தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் பெயர்ப்பட்டியலை சிறீலங்கா வாபஸ் பெற வேண்டும் – பன்னாட்டு கண்காணிப்பகம்!

0
444

தமிழர்களின் அமைதியான செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் முயற்சியாக சிறீலங்கா அரசினால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

சிறீலங்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் சர்வதேசத்தில் இயங்கிவரும் 16 தமிழ் அமைப்புக்கள் பெயரிடப்பட்டுள்ளமையானது, நாட்டிலுள்ள சிறுபான்மை தமிழர்களின் அமைதியான செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் முயற்சியாக கருதப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கும் நபர்கள் தொடர்பில், சிறீலங்கா அரசாங்கம், சர்வதேச நாடுகளின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, ஒத்துழைப்பு ரீதியில் அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும் என அந்த கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

BAdamsHRWx100
சட்டவிதிகளுக்கு உட்படாத இந்த அமைப்புக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் அரசாங்கம் சாட்சியங்களை முன்வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில், அந்த பெயர்ப்பட்டியலை வாபஸ் பெற வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் இவ்வாறான பெயர்ப்பட்டியலொன்றை வெளியிட்டதன் ஊடாக, நாட்டிற்குள் வருகின்ற நபர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், எந்தவொரு காரணமும் இன்றி தடுத்து வைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செயலிழந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இலங்கை அரசாங்கம் தெளிவற்ற மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை பயன்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வலயத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாட்டின் ஊடாக சர்வதேச ரீதியில் தொடர்புகளை வைத்துள்ள உள்நாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தண்டனை விதிப்பதற்கான இயலுமை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.