தமிழகத்தின் உடனடித் தேவை: தமக்கெனப் போராடும் தமிழ் மக்கள் கூட்டமைப்பு

0
569

muttam-987நேற்றிரவு (நவம்பர் 12, 2013) “தமிழர் உணர்வுகளை மதிக்காத” மத்திய அரசுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம். இன்று காலை (நவம்பர் 13, 2013) தமிழர்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தழித்து, முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச் சுவர்களை, பூங்காவை அத்துமீறி இடித்துத்தள்ளி காட்டு தர்பார். ஜெயலலிதா தமிழக முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் இரட்டை வேடத்தில் நடிக்கும் “அம்மான்னா சும்மாவா?” படத்தின் அடுத்தடுத்த பரபரப்புக் காட்சிகள் இவை. சினிமாப் படம் பார்த்தே சீரழிந்துபோன தமிழர்களே, இந்த பாசிஸ்டு படத்தையும் பாருங்கள். கைக்கொட்டிச் சிரியுங்கள், உங்கள் தலைவிதியை நினைத்து.

ஈழத் தமிழரின் தாயகத்திலும் சரி, இங்குள்ள தமிழரின் தமிழகத்திலும் சரி, தமிழர் நாம் அடிமைகளாகவே இருக்கிறோம். பச்சைத் துரோகிகளும், பாசிஸ்டுகளும் நமது அரசியலை, எதிர்காலத்தை தீர்மானிக்கிறவரை நாம் அடிமைகளாகத்தான் இருப்போம். தமிழ் மக்கள் உயிருக்கும் மதிப்பில்லை. அவர்கள் உயிர் ஈந்ததை நினைவில் நிறுத்தும் நினைவுச் சின்னத்துக்கும் மதிப்பில்லை.

தமிழின எதிர்ப்பு அரசியல் நம்மைச் சுற்றி சக்தியோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. சானல் 4 வெளியிட்ட குழந்தை பாலச்சந்திரன் படுகொலைக் காணொளி, தங்கை இசைப்பிரியா படுகொலைக் காணொளி போன்றவை நம்மையெல்லாம் குலைநடுங்கச் செய்திருக்கின்றன. நவம்பர் 4, 2013 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட மாணவர் சுடர்ப் பயணங்கள் தமிழகமெங்கும் முறியடிக்கப்பட்டு, அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், அடித்து நொறுக்கப்பட்டனர். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது, இனப்படுகொலைக் குற்றவாளியான மகிந்த ராஜபக்சேவுக்கு அந்த மரியாதையை கொடுக்கக்கூடாது, இந்தியா அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று ஒட்டு மொத்த தமிழகமே போராடிக்கொண்டிருக்கிறது. இதற்காகக் குரல் கொடுத்த தோழர் கொளத்தூர் மணி பொய் வழக்கு ஒன்றில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் போகமாட்டாராம்; ஆனால் அவரது வெளியுறவுத் துறை அமைச்சர் போவாராம்; தான் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற விளக்கக் கடிதம் ஒன்றை கொழும்பு ஆட்சியாளர்களுக்கு அனுப்பிவிட்டாராம்.

இப்படியாக நாடகமாடி, நயவஞ்சகமாக செயல்பட்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழகத்தின் பெரிய கட்சிகளும், அவற்றின் கள்ள உறவுகளும் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கொள்கையும் உணர்வும் கொண்ட தமிழகக் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் தமக்குள் பிணங்கிக்கொண்டு, பிரிந்துகிடப்பது நமது வருங்காலமும் பிரகாசமாக இல்லை என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. ஒருவித கவலையும், பயமும் ஆட்கொள்ளுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தின் உடனடித் தேவை, தமக்கெனப் போராடும் தமிழ் மக்கள் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதுதான். தேர்தல் அரசியலில் பங்கேற்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அய்யா வைகோ அவர்களும், பா.ம.க. நிறுவனர் அய்யா மரு. இராமதாசு அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர். திருமாவளவன் அவர்களும், மனிதநேய மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும், நாம் தமிழர் கட்சியின் தலைவர் தோழர். சீமான் அவர்களும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் தோழர். மரு. கிருஷ்ணசாமி அவர்களும், எஸ்‌டி‌பி‌ஐ கட்சியின் தமிழகத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி (ம. லெ) மக்கள் விடுதலை தோழர் மீ. த. பாண்டியன் அவர்களும், சி.பி.ஐ (எம்.எல்.) விடுதலை தோழர் பாலசுந்தரம் அவர்களும், தமிழர் களம் தலைவர் தோழர் அரிமாவளவன் அவர்களும், தமிழக முன்னேற்றக் கழகம் தலைவர் தோழர் ஜாண் பாண்டியன் அவர்களும், தமிழக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் ஷரீஃப் அவர்களும், தமிழக அரசியல் களத்தில் அற்புதமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் முற்போக்குக் கொள்கைகள் கொண்ட ஏனைய அரசியல் கட்சிகளும் உடனடியாகக் கூடிப்பேசியாக வேண்டும்.

தேர்தல் அரசியலில் கலந்து கொள்ளாத தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்களும், தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் அய்யா பெ. மணியரசன் அவர்களும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கு. இராமகிருஷ்ணன் அவர்களும், ஆதித் தமிழர் பேரவை தலைவர் அய்யா அதியமான் அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் தோழர் இஸ்மாயில் அவர்களும், தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத் தோழர்கள் அப்துல் சமது போன்றோரும் இந்த ஒருங்கிணைப்புப் பணியில் உதவ முன்வர வேண்டும். பல்வேறு சமூக இயக்கங்களும், மகளிர், மாணவ அமைப்புக்களும், அவற்றில் மும்முரமாய் நின்று பணிபுரியும் இளைஞர்களும் இந்தக் கூட்டு முயற்சிக்கு அழைக்கப்பட வேண்டும். தோழர்கள் கிறிஸ்டி சாமி, ஷீலு, திருமுருகன், அருண் ஷோரி, செந்தில், பரிமளா, கயல், திவ்யா, அகராதி என்று ஆயிரம் பேரின் பெயர்களை இங்கே அடுக்க முடியும். வலது சாரிகளாக, பிற்போக்கு சக்திகளாக, சந்தர்ப்பவாதிகளாக, பிழைப்புவாதிகளாக இல்லாத பட்சத்தில், அனைவரும் விருப்பு வெறுப்பின்றி இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு நாங்கள் அழைக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் சிலருக்கு இருக்கலாம். இங்கே விடப்படும் அழைப்பு தமிழ் மக்களின் அழைப்பு என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். எங்களுக்கு எதிராக சாதி அரசியலை கையிலெடுப்பவர்களோடு நாங்கள் எப்படி அணிசேர முடியும் என்று சிலர் அங்கலாய்க்கலாம். இந்த சாதிப் பிரிவுகளைத் தாண்டி கைகோர்த்து நின்றவர்கள்தானே நீங்கள். மனமுண்டானால் மார்க்கமுண்டு; இன்னும் அப்படிச் செய்ய முடியும். எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்களோடு எப்படிச் சேருவது என்று சிலர் விசனப்படலாம். பொது வாழ்க்கையில் பிரிவதும், கூடுவதும் இயல்புதானே? கணவனும்-மனைவியும், பெற்றோரும்-பிள்ளைகளும், சகோதர-சகோதரிகளுமே பிரியும்போது, பேசாதிருக்கும்போது, அரசியல் கொள்கைகளுக்காக நிற்கும் நாம் பிணங்குவது இயற்கைதானே? இந்தக் கூட்டமைப்புக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழலாம். இது குறித்து உங்களுக்குள் ஓர் இணக்கம் எழவில்லையென்றால், ஒரு தமிழ்ப் பாட்டியை தலைவராக்குவோம். கூட்டத்தில் யார் கடைசியாகப் பேசுவது என்றப் பிரச்சினை எழலாம்; இதுவும் ஒரு தலைபோகும் பிரச்சினை அல்ல. பிளவுகள், பிரிவினைகள் பற்றி பேதலிக்காமல், இணக்கங்கள், இணைக்கும் பாலங்கள் பற்றிப் பேசுவோமே? வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பதுபோல, மனம் விட்டுப் பேசினால், வழி பிறக்கும் என்பது உறுதி.

இது தமிழ் மக்களின் வெற்று வேண்டுகோள் அல்ல, வெறும் விருப்பமும் அல்ல; கட்டளை, அன்புக் கட்டளை. காட்டாற்றுத் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் எங்களைக் காப்பாற்றுங்கள் எனும் அலறல், அழுகை, அபயக்குரல். தில்லி ஏகாதிபத்தியமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒரு புறம் நெருக்க; சீன ஏகாதிபத்தியமும், சிங்களப் பேரினவாதமும் இன்னொரு புறம் அடிக்க; அண்டை மாநிலங்கள் தண்ணீர்கூட தரமாட்டோம் என மறுக்க; உலகின் ஆபத்தானத் திட்டங்கள் எல்லாம் தமிழ் மண்ணில் செழிக்க; தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. ரோமாபுரி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது நீரோ பொறுப்பின்றி செயல்பட்டது போல, தமிழர்களை காக்க வந்த இயக்கங்களும், தலைவர்களும் வாளாவிருக்கலாமா? அனைவரும் ஒன்றுகூடிப் பேசி, பொது அடிப்படை செயல்திட்டம் (Common Minimum Programme) ஒன்றை உடனடியாக உருவாக்கியாக வேண்டும். தமிழகத்தின் பெரிய கட்சிகளை தமிழ் மக்களாகிய நாங்கள் நம்பவில்லை. மாற்று இல்லாததாலும், எங்கள் கோபத்தை தெரிவிக்க வேறு வழியில்லாததாலும், பச்சைத் துரோகிகளையும், பாசிஸ்டுகளையும் மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

விளப்பில்சால எனுமிடத்தில் திருவனந்தபுர நகரக் கழிவுகளை எல்லாம் கொட்டும் திட்டத்திற்கு எதிராக அந்தப் பஞ்சாயத்து மக்கள் தொடர்ந்து 1,000 நாட்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரமாவது நாள் போராட்டத்துக்கு இடிந்தகரைப் போராட்ட பெண் தலைவர்களை அழைத்தார்கள். “தயவு செய்து எந்தக் கட்சியையும் தாக்கிப் பேசிவிடாதீர்கள்; ஏனென்றால் அனைத்துக் கட்சிகளுமே எங்களூக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்று அறிவுரைத்துச் சென்றார்கள் விழாக் குழுவினர். இந்த அரசியல் ஒற்றுமையாலும், பலத்தாலும்தான் கேரளம் “கடவுளின் சொந்த தேசமாக “ (God’s Own Country) விளங்கிக் கொண்டிருக்கிறது. கூடங்குளம், கல்பாக்கம், தேவாரம் நியூட்ரினோ, மதுரை அணுக்கழிவு ஆய்வு மையம் போன்ற குப்பைகளெல்லாம் தமிழகத்துக்கு வருகின்றன.

கூடங்குளம் அணுக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கங்களில் கொண்டு புதைப்போம் என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திடம் கடந்த வருடம் உறுதியளித்தது. எரிமலையே எதிர்பாராது வெடித்ததுபோல கர்நாடக மக்கள் உடனடியாக வெகுண்டெழுந்தனர். அப்போதைய கர்நாடக முதல்வர் பா.ஜ.க.வைச் சார்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் வேறு எங்குமே வைக்க முடியாது என்று கர்ஜித்தார். கர்நாடகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர் காங்கிரசுக்காரரான வீரப்ப மொய்லி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று சூளுரைத்தார். கர்நாடக அ.தி.மு.க. ரத்தத்தின் ரத்தங்கள்கூட தெருக்களிலே இறங்கிப் போராடினர். வெறும் மூன்றுநாட்களில் கோலார் திட்டம் குப்பையிலேப் போடப்பட்டது. காரணம் கர்நாடக அரசியல் கட்சிகள் எல்லாம் கர்நாடக மக்களுக்காகப் பாடுபடுகின்றனர்.

ஆனால் இங்கே தமிழகத்தில்? பா.ஜ.க., காங்கிரசுக்காரர்கள் தேசபக்தியில் திளைத்து தமிழரைக் காட்டிக் கொடுக்கின்றனர். கூடங்குளம் அணுஉலையை எதிர்க்கும் மக்களான மீனவர்களும், விவசாயிகளும், தலித் மக்களும் தேசத் துரோகிகளானோம். ஆனால் அணுக் கழிவை ஏற்றுக் கொள்ளாத ஷெட்டர்கள், மொய்லிகள், ர.ர.க்கள் எல்லாம் தேச பக்தர்கள் ஆனார்கள். தி.மு.க. உ.பி.க்களும், அ.தி.மு.க. ர.ர.க்களும் “தமிழ், தமிழன், தமிழினம்” என்று பசப்பு மொழிப் பேசியே பச்சைத் துரோகம் செய்கின்றனர். அமெரிக்க, பிரான்சு நாட்டு அணுஉலை இந்தியாவில் வேண்டாம் என்கிற சி.பி.ஐ., சி.பி.எம். காம்ரேடுகள் ரஷ்ய அணுஉலைமேல் காமம் கொண்டு நிற்கின்றனர். ஆனால் அதே ரஷ்ய அணுஉலைகூட கேரளாவில் வரக்கூடாது என்பதிலும் குறியாய் இருக்கின்றனர்.

கேரளத்து மீனவர் இருவர் இத்தாலி நாட்டு மாலுமிகளால் கொல்லப்பட்டபோது, ஒரு குடும்பத்துக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை கிட்டத்தட்ட 600 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னும் அதிகமானோர் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள். அதைவிட அதிகமானோர் சிறைச்சாலைகளிலே முடக்கப்பட்டிருக்கிறார்கள். இழவுக்காகப் பிறந்தவர்களுக்கு ஏது இழப்பீடு? இடிந்தகரைப் போராட்டத்திலே தமிழகப் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட மணப்பாடு அந்தோணி ஜான் உயிருக்கான விலை வெறும் ஐந்து லட்சம் ரூபாய். இடிந்தகரையில் கடலோரப் பாதுகாப்புப் படை விமானத்தால் தாக்கிக் கொல்லப்பட்ட சகாயம் பிரான்சிஸ் குடும்பத்துக்கு அந்த மரியாதைகூடக் கிடையாது. வருவாய் ஏதுமின்றி வறுமையில் தவிக்கும் நான்கு பச்சைக் குழந்தைகளுக்கும், கல்வியறிவில்லாத அவர்களின் தாய்க்கும், எந்த உதவியும் செய்யவில்லை அருமைமிகு சும்மாவின் அரசு. அரசை எதிர்ப்பவனுக்கு, கேள்வி கேட்பவனுக்கு, அவனது குடும்பத்துக்கு உதவியாவது, ஒன்றாவது எனும் மமதைதான் ஆட்டம் போடுகிறது.

கேரள, கர்நாடக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மக்களுக்காக வாதிட்டு சாதிக்கின்றனர். தமிழகத்திலோ, சக்திமிக்க அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கடிதம் எழுதிக் கொண்டும், கதை சொல்லிக் கொண்டும் நம் காதுகளில் பூ சுற்றிக்கொண்டிருக்கின்றனர். ஏனையோர் ஒன்றுகூடாமலிருப்பதற்கு ஓராயிரம் வாதங்களை வைத்துக் கொண்டு, வழிகளைத் தேடிக்கொண்டு, முன்னவர்களுக்கு முடிந்த வகையிலெல்லாம் உதவிகள் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்றமிழ் மக்களுக்கு இயன்றதையெல்லாம் இங்கே, இப்போதே செய்ய விழையும் தலைவர்கள், இயக்கங்கள் உடனடியாகக் கூடிப் பேசுங்கள், உதவுங்கள். நாதியற்று நடுத்தெருவில் நிற்கும் தமிழினத்திற்கு கைகொடுக்க இந்த நேரத்திலும் நீங்கள் ஒன்றுபட்டு செயல்பட முடியவில்லை என்றால், முயலவில்லை என்றால், நீங்களும் ஒரு பச்சைத் துரோகி அல்லது பாசிஸ்டு என்று தமிழ் மக்களாகிய நாங்கள் முடிவு கட்டுவோம்.

அன்புத் தமிழர்களே, ஒருவேளை, நம் தலைவர்கள் இந்த இறுதிக்கட்டத்திலும் நம்மைக் கைவிட்டால், “அடிமையாக வாழ்வது எப்படி?” என்று ஒரு கையேட்டைத் தயாரித்து, வீரம், மானம் என்பதையெல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, கையேட்டின்படி நடந்து, கைகட்டி, தலைவணங்கி, குனிந்து, வளைந்து ஈன வாழ்க்கை வாழும் வழிகளைப் பாருங்கள். வணக்கம்.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
நவம்பர் 13, 2013