fasting-tnதனித் தமிழீழம்’ தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நடத்த வேண்டும் எனக் கோரும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றும்படி வேண்டி தஞ்சாவூரில் சாகும் வரை உண்ணாவிரதப் போரில் குதித்திருக்கும் ஒன்பது தமிழக மாணவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்தமையை அடுத்து அவர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்.

தங்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஐந்து மாணவர்கள் உண்ணாவிரதத்தில் குதித்தனர். அவர்களுடன் நான்கு மாணவர்கள் நேற்று இணைந்து கொண்டனர்.

ஆனால் ஆரம்பத்தில் உண்ணாவிரத்தில் குதித்த பி.கார்த்திக் என்ற மாணவன் மிகப் பலவீனமான நிலையை எட்டியமையை அடுத்து அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதைத் தொடர்ந்து அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு எடுத்து விரையப்பட்டார்.

தனித் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு மதிப்பளித்து அத்தகைய பிரேரணை ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலும் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்திய மத்திய அரசு உதவ வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தோர் கோரி வருகின்றனர்.