரகசியமாக அறிந்து அங்கு போய்தான் அவனை பிடித்துச் சென்றார்கள். என்னையும் அழைத்து விசாரித்தார்கள். நான் விசாரிக்கப்படும் வரை சந்ததியார் உயிரோடுதான் இருந்தார். பின்னர் அவருக்கு என்னவானது என்றே தெரியவில்லை. வல்லநாட்டிலோ, ஒரத்தநாட்டிலோ கொண்டு போய் அவர்கள் அவனை கொன்றிருக்கக் கூடும்.

 

சந்தியார் எப்பேர்பட்ட மனிதன். எளிமையிலும் எளிமையானவன். இடைவிடாது மக்களைப் பற்றியும் ஏழைகளைப் பற்றியும் சிந்தித்த அவனை அப்படி அவர்கள் கொலை செய்திருக்கக் கூடாது.

 

பிரபாகரனின் அரசியலில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவரை நான் சிறந்த தலைவராகப் பார்க்கிறேன். அன்றைக்கிருந்த போராளிக் குழுக்களில் அவர் மட்டும்தான் தனித் தமிழ் ஈழத்திற்காக எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை

 

எல்லோரும் புலிகளின் கொலைகளை மட்டும் பேசுவார்கள். ஆனால் எல்லா இயக்கங்களும் அப்படித்தான் இருந்தது. புலிகள் எப்போதுமே பிறத்தியாரின் நெருக்குதலுக்கு அஞ்சாமல் சுய இயக்கமாக செயல்பட்டார்கள்.

 

இந்தியாவின் சொல்வழி கேட்டோ, அல்லது வேறு தலைவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவோ இருக்கவில்லை. என்னைக் கேட்டால்

 

பிரபாகரனின் அரசியலில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவரை நான் சிறந்த தலைவராகப் பார்க்கிறேன். அன்றைக்கிருந்த போராளிக் குழுக்களில் அவர் மட்டும்தான் தனித் தமிழ் ஈழத்திற்காக எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவர்களும் அரசியல் கொலைகளைச் செய்தார்கள். இதனால் பெரும் சோர்வுக்குள்ளாகி அமைப்புகளிலிருந்து ஒதுங்கியிருந்தேன்.
161983இல் இங்கு வந்தேன். வந்த புதிதில் போராளிகள் என்றால் பெரும் மரியாதை. மக்கள் எல்லாப் போராளிகளையும் நாயகர்களாகப் பார்த்தார்கள்.

 

இவர்கள் இங்குள்ள சனங்களிடமும் தங்களின் சாகசங்களைக் காட்டினார்கள். அது பல பிரச்சனைகளை இங்கே உருவாக்கினாலும். மக்களிடம் போராளிகளுக்கென்று செல்வாக்கிருந்தது. ஆனால் குறிப்பாக ராஜீவ் கொலைக்குப் பிறகு எல்லா நிலைமைகளும் மாறிப் போனது. மரியாதை போனதென்று இல்லாமல், மக்கள் போராளிகளை அச்சத்தோடு பார்த்த காலமும் வந்தது.

 

ஒரு சில இயக்கங்கள் தவிர்த்து இங்குள்ள அரசியல்வாதிகள் தங்களின் தேவைகளுக்கு ஏற்றது போல ஈழ மக்களின் பிரச்சனைகளைப் பேசுகிறார்கள். துரோகமும், வஞ்சகமும் சூதுமான அரசியல் களம் தமிழகத்தினுடையது. பல நேரங்களில் இங்கு வாழ்வதை விட சிங்களவன் கையால் குண்டடி பட்டு செத்துப் போயிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

 

நான் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வரும் வருவாயைக் கொண்டு வாழ்ந்தேன். அது எனக்குப் போதுமானதாக இருந்தது. சுயமரியாதையாக வாழ பணம் தேவையில்லை. ஆசைகளைச் சுருக்கிக் கொண்டு வாழ்ந்தாலே போதும்.

 

இங்கு வந்த பின்னர் பெரியாரை வாசித்தேன். அவர் தமிழக மக்களின் தன்மானத்திற்காக போராடிய தன்னிகரில்லாத தலைவர். ஆனால் அவர் பெயரை பயன்படுத்துகிறவர்கள் அவரைப் போல உண்மையானவர்கள் இல்லை.

 

ஒரு முறை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஈழ அகதிகளுக்கான கிளியரிங் சான்றிதழுக்காகச் சென்றேன். பல மணி நேரம் என்னைக் காக்க வைத்த பின்னர், என் கையில் இருந்த பேப்பரை கிழித்து வீசினார் அந்த இன்ஸ்பெக்டர். இதுதான் தமிழகம்.

 

அரசியல்வாதிகள் சும்மா மேடையில் பேசுவார்கள். ஆனால் எங்களின் நிலை இதுதான். இங்கே ஆறு விதமான அகதிகள் உள்ளனர். அவர்களின் திபெத் அகதிகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளனர். ஆனால் ஒரு ஒழுங்கான கட்டிடம் கூட ஈழ சனங்களுக்கு இல்லை. சாக்குப் பைகளால் மூடப்பட்ட கொட்டகைகளுக்குள் முகாம் என்று வாழ்கிறார்கள். என்னைப் போல வெளியில் இருப்போர் நிலமையும் கொடுமைதான்.

 

ஒவ்வொரு ஆறு மாதமும் பொலிசாரிடம் சான்றிதழ் பெற்று, வாடகைக்கு இருக்கும் வீட்டு ஓனரிடம் கடிதம் பெற்று குடிவரவு அதிகாரியிடம் சென்று கொடுத்தால் தங்கியிருப்பதற்கான அனுமதியை அடுத்த ஆறு மாதத்திற்கு நீட்டிப்பார்கள்.

 

இப்படி ஒவ்வொரு ஆறு மாதமும் செய்ய வேண்டும். இதற்கு நாய் படாத பாடு படவேண்டும். 90 வயதில் ஓவ்வொரு முறையும் நான் இதற்காக அலைக்கிறேன்.ஆனாலும் நான் இங்கும் பல உருப்படியான காரியங்கள் செய்தேன். பெரியார் தொடர்பாக எழுதினேன். மிக முக்கியமாக Tamil Eelam Freedom Struggle என்ற நூலை எழுதினேன். என்னைப் பற்றியும் சிலர் எழுதியிருக்கிறார்கள்.

 

மேற்குலக நாடுகளில் வாழும் அகதிகளைப் போன்ற உரிமைகளை நாங்கள் அனுபவிக்கவில்லை. தவிரவும் ரெட் புக் எனப்படும், அபாயமானவர்கள் பட்டியலில் தொண்ணூறு வயதான என்னையும் வைத்திருக்கிறார்கள். என்றாலும் நான் நிச்சயம் இலங்கைக்குச் செல்ல மாட்டேன். அது என் மக்களைக் கொன்றொழித்த பூமி. ஒடுக்கப்பட்டு வாழ்விழந்த மக்களின் நிலையை இந்த வயதில் என்னால் தாங்க இயலாது.”

 

(அருள் எழிலன் என்ற உணர்வாலருக்கு ஐயா வழங்கிய செவ்வியில் இருந்து சில பகுதிகளாக மட்டும் எடுக்கப்பட்டவை மேலே உள்ள ஐயாவின் உணர்வுகள். நன்றி அருள் எழிலன் )

 

“தமிழீழம் அமைந்தால் ஈழத்திற்கு செல்வேன்!” என உறுதியோடு தமிழகத்தில் ஐயா வாழ்ந்த காலங்களில் மிகுந்த மன சுமையை ஏதிலியாக உணர்ந்திருந்தார். கடவுச் சீட்டும் இன்றி ஐயா தாய் மண் ஆசையோடு ஏங்கிய குறை ஈற்றில் தீர்ந்தது

 

கடந்த யூன் மாதம்தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய டேவிட் அய்யா கிளிநொச்சி தருமபுரத்தில் ஓர் முதியோர் இல்லத்தில் கடைசி நாட்களை கழித்தார். சென்னையில் தானொரு அகதி என்ற குறை நீங்கி இறுதி நாட்களில் தாயக மண்ணின் காற்று அவருக்குள் நிறைவையே கொடுத்திருக்கும். இருந்தாலும் அடிமைப்பட்டிருக்கும் எங்கள் தேசத்தின் அடிமை நிலை அவர் மனதில் முழுமையான மகிழ்வை உணர விடாமல் கனதியான நெருடல்களையும் வலிகளையும் கொடுத்து இருக்கும் என்பதும் உண்மை தான்.
எப்படியோ ஓர் அகதியாக அல்லாமல் அவர் விடைபெற்றார். தமிழரின் துயர் தீரும் நாளே ஐயாவின் ஆன்மா அமைதி கொள்ளும் நாள். இனத் துயர் தீர்க்கும் விடுதலையை வென்றெடுப்பதே அவருக்கு நாம் ஆற்றும் இறுதிக் கடன்!

 

——————————————————————–

டேவிட் ஐயா (அருளானந்தம் டேவிட்) வுக்கான கனடிய மண்ணில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் நினைவேந்தல் நிகழ்வு :

 

நாள்: 18th October 2015, ஞாயிற்றுக்கிழமை

 

இடம்: Don Montgomery CRC, 2467 Eglinton Avenue East, (Kennedy/Eglinton), Scarborough.
நேரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

ஐயாவுடனான நினைவுகளைப் பகிர்ந்து அவர் நினைவுதனைப் போற்றுவோமாக‌!

 

தொடர்புகளுக்கு: 647. 839 5793 / 416. 264 8591 / 416. 471 8019 / @Facebook: Anbu Anbu /Gnanam Anthony

சென்று வாருங்கள்.. //கடந்த யூன் மாதம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய டேவிட் அய்யா கிளிநொச்சி தருமபுரத்தில் ஓர் முதியோர் இல்லத்தில் கடைசி நாட்களை கழித்தார். சென்னையில் தானொரு அகதி என்ற பாரம் அவருக்கு நிறையவே இருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஓர் அகதியாக அல்லாமல் அவர் விடைபெற்றார்.

Gepostet von Sayanthan Kathir am Sonntag, 11. Oktober 2015