இந்திய வல்லாதிக்கத்திற்கு அடிமைப்பட்டு இருக்கும் தமிழகத்தின் விடுதலைக்காகவும் ஈழ தமிழர்கள் விடுதலைக்காகவும் போராடிய தோழர் லெனினின் நினைவு நாள்.

 

தோழர் தமிழரசனின் பின்பு தமிழ் நாட்டு விடுதலை படையை முன்னெடுத்த தோழர் லெனின் தமிழ் நாட்டில் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக பல புரட்சிகளை செய்தவர்.

 

புரட்சியாளர்கள் என்பவர்கள் வன்முறையாளர்கள் அல்லர். அவர்கள் உண்மையை நேசித்து உண்மைக்காக போராட தம்மையே உருக்கி வார்க்கும் மென் மனது கொண்டவர்கள்.

 

மண்ணிலும் மக்களிலும் கொண்ட அளவற்ற பாசத்தால் நீதியின் மேல் உள்ள தீராத வேட்கையால் உண்மையை வென்றெடுக்கும் இலட்சிய தாகத்தால் புரட்சியாளர்கள் அநீதிகள் காணும் பொழுதெல்லாம் உருவாக்கப்படுகிறார்கள்.

 

இமயம் முதல் குமரி வரை ஆண்ட தமிழினத்தின் தமிழக மண்ணை வெள்ளையரிடம் இருந்து மீட்டு கொள்ளையரிடம் பறி கொடுத்து விட்டு இன்று அடிமைப்பட்டு நிற்கின்றது எங்கள் தமிழினம்.

 

தமிழகத்திலும் தமிழீழத்திலும் அடிமைப்பட்டு இருக்கும் தமிழகத்தின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணிப்போடு போராளியாக்கி போராட துடித்த இளைஞர் தமிழீழ விடுதலை புலிகளோடும் ஏனைய பல ஈழ விடுதலை போராட்ட அமைப்புகளோடும் தொடர்பு கொண்டு தமிழினத்தின் விடுதலை பற்றி பல விடயங்களை அக்கறையோடு பகிர்ந்திருக்கிறார்.

 

அடிமை தமிழகத்தால் அடிமைப்பட்டு இருக்கும் ஈழ மக்களுக்கு உதவ முடியாத இயலாமையை எண்ணி ஈழத்து போராளிகளிடம் மனம் மருகி இருக்கின்றார்.

 

தமிழினம் இணைந்து போராட வேண்டும் என விரும்பி பல சந்திப்புகளை மேற்கொண்டு இருக்கின்றார்.

 

அடிமைப்பட்டு இருக்கும் தமிழகத்தின் விடுதலையை மார்க்சிய லெனினிச மாவோயிச பாதையில் வென்றெடுத்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை தோழர் தமிழரசன் பாதையில் முன்னெடுக்க துடித்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் கொண்டு சென்ற குண்டு வெடித்து வீர சாவெய்தினார்.

 

வாழ்ந்த காலங்கள் கொஞ்சம் என்றாலும் அவரின் விடுதலை வேட்கை வீச்சான பல புரட்சிகர பக்கங்களை அவரின் வரலாறாக்கி உள்ளது.

 

அவரின் புரட்சிகர நடவடிக்கைகளை கொண்ட வரலாற்றை எழுதி நூலுருவாக்கிய தமிழ் தேச மக்கள் கட்சியின் தோழர் செந்தமிழ் குமரன் அவர்கள் எழுதிய தோழர் லெனின் பற்றிய நூல் தமிழகத்தில் பல இடங்களில் வெளி வந்தது. பல இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியது.

 

தோழர் லெனினின் இறுதி நிகழ்வு பற்றி தோழர் செந்தமிழ் குமரன் அவரின் நூலில் எழுதிய வரிகள் சில:

—————————–
இந்த தமிழ்த்தேசிய போராளி தோழனின் நினைவு நாளில் அவருடைஇறுதி நாளில் நடந்தவற்றை சுருக்கமாக பார்ப்போம் தோழர்களே.

 

1994ல் மார்ச் மாதம் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்துக்குட்பட்ட பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள வசந்தா என்ற பெண் குடும்ப தகராறு காரணமாக காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

 

விசாரணை முடிந்தப்பின்னும் காவல்நிலையத்திலே அடைத்துவைக்கப்பட்ட வசந்தா அன்றைய இரவே காவல்துறை துணை ஆய்வாளர் உட்பட 5காவல்துறை மிருகத்தினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்.

 

மறுநாள் விடிந்ததும் வசந்தாவின் உடலை காவல்நிலையம் பக்கத்தில் உள்ள மரத்தில் வசந்தாவின் புடவையாலே தற்க்கொலை செய்துக்கொண்டதுப்போல தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடினார்கள் காவல்துறையினர்.

 

அதற்க்குள்ளாக அந்த பகுதி மக்களுக்கு வசந்தா பாலியல் வண்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விசயம் தெரிந்து மக்கள் திரள்ப்போராட்டமாக வெடித்தப்பின்னர் வசந்தாவின் உடலை உடல்கூறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

 

உடல்கூறு ஆய்வில் வசந்தா பாலியல் வண்கொடுமைக்கு ஆளான பின்னே இறந்துள்ளார் என்ற விவரம் தெரிந்தது. பிறகு வசந்தாவின் மரணத்துக்கு காரணமான காவல்துறையினரை கைது செய்ய மக்கள் போராட்டம் செய்னர் அதனால் அரசு காவல்துறையினரை கைது செய்யும் என்று உறுதியளித்த காரணத்தினால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

ஆனால் அரசு அந்த காவல்துறையினரை கைது செய்யாமல் சுதந்திர பறவையாக திரியவிட்டது.

 

இதனைக்கண்ட தமிழ்நாடு விடுதலைப்படை தோழர்லெனின் அந்த முத்தாண்டிக்குப்பம் காவல் துறையினருக்கு தகுந்தப்பாடம் கற்பிக்க முடிவெடுத்தார்.

 

அந்த சூழ்நிலையில் சிலத்தோழர்கள் சிறைக்குள்ளும் சிலத்தோழர்கள் தலைமறைவாகவும் இருந்ததால் காவல் நிலைய தாக்குதல் திட்டத்தை தானே நடத்த முடிவு செய்து அதற்க்கான ஆயத்தப்பணிகளை தொடங்குகிறார் தோழர் லெனின்.

 

காவல்நிலையத்தை தகர்க்க வெடிகுண்டுகளை தயாரித்துக்கொண்டு தன்னுடைய மிதிவண்டியில் அதிகாலையில் புறப்படுகிறார் தோழர் லெனின்.

 

அன்றைக்கு பங்குனி உத்திரநாள் அதனால் ஊருக்குள் திருவிழாப்போல் இருந்ததால் தோழர் லெனின் குறுக்குப்பாதையில் வயல்காட்டு வழியாக மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு செல்கிறார்.

 

வயல்வரப்புகளில் மிதிவண்டி ஏறி இறங்கும் தறுவாயில் நிலைத்தடுமாறி மிதிவண்டியுடன் கீழே சரிகிறார் லெனின்.

 

அந்த நேரத்தில்தான் அசாம்பாவிதம் நடைப்பெறுகிறது தோழர் லெனின் மிதிவண்டியுடன் கீழே விழுந்தபோது அவர் வைத்திருந்த வெடிகுண்டுகளில் சில பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது.

 

வெடிகுண்டு வெடித்ததனால் தோழர் லெனினுக்கு காலில் பயங்கரமாக காயபட்டது. வெடிகுண்டு வெடித்த சத்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் தோழர் லெனின் இருந்த இடத்தை சூழ்ந்துக்கொண்டனர்.

 

அங்கே இருப்பது தோழர் லெனின் என்பது அந்த மக்களுக்கு தெரியாது ஆனாலும் அந்த மக்களின் கண்களில் நீர்த்துளிகள்.

 

அந்த நேரத்திலும் தோழர் லெனின் சுயநினைவுடன் மக்களிடம் தண்ணீர் கேட்டுவாங்கி அந்த மக்களை கொஞ்சம் தூரம் தள்ளி நிற்க்கசொல்லிவிட்டு அங்கே வெடிக்காமல் இருந்த குண்டுகளை தண்ணீர்க்கொண்டு செயலிழக்க செய்கிறார் தோழர் லெனின்.

 

தான் இறக்கும் தறுவாயிலும் மக்களை நேசித்த தமிழ்த்தேசியதலைவர் தோழர் தமிழரசன் வழியில் வந்த தோழர் லெனினும் தான் இறக்கும் தறுவாயில்க்கூட மக்களை நேசித்திருக்கிறார். அதனாலே இன்றும் அந்த பகுதி மக்களுக்கு தோழர் லெனின் மீது மிகுந்த மரியாதையுண்டு.

 

தோழர் லெனின் இருந்த இடத்தில் கூடியிருந்த மக்களில் சிலர் வெடிகுண்டுகளை பார்த்ததும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டனர். காவல்துறையினரும் அங்கே வந்தனர்.

 

தோழர் லெனின் காயம்பட்டு சாய்ந்துக்கிடப்பதை கண்ட ஒரு காவலர் தோழர் லெனினை தொட்டு தூக்கமுயன்றார். அப்போது தோழர் லெனின் சொன்னார் ” உழைக்கும் மக்களை சுரண்டி ஒடுக்கம் அரசின் அடியாள் படையே தொடாதே ” என்றார். காவலர்கள் தண்ணீர் கொடுத்தபோதும் தண்ணீர் அருந்த மறுத்துவிட்டார்.

 

தோழர் லெனினை மக்கள் தூக்கவும் அனுமதிக்கவில்ல வஞ்சக காவல்துறை.

 

அப்போது தோழர் லெனின் ” முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் வசந்தா என்ற பெண்ணிற்க்கு நடந்த பாலியல் கொடுமைக்கு எதிராக அந்த காவல்நிலையத்தை தகர்க்கவே நான் வெடிகுண்டுகளுடன் வந்தேன் ” என்ற கூடியிருந்த மக்களிடையே அந்த மகத்தான வீரன் மரணம் வாக்குமூலம் கொடுத்தான்.

 

தோழர் லெனின் இவ்வாறு கூறியப்பின் சிறிது நேரத்தில் தோழர் லெனின் மாவீரர் ஆனார். இதைக்கண்ட அந்த மக்கள் துக்கம் தாளமல் கண்ணீர்விட்டு கதறினார்கள், தோழர் லெனின் வைத்திருந்த மார்க்சிய புத்தகமும் சிவப்பு நிறத்துண்டும் தோழர் லெனின் வரலாறுப்போலவே இரத்தமும் சதையுமாக சிதறிக்கிடந்தன.

 

அங்கிருந்த தோழர் லெனினின் வீர உடலை விருத்தாச்சலம் மருத்துவமணைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிறகு இறுதி நிகழ்வுக்காக பெண்ணாடத்திற்க்கு எடுத்துவரப்பட்டது.

 

காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் 2000ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்த்தேச மக்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

 

சிறிய வயதில் தமிழ்நாடு விடுதலைப்படைக்கு பொறுப்பேற்று தமிழ்த்தேச விடுதலையில் தன்ப் பங்களிப்பை செய்துவிட்டு சென்றுள்ளார் தோழர் லெனின்.

 

இனி பங்களிப்பு செய்யவேண்டியவர்கள் தமிழ்த்தேச மக்களாகிய நாம்தான்.

=================================

தோழர் லெனினுடைய வரலாற்றை கடினமான உழைப்பின் மூலம் நூலாக வெளியீட்டுள்ளார் தோழர் செந்தமிழ் குமரன்.

 

அவருக்கு பாராட்டுக்கள்!

 

( தோழர் செந்தமிழ் குமரன் அவர்கள் எழுதிய தோழர் லெனின் பற்றிய அரிய வரலாற்று நூலை பெற்று கொள்ள உறவுகள் பொதுமை பதிப்பகத்தை தொடர்புகொள்ளுங்கள்: தொ. பே. எண். 9751014559)

 

அந்த வகையில் விரைவில் இந்நூல் கனடாவில் வெளி வர இருக்கின்றது.

 

தோழர் லெனினின் விடுதலை வரலாறு பல புரட்சியாளர்களுக்கு வழி காட்டியாக அமைகின்றது.

 

அடிமை தமிழகத்தின் விடுதலைக்காக அவர் பின்னாலும் பல தமிழக புரட்சியாளர்களை உருவாக்கி போராட வழி காட்டியாக திகழ்ந்த தோழருக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம்.

 

வீரன் மண்ணின் வீழும் பொழுது விதையாய் தான் வீழ்கிறான். நாளைய பயிர்கள் இந்த புரட்சியாளன் பெயர் சொல்லி ஆதிக்க கரங்களை அறுத்தெறிய உயர்ந்து முளைத்து விரிந்து வளர்ச்சி கொள்ளும்.

 

நன்றி: சிவந்தினி