தாலிபன்களின் இந்த காட்டுமிராண்டித்தனம். இந்த நிகழ்வு, ‘ஜார்ஜ் புஷ்’ போட்ட யூரேனிய குண்டுகளால் புற்றுநோயால் வாடும் ஈராக்கிய குழ்ந்தைகளுக்கு மருந்துகளை அனுப்பாமல் உலக அளவில் ஈராக்கிற்கு தடை கொண்டு வந்து பில்கிளிண்டன் பல்லாயிரம் குழந்தைகளை கொலை செய்ய வைத்ததையும் நினைவில் கொள்ளச் செய்கிறது.

ஈழத்தில் இதே போன்று மருந்துகளை அனுப்பாமல் குழ்ந்தைகள் மீது கொலை செய்ய அனைத்து உதவிகளையும் நேரடியாக செய்த இந்திய அரசு மீதும், மறைமுக உதவி செய்த மேற்குலகம்-ஐ.நா- பாகிஸ்தான் – சீனா மீதும் நமக்கு வருகிறது. 30,000 தமிழ்க் குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர்.

pakistan-2
பெஷாவர் நிகழ்வு சில முக்கிய செய்திகளை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. அதை விவாதிப்பது அவசியம். ஏனெனில் இது நாளை நமக்கும் நிகழலாம்.

விடுதலைப் போராட்டம் என்பது ஒடுக்கப்படுபவனுக்கும், சுரண்டப்படுபவனுக்கும், ஆக்கிரமிக்கப்படுபவனுக்குமான ஒன்று. அதை மதம் பெற்றுத் தராது. ஏனென்றால் மதத்தின் பெயரால்-இனத்தின் பெயரால் இவை அனைத்தும் நிகழ்கிறது.

அடிப்படைவாதத்தினை வைத்து மக்கள் போராட்டத்தினையோ, வலிமையான ஆயுதப்போராட்டத்தினை நடத்திவிட முடியாது. அப்படி நடத்தப்படும் போராட்டங்கள் காட்டுமிராண்டித் தனத்தில் தான் சென்று முடிகிறது என்பதை தாலிபன்கள் நீண்ட நாட்களாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எதிரிகள் எப்பொழுதும் போராடும் மக்களை, இயக்கத்தினை ஒரு கொடூர எதிர்வினை செய்வதற்கு தூண்டுவார்கள். வடமேற்கு பாகிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரம் செலுத்தும் இடங்களில் பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவத்தினர் பல்லாயிரம் மக்களை கொலை செய்தார்கள். இதில் குழந்தைகளும் அடக்கம்.

தங்களுக்கு ஏற்படும் இழப்பிற்கு பழிவாங்க தாலிபன்கள் குழந்தைகளை கொலை செய்திருப்பதாக அறிவிக்கிறார்கள். இக்கொடூரக் கொலை நிகழ்விற்காகவே பாகிஸ்தானும், அமெரிக்காவும் காத்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானை விட்டு, வடமேற்கு பாகிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறக்கூடாது என்பதற்கு இது ஒரு அச்சாரமாக அமையலாம்.
மத்திய ஆசியாவில் இதைப் போன்ற காட்டுமிராண்டி செயல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் நிகழ்த்துகிறது. இது உலக மக்களிடம் வெறுப்பினை ஏற்படுத்தி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கொலைகளை நியாயப்படுத்துகிறது.
நாம் ஒன்றினை நினைவில் வைப்போம்.

தாலிபன்கள், ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா ஆகியவை அமெரிக்காவின் ஆதரவோடே வளர்த்தப்பட்டன. தொடர்ந்து மேற்குலகினால் கொலை செய்யப்படுகிற இசுலாமிய மக்களிடம் இருந்த நியாயமான போராட்ட உணர்வினை ‘மத வெறியைக் கொண்டு’ நெறிப்படுத்தி போராளி இயக்கங்கள் உருவாவது மேற்குலகிற்கு தேவைப்படுகிறது.

ஏனெனில் மத அடிப்படைவாதிகள் மூர்க்கமானவர்கள். ஏகாதிபத்தியத்தின் சதிகளை புரிந்து செயல்படும் அளவிற்கு அரசியல் பயிற்சியற்றவர்கள். அவர்களை காட்டுமிராண்டி எதிர்வினைகளை செய்ய வைப்பது சுலபம். இதன் மூலம் இவர்களை உலக அளவில் தனிமைப்படுத்தி எளிதில் வேட்டையாடலாம். முற்றும் முழுதுமாக இவர்களை மேற்குலகம் அழித்துவிட முடியும்.

ஆனால் அவ்வாறு அழித்துவிட்டால், பின்னர் தனது ஆதிக்கத்தினை இப்பகுதியில் செலுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்காது. மேலும் அந்த அரசியல் வெற்றிடத்தினை முற்போக்கு அரசியல் கைப்பற்றினால் மேற்குலக எண்ணை வளம் சுரண்டல் பாதிக்கப்படும். எனவே இவர்களை குறைந்த பலம் கொண்டவர்களாகவும், தேவைப்படும் பொழுது பலமானவர்களாகவும் மாற்றி தனது சுயநலத்தினை செய்து முடிக்கிறது.

இது போன்ற ஒரு குழுவினை ராஜதந்திர தளத்திலும் உருவாக்கி வைத்திருக்கும் மேற்குலகம். இவர்கள் ஆப்கனின் அதிபர் ‘கர்சாய்’ போன்றவர்கள். இவர்கள் சுதந்திரம், தனியுரிமை, மக்கள் உரிமை என்றெல்லாம் பேசமாட்டார்கள். ஜனநாயகம், வணிகமயமாக்கல், அமைதி, முன்னேற்றம் எனப் பேசுவார்கள்.

இவர்களும் தாலிபன் போன்ற குழுக்களும் சமபலம் கொண்டவர்களாக மாற்றிவைத்து அம்மக்களை மேற்குலகம் சுரண்டுவார்கள். ‘கர்சாய்’ ஆட்சிக்கு வந்த உடன் காபூலில் திறக்கப்பட்ட கடைகளுல் ‘ பென்ஸ்’ காரின் கடையும் ஒன்று என்பதை மறக்கக் கூடாது. தமிழீழத்தில் இப்படியான பல அரசியல்வாதிகள் உருவாகி இருப்பதை நாம் மறக்கக் கூடாது. மேற்குலகம் விடுதலை பெற்றுத்தரும் எனப் பேசும் அமெரிக்க வாழ் பூசாரிகளையும் கவனத்தில் எடுத்தல் அவசியம்
ஐ.எஸ்.ஐ.எஸ், இசுரேலுக்கும்- மேற்குலகுக்கும் செல்லும் எண்ணை குழாய்களை இதுவரை சேதப்படுத்தவில்லை. அதை தடை செய்யவில்லை.

அதை தகர்த்தார்கள் என்றால் அமெரிக்காவின் பின்வாசல் உதவி நின்று போகும் என்பது தெரியும். மத அடிப்படைவாதம் மக்களை மூர்க்கமாக்கும். அதுவே இன்று பலநூறு அப்பாவி பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்யவைத்திருக்கிறது.

மதவெறி, இனவெறி, சாதிவெறி அடுத்த மக்களை நேசிக்க கற்றுத் தருவதில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் குழுக்கள் காட்டுமிராண்டி கும்பலாகவே இருக்கும். இவர்களை சார்ந்து இருக்கிற மக்களுக்கு அழிவையே தேடித்தருவார்கள். விடுதலையை இவர்களால் ஒருபொழுதும் வெல்லமுடியாது.

இசுலாமியரே , இசுலாமியரை கொலை செய்யும் பணியை மேற்குலகம் சிறப்பாக செய்து முடிக்கிறது.பாலஸ்தீனத்தினை ஆதரிக்கும் சில தமிழ் இசுலாமிய நண்பர்கள் குர்திஸ்தான் விடுதலையை பேச மறுப்பார்கள். ஈரானின் மீது நிகழும் ஒடுக்குமுறையை பேச மறுப்பார்கள். பலுசிஸ்தானில் சியா மக்களை இனப்படுகொலை செய்யும் பாகிஸ்தானுக்கு எதிராக பேச தயங்குவார்கள்.

ஏனெனில் இசுலாத்தில் ஒரு மார்க்கத்திற்கு விசுவாசமாக இருப்பது, அதன் அடிப்படைவாதத்தினை ஏற்பதாக மாறுவது அமெரிக்கா போன்ற எதிரிகளுக்கு வசதியாக மாறுகிறது.

முற்போக்கு சிந்தனையால் உருவான குர்து போராளிப்படை, தன்னை எதிர்த்து போராடும் அரசுகள் சன்னி பிரிவு, சியா பிரிவு சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதன் அப்பாவி மக்களை பாதுகாத்தார்கள். போரில் ஒரு புறம் ஈராக்கின் சியா அரசால் விரட்டப்பட்ட சன்னி பிரிவு மக்களுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் படையால் விரட்டப்பட்ட சியா பிரிவு மக்களைக்கும் பாதுகாப்பளித்தார்கள்.

பெசாவரில் நிகழ்ந்த குரூரம் சொல்லிவிட்டு சென்ற அரசியலை மறக்கவேண்டாம்.

நன்றி: திருமுருகன் காந்தி.