TN-flood76அது முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஆறு வருடங்கள் முந்திய மே மாதம். சமாதானம் மலரும் என்ற கனவோடு சாதாரண பொதுமக்கள் இருந்த காலம். சிறீலங்காவின் தென் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக, உலர் உணவுப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சேகரிப்பதற்கு வட-கிழக்கில் செயற்பட்ட சமூக அமைப்புகளை விடுதலைப் புலிகள் உள்வாங்கினார்கள். அதேவேளை, அரச சார்பற்ற நிறுவனங்களும், சிவில் சமூக அமைப்புகளும் இந்த மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டார்கள். குறுகிய காலப்பகுதிக்குள் பெருந்தொகையான உதவிகள் குவிந்தன.

 

சுமார் மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் ஆறு பாரவூர்திகள் 2003 மே 22 கொழும்பை வந்தடைந்தன. அன்றே அவை பாதிக்கப்ட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

 

அன்றைய காலப்பகுதியில் அமைச்சராகவிருந்த காலஞ்சென்ற பெ.சந்திரசேகரன் அவர்களும் விடுதலைப் புலிகளும் இணைந்து உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள். களுத்துறையில் ஜே.வி.பியின் இனாவாத செயற்பாடுகளையும் தாண்டி மனிதாபிமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. களுத்துறையை தொடர்ந்து மாத்தறைக்கு சென்ற விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள், தாம் கொண்டு சென்ற நிவாரணப் பொருட்களை அமைச்சர் மகிந்த விஜயசேகராவிடம் கையளித்தனர். அதன்பிற்பாடு அங்கு பொதுக்கூட்டம் ஒன்றிலும் பங்கெடுத்திருந்தனர்.

 

2005 ஒகஸ்ட் கற்றினா சூறாவளி அமெரிக்காவை உலுக்கியது. இதனால், சுமார் 1800 பேர் மரணமடைந்தார்கள். அமெரிக்கா பெரும் நிதிப்பலத்தோடு இருந்தாலும், தமிழர் தரப்பின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் முகமாக தம்மால் இயன்ற உதவியை செய்ய முன்வந்தது தமிழர் புனர்வாழ்வுக் கழகம்; அதன் ஒரு கட்டமாக நியுயோர்க்கை தளமாகக் கொண்ட சிற்றிகோப் என்ற மனிதாபிமான அமைப்பிடம் 12,500 அமெரிக்க டொலர் பெறுமதியான காசோலைகளை கையளித்தது.

 

காசோலைகளை கையளித்தது. (சிற்றிகோப் அமைப்பு சுமார் மூன்று மில்லியின் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வட-கிழக்கு மக்களுக்கு அனுப்பி வைத்ததுடன், அதன் பணியாளர்கள் மூவர் சுமார் மூன்று மாதம் இலங்கைத் தீவில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.)

 

சிறீலங்காவோடு நெருங்கிய இராணுவ உறவை பேணும் ஒரு நாடாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது. 2005 ஒக்டோபரில் பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் காஸ்மீர் பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக சுமார் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இந்தப் பேரவலத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியது தமிழர் தரப்பு.

 

உதவிகளை வழங்கிய மேடையில் வைத்தே ஒரு இறுக்கமான செய்தியையும் சொன்னார்கள். பாகிஸ்தான் சிறீலங்காவுக்கு வழங்கிய பல்குழல் பீரங்கிகள் பல ஆயிரக்கணக்கான எமது மக்களின் உயிரைப் பறித்தது. ஆனால், அவலங்களை உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், எமது மனித நேயத்தை வெளிப்படுத்தும் முகமாக இந்த உதவிகளை செய்கிறோம் என்பதே அந்தச் செய்தி.

 

எதிராளிகளாக இருந்தவர்களே பேரிடரை எதிர்கொண்ட போது, நட்பை, நன்றியுணர்வை, மனிதாபிமானத்தை தமிழர் தரப்பு வெளிப்படுத்தியது. ஆனால், இது வரலாறாக மட்டும் இருந்து விடக் கூடாது.

 

ஆதலால், தத்தளிக்கும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு நட்பை, நன்றியுணர்வை, மனிதாபிமானத்தை, ஒருமைப்பாட்டை தாமதமின்றி வெளிக்காட்ட வேண்டியது நன்றியுணர்வும், நட்புணர்வும் மனிதாபிமானமும் உடைய ஒவ்வொரு ஈழத்தமிழர்களினதும் கடமையும் பொறுப்புமாகிறது.