chunnakam-powerயாழ் குடாநாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலத்தடி நீருடன் கலந்துள்ள கழிவு எண்ணெய் தொடர்பாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் வளர்ந்து வரும் அதேவேளை யார் யாருக்கெதிராகவெல்லாம் போராட வேண்டி இருக்கின்றது என்ற பெயர்ப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது….

 

நாம் போராட வேண்டியவர்களின் விபரங்கள்: (பிரதி: சித்திரகுப்தனார்)

 

1. ஏறத்தாழ 400, 000 லீற்றர் கழிவு எண்ணெயினை 150அடி ஆழத்தில் துளையிட்டு நிலத்தின் அடியில் விட்ட குறித்த அனல் மின் உற்பத்தி நிலைய அதிகாரிகள்

 

2. 2012 ம் ஆண்டில் இருந்தே இது தொடர்பான முறைப்பாட்டுக் கடிதங்களைக் கண்டும் காணாது விட்ட பிரதேச சபை அதிகாரி மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி

 

3. 2013 ம் ஆண்டு மிகத் தெளிவாகச் செய்யப்பட்ட விரிவான ஆராய்ச்சி மூலம் குறித்த அனல் மின் நிலையமே இப்பிரச்சினைக்குக் காரணம் எனத் தெரியவந்த போதிலும் 2014 டிசம்பர் வரையும் அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்த நீர்ப்பாசனத் திணைக்கள இரசாயனவியலாளர (எம்மிடம் எப்படி அறிக்கை வந்தது என்பது வேறு கதை)

 

4. எந்த வித அனுமதியும் இன்றி மக்கள் குடியிருப்பின் நட்ட நடுவில் அமைந்துள்ள இம்மின்னுற்பத்தி நிலையத்தில் இவ்வாறான எந்தவித பிரச்சினையும் இல்லை என இன்று வரை மறுத்துக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் அதிகார சபையின் உயர் அதிகாரியான அம்மணி அவர்கள்.

 

5. மக்கள் தண்ணீர் தண்ணீர் என அலையும் போது தனக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள இன்னொரு எண்ணெய் கலந்த கிணற்றிலிருந்து தண்ணீரை விழா வைத்து வழங்கும் பிரதேசசபை அதிகாரிகள்

 

6. வழக்கு விசாரணையின் போது மன்னார் போன்று இங்கும் எண்ணெய் நிலத்தடியில் இருப்பதாக வாதாடிய கொழும்பில் இருந்து வந்த வழக்கறிஞர்கள்

 

7. வழக்கு விசாரணை என்றவுடன் அலுவலகத்தில் இருந்த மக்களால் வழங்கப்பட்ட கடிதங்களை கோப்புகளில் இருந்து அகற்றிய அந்த நல்ல சுகாதார வைத்திய அதிகாரி

 

8. உண்ணாவிரதம் இருக்கும் போதும் மக்கள் ஒன்றினைந்து போராடும் போதும் அவர்கள் இரணைமடுக்குளத்து நீரை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்காகத் திடடமிட்டுச் செயற்படுகிறார்கள் எனக் கூறிய பிரதேசவாதம் பேசும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தனது கடமைகளையே ஒழுங்காகச் செய்யாத வைத்திய அதிகாரி

 

9. உண்ணாவிரதம் இருக்கும் போது அடிக்கடி வந்து சுகம் விசாரிக்கும, கதைத்தே களைக்க வைக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி.

 

10. கடந்த ஒரு வருட காலமாகப் பல்வேறு குழுக்களை அமைத்து குழுக்களில் இருப்பவர்கள் யாரென்றே தெரியாத இயங்காத குழுக்கள்

 

11. இந்தியா வரும், யப்பான் வரும் இன்னும் பல நாடுகள் வரும் என்று கதைவிட்டுக் காலத்தைக் கடத்தும் அமைச்சர்

 

12. உண்ணாவிரதப் போராட்டத்தை எவ்வாறு அடக்கலாம் எனக் கூட்டம் போட்டு யோசித்த எம்மால் தெரிவு செய்யப்பட்ட மகாணசபை அமைச்சர்கள்

 

13. திட்டமிட்டு மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கும் செய்திகளைப் பிரசுரிக்கும் மரணஅறிவித்தல் மற்றும் நினைவஞ்சலிகளால் இயங்கும் மக்கள் மனம் கவரும் பத்திரிகை

 

14. கண்ணால் தெளிவாகத் தெரிந்த எண்ணெய் கலந்த தண்ணீரில் எண்ணெய் கலக்கவில்லை என அறிக்கை வழங்கிய நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள்

 

15. இறுதியாக போராட்டங்கள் தேவையற்றவை என அரசியல்வாதிகள் விடும் அறிக்கைகளைத் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் சில வைத்திய நண்பர்கள்.

 

தண்ணீர்த் தாகம்! (பாகம் 2)

 

சொன்னபடி வந்தார்கள்!

 

இன்று 26.01.2014 அன்று உறுதியளித்தபடி மின்சக்தி எரிபொருள் அமைச்சினதும் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகத்தினதும் 7 பேர் கொண்ட அதிகாரிகள் சுன்னாகம் குடிநீர்ப்பிரச்சினை சம்பந்தமாக ஆய்வதற்காக வருகைதந்தார்கள். கடந்த 3 வருடங்களில் பல்வேறு அழுத்தங்களி;ன் பின்னர் முதற்தடவையாக இவ்வாறானதொரு குழு வருகைதந்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கின்ற ;விடயம் ஒன்றாகும். காலை 8.30 மணிக்கே தமது பணிகளை ஆரம்பித்திருந்த போதிலும் யாழ்ப்பாணத்து அதிகாரி ஒருவரைத் தேடிப்பிடிப்பதற்கு காலை 11.00 மணியாகி விட்டதாகத் தகவல்.

 

நீர்ப்பாசணத் திணைக்களத்தினைச் சார்ந்த அதிகாரி ஒருவர் மற்றும் சுற்றுச் சூழல் அதிகாரசபையின் அம்மணி ஆகியோருக்கு இது மகிழ்ச்சியான விடயமாகத் தெரியவில்லை. உடனடியாகவே மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகள் எடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவசர அவசரமாக அங்கே வருகைதந்த பத்திரிகை அச்சடிக்கும் அரசியல்வாதி ஒருவர் பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்ததாகவும் பேசிக்கொள்ளப்படுகின்றது. எது எவ்வாறெனினும் நிலத்தடி நீரினுள் கலந்துள்ள எண்ணெயானது மிக வேகமாகப் பரவி வருவது அனைவரும் விளங்கிய உண்மை. வெகு விரைவில் யாழ் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கிணற்றினுள்ளும் எண்ணெய் வந்தபின்னர் தான் உண்மை ரிப்போர்ட்கள் வெளிவருமோ தெரியவில்லை…!

 

தண்ணீர்த் தாகம்! (பாகம் 3)

 

சுடுகாட்டில் அரசியல் நடாத்தப்போகும் அரசியல் வாதிகள்!

 

power-08இன்று 27.01.2014 அன்று சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்;பாக நீண்ட காலமாக நடைபெற்றுவந்த வழக்கு விசாரணைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த மின் உற்பத்தி நிறுவனத்தை மூடிவிடுமாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இத் தீர்ப்பானது பொதுமக்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரியதொரு வெற்றியாகும். இதற்காக இரவு பகலாகப் பாடுபட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தினர் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்கள்.

 

நேற்றைய தினம் நடைபெற்ற சுகாதாரத் திணைக்களத்தின் மாகாண நிறுவனத் தலைவர்களுக்கான கூட்டத்தில் மாகாண சுகாதார அமைச்சர் அவர்கள் நீர்ப்பிரச்சனையில் தற்போது நடைபெறும் போராட்டங்களைக் கண்டித்துப் பேசியிருக்கின்றார். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களை வீணாகப் பிழையாக வழிநடாத்துவதாகவும் பொய்யான துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதாகவும் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். எதிர்வரும் காலத்தில் எம் போன்ற அரசஊழியர்கள் ஊடகங்களிற்குத் தகவல் கொடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். (“நாம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இதுவே முதல் தடவை என்பதால் மிகவும் பயமடைந்து இத்துடன் எமது நடவடிக்கைகளைக் கைவிடுவதாக முடிவெடுத்திருக்கின்றோம்!” )

 

வேறு ஒரு முக்கிய மாகாண அமைச்சர் நேற்றைய தினம் இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்தியத் தூதரகத்தின் யாழ் கிளையில் நடைபெற்ற வைபவத்தில் தன்னுடன் இப்பிரச்சினை தொடர்பாகக் கருத்துக்கேட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் “அங்கு ஒரு பிரச்சினையும் இல்லை, இவர்கள் கொஞ்சப் பேர் சும்மா பெருப்பிக்கின்றார்கள்” என்று கூறியிருக்கின்றார். வாழ்க சுற்றுச் சூழல்!

 

சுன்னாகம் பகுதியில் சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தினர் போத்தல் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி அதில் புட்டு அல்;லது இடியப்பம் அவித்த பின்னர் அந்த நீரைத் தமது பிள்ளைகளுக்குக் கொடுப்பதாகவும் வளர்ந்தவர்களாகிய தாங்கள் சாதாரண நீரைக் குடிப்பதாகவும் இன்று காலை நண்பர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் நாம் செய்ய வேண்டிய ஏதோ ஒன்றைத் தாமதமாகச் செய்வதாக நான் உணர்ந்தேன்

 

இன்னுமொரு நண்பர் அவசரமாகத் தொடர்பு கொண்டு இதில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு ஏதோ அரசியல் பின்னணி இருப்பதாகச் சந்தேகம் கொள்வதாகத் தெரிவித்தார். நான் சிரித்து விட்டுச் சொன்னேன் “ சில காலத்தில் அரசியல் நடாத்துவதற்கு இங்கு எவரும் இருக்கப் போவதில்லை,அப்போது சுடுகாடான எமது பிரதேசத்தில் சுடுகாட்டுச் சூழலியலும் சுடுகாட்டுச் சுகாதாரமும் நடாத்திப் பார்க்கட்டும்” என்றேன்.

 

தண்ணீர்த் தாகம்! (பாகம் 4)

 

7வது குழுவும் இன்று அமைக்கப்பட்டது

 

இன்று 28.01.2015 அன்று அரசாங்க அதிபர் மற்றும் முதல்வர் தலமையில் நடாத்தப்பட்ட அவசரக் கூட்டத்தில் (நீதிமன்ற உத்தரவின் பின்னர்) ஏற்கனவே இயங்காமல் இருக்கும் பல்வேறு குழுக்களுக்கு மேலதிகமான இன்னுமொரு குழுவும் அமைக்கப்படிருக்கின்றது. கடந்தகாலக் குழுக்களினால் எந்தவித பயனும் அற்ற நிலையில் இக்குழு அமைக்கப்பட்டிருப்பது அனைவரையும் வியப்பிற்கு ஆழ்த்தியுள்ளது

 

இக்குழுவின் விசேட அம்சமாக சுகாதாரப் பிரச்சினையான இவ்விடயத்தை ஆராயும் குழுவில் சுகாதார வைத்திய அதிகாரிகள் இருக்கத் தேவையில்லை என சிலரால் கூறப்பட்டு அவர்கள் இல்லாமலேயே குழுவும் அமைக்கப்பட்டு விட்டது.(சுகாதார வைத்திய அதிகாரிகள் கேள்விகள் கேட்பார்கள் என்பதனாலோ?)

 

இந்நிலையில் தற்போது நிலத்தடி நீருடன் கலக்கும் எண்ணெய்ப் படலாமானது கோண்டாவில் மற்றும் சண்டிலிப்பாயின் மாசியப்பிட்டிப் பகுதிக்கும் சென்று விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இன்னிலையில் பொது மக்களுக்கான நன்னீர் விநியோகம் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இதற்குப் பொறுப்பான குறிப்பிட்ட பகுதி பிரதேசசபைத் தவிசாளர்கள் எண்ணெய்க் கதை பொய் என்பதையே கூறித்திரிவதாக அறிய முடிகின்றது. நீதிமன்ற உத்தரவினை அடுத்து கண்ணைமூடி நித்திரை செய்த சில அதிகாரிகள் இன்று முதல் கடமையைச் செய்ய வேண்டும் என்று சிந்திக்கிறார்கள்

 

வருகின்ற வாரத்தில் நாம் நலன் விரும்பிகள் குழு ஒன்றை அமைக்க எண்ணி இருப்பதுடன் பொதுமக்களுக்கான விளிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் என்பவற்றை இதன் மூலம் செய்வதற்கு எண்ணி உள்ளோம். வருகின்ற வாரத்தின் பின்னர் யாழ் குடாநாட்டின் பல்கலைக்கழக ஆசிரியர்கள், அரச ஊழியர்கள்,மாணவர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு பொது மக்களினையும் ஒன்றிணைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறலாம் எனப் பேசப்படுகின்றது

 

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் நலன்விரும்பிகள் அனைவரும் நமது தேசத்தின் முக்கிய பிரச்சனை சம்பந்தமாக அக்கறையுடன் செயற்படுமாறும் தாய்நாட்டில் வாழும் உறவுகளுக்கு கழிவு எண்ணெய் கலந்த நீரை அருந்த வேண்டாம் என அழுத்தமாகச் சொல்லும் படியும் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

 

தண்ணீர்த் தாகம்! (பாகம் 5)

 

உண்மை காக்கும் சமூக வலைத்தளங்கள் (Facebook)

 

தண்ணீர்ப்பிரச்சினையானது நாளுக்கு நாள் பல்வேறு கோணங்களில் வளர்ந்து கொண்டே வருகின்றது. இனுவில் போன்ற பகுதிகளில் புதிதாக கிணறுகளில் அதிகளவு எண்ணெய்ப்படலம் தென்படுவதனால் மக்கள் பீதி அடைந்து நல்ல தண்ணீருக்காக அலைகிறார்கள். திடீரென நன்னீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பிரதேச சபையினரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள். இதற்காக ஏராளமான தண்ணீர் பௌசர் வண்டிகளும் தண்ணீர்த் தாங்கிகளும் தேவைப்படுகின்றன. இவற்றை மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஒழுங்கு செய்ய வேண்டிய அமைச்சர்களும் அதிகாரிகளும் குழு அமைப்பதிலும் பொய்யான பிரச்சாரங்கள் செய்வதிலுமே கண்ணாய் இருக்கிறார்கள்

 

வைத்தியர்களுக்குத் தடை

 

பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களை விளிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுற்றுச் சூழல் அமைச்சரும் மாகாண சுகாதார அமைச்சரும் கடுமையாக உத்தரவிட்டிருக்கின்றார்கள். மக்கள் விளிப்படைந்து தம்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக அவர்கள் உண்ர்கிறார்களாம். ஊடகங்களுக்கு வைத்திய அதிகாரிகள் தகவல் வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதான கண்டிப்பான கடிதம் இன்று வழங்கப்பட்டிருக்கின்றது. இது முற்றுமுழுதான அடக்குமுறையான நடவடிக்கை என்பதுடன் எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் எமது கருத்துச் சுதந்திரத்தையும் எமது நற்பணிகளையும் அடக்குவது என்பது கீழ்த்தரமான நடவடிக்கை ஒன்றாகும்

 

பொய்யான பிரச்சாரம்

 

இவ்வளவு பிரச்சினைகளும் நடைபெறும் போதும் தூங்கிக் கிடந்த உதயன் பத்திரிகையானது இன்று இது தொடர்பாகப் பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளது. கடமையைச் செய்யத்தவறிய வைத்தியர்களே தற்போது போராட்டம் நடாத்துவதாக இப்பிரச்சினையின் எந்தவித் பின்னணியும் தெரியாமல் எழுதி இருக்கிறார்கள். உண்மையிலேயே கடந்த ஒரு வருடமாக இரவு பகலாக இவ்வழக்கை ஒழுங்கமைத்து பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் போராடியவர்கள் சில வைத்தியர்கள், சட்டத்தரணிகள, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்கள். அந்த வேளை இந்ந அமைச்சர்களுக்கும் உதயன் பத்திரிகைக்கும் இவ்வாறானதொரு பிரச்சினை இருப்பது தெரிந்திருக்க நியாயமில்லை. மருத்துவர்கள் சொல்வது போல் இந்நீரினைக் குடிப்பதால் எந்தவித பாதிப்பும் வராது என்று பிரதேசசபைத் தவிசாளர் ஒருவர் புனைபெயரில் எழுதிய கடிதம் ஒன்றும் உதயனில் வெளிவந்துள்ளது. இவர்களது மருத்துவ அறிவை எவ்வாறு போற்றுவது என்ற தெரியவில்லை

 

நண்பர்களே!

 

இப்பிரச்சினையைத் தீர்பதிலும் மக்களை இதிலிருந்து விரைவாகக் காப்பதிலும் இந்த அமைச்சர்களோ சில ஊடகங்களோ துளிஅளவும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் ஆகிய எமக்கு பெரிதும் உதவப் போவது சமூக வலைத்தளங்களே.
தயவு செய்து எமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம்! செய்திகளை விரைவாகப் பரப்புவோம்! விரைவான நடவடிக்கை மூலம் எமது வளமான தேசத்தை இந்த அளவிலாவது காப்பாற்றுவோம்!

 

(முக்கிய குறிப்பு: கழிவு எண்ணெய் பரந்து யாழ் குடாநாடே சுடுகாடானால் தடைபோடும் ஒரு அமைச்சர் இந்தியாவிலும் இன்னொரு அமைச்சர் வவுனியாவிலும் பத்திரிகையை நடாத்துவர் அவுஸ்திரேலியாவிலும் குடியேறுவார்கள். அவர்களுக்கு யாழ்ப்பாணம் தற்காலிகமான தங்குமிடம் மாத்திரமே! எமக்கோ இது தாயினும் மேலான தாய்நாடு!

 

https://www.facebook.com/photo.php?fbid=10153140318704866&set=a.413300414865.188802.834144865&type=1&theater


—————————————————————————————————————-