முருகன் சாந்தன் பேரறிவாளன் நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை – தமிழக கருத்துக்களின் ஒரு பகுதி

0
800

murugan-7moreஒரு இனம் தன்னை வலுவாக ஒருங்கிணைத்து தொடர்ச்சியாக, அர்ப்பணிப்புடன் போரடினால் இலக்கை அடைவது திண்ணம் என்ற கருத்துக்கமைவாக தமிழக மக்களும், தமிழ் கட்சிகளும் இணைந்து இந்திய மத்திய அரசுக்கு எதிராக மேற்கொண்ட மக்கள் போராட்டம் இன்று ஒரு திருப்புமுனையை சந்தித்துள்ளது.
தமிழன உணர்வாளர்கள், திரு வைகோ, திரு சீமான், ஐயா பழ நெடுமாறன், திரு பொ மணியரசன், திரு திருமுருகன் காந்தி, திரு இராமதாஸ் உள்ளிட்ட பெருமளவான தமிழ் இன உணர்வுள்ள தலைவர்களின் கடுமையான உழைப்பின் பலனாக இந்திய மத்திய அரசினால் பொய்வழக்கு போடப்பட்ட அப்பாவித் தமிழர்கள் இன்று விடுதலையடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் குரல்களினதும், கருத்துக்களினதும் ஒரு பகுதியை ஈழம் ஈ நியூஸ் இங்கு தொகுத்து தருகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரனின் கருத்துடன் இந்த ஆக்கத்தை ஆரம்பிக்கின்றோம்:

அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்

-தேசியத்தலைவர்

முருகன் சாந்தன் பேரறிவாளன் நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை! சிதம்பரத்தில் பட்டாசு வெடித்து தோழர்கள் கொண்டாட்டம் !

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்கள் தலைமையில் உள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை இரத்து செய்து அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நேற்று வழங்கியது.

இதைத் தொடர்ந்து இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் , நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது !

pothu-party-tn0
இதனை வரவேற்று தமிழகம் எங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தமிழின உணர்வாளர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிபடுத்திவருகிறனர்.

சிதம்பரம் தெற்கு சன்னதி – கீழவீதி ஆகிய இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள், தமிழக உழவர் முன்னணி, உலகத் தமிழர் பேரமைப்பு, தமிழக இளைஞர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள்
பட்டசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், வரவேற்பு முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தலைமைச் செயலகம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

ஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை : நீதியரசர் சந்துரு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432 மற்றும் 433 ஆகியவை கைதி ஒருவருக்குத் தண்டனைக் குறைப்பு செய்து முன்னரே விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 435 இன் படி ஒருசில குற்றங்களில் தண்டனை பெற்றோருக்கு தண்டனைக் குறைப்பு செய்யும்போது மத்திய அரசோடு கலந்துபேசி செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் உட்பிரிவு 2 “(2) No order of suspension, remission or commutation of sentences passed by the State Government in relation to a person, who has been convicted of offences, some of which relate to matters to which the executive power of the Union extends, and who has been sentenced to separate terms of imprisonment which are to run concurrently, shall have effect unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends.” எனச் சொல்கிறது.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரை விடுவிக்கப்போவதாக அறிவித்திருக்கும் தமிழக முதல்வர், ”மத்திய அரசு மூன்று நாட்களில் பதில் சொல்லவேண்டும் இல்லையென்றால் நாங்களே விடுதலை செய்வோம்” என அறிவித்திருக்கிறார். ஒருவேளை மத்திய அரசு விடுவிக்கக் கூடாது என ஆலோசனை தந்தால் என்ன ஆகும் என்ற கேள்வியை நீதியரசர் சந்துரு அவர்களிடம் மாலை நாலரை மணியளவில் கேட்டேன். ” மத்திய அரசைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்பது பொருள் அல்ல. மத்திய அரசு பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைத்தான் தமிழக முதலமைச்சர் கூறியிருக்கிறார். அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என சிலர் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பிரச்சனை இப்போது எழவே இல்லை. அது வீணான வாதம்” என்று அவர் கூறினார்.

// unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends // மத்திய அரசும் தண்டனைக் குறைப்பு செய்து தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கலாம் என முடிவுசெய்யாதவரை மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மதிப்பு கிடையாது என இந்தப் பிரிவு தெளிவாகச் சொல்கிறது என்பது உண்மைதான் என்றாலும் இந்த ஏழு பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில்தான், மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரம் வருகிற குற்றங்களுக்காக அல்ல. இதைத் தமிழக அரசு அறியாமல் இருக்க முடியாது. இந்தப் பிரச்சனையில் மத்திய அரசைக் கலந்தாலோசிக்கத் தேவையே இல்லை என்பதுதான் உண்மை. அப்படியிருந்தும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதில் சொல்லவேண்டும் எனத் தமிழக அரசு கெடு விதித்திருப்பது ஏன் எனப் புரியவில்லை.ஒருவேளை மத்திய அரசு நிராகரித்தால் அதை காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தேர்தலில் பயன்படுத்தலாம், முடிவு எதையும் சொல்லாவிட்டாலும்கூட காங்கிரசைக் குற்றம் சாட்ட முடியும். இதுதான் அதற்குக் காரணமா என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் நாம் புரிந்துகொள்ளலாம்.

மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தணடனையாகக் குறைக்கப்பட்ட தென்தமிழன் என்பவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்யவேண்டும் என 2009 ஆம் ஆண்டில் சிறப்பான தீர்ப்பு ஒன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் வழங்கியிருந்தார். அந்தத் தீர்ப்பு இந்தப் பிரச்சனைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தாலே போதும் நீதி வென்றுவிட்டது என்ற விதத்தில்தான் பெரும்பாலோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது சரியல்ல. இந்த வழக்கில் ஏற்பட்டிருக்கும் கருத்தொற்றுமையைப் பயன்படுத்தி தமிழக சிறைகளில் அடைபட்டுக்கிடக்கும் சிறைவாசிகளின் உரிமைகள் குறித்து கவனத்தை ஈர்க்க நாம் முயற்சிக்கவேண்டும். அதுதான் மனித உரிமைகள்மீது அக்கறைகொண்டவர்கள் செய்யவேண்டிய பணி ஆகும்.

அது ஒரு நீண்ட கடினமான பாதை……. Arivalagan

இன்று வரை அவரை நான் பார்த்ததில்லை, அவர் எந்த ஊர் என்று கூடத் தெரியாது, ஆனாலும், அவர் மீது காரணமற்ற ஒரு மிதமான அன்பு இருந்து கொண்டே இருந்தது எப்போதும், கால வெள்ளத்தில் அந்த மனிதரின் தலைக்கு மேலே தொங்கிய தூக்குக் கயிற்றின் உறுத்தலும், அழுத்தமும் எனது வாழ்வின் கணங்களிலும் நுழைந்திருந்தது.

2008 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வராய் இருந்த கலைஞருக்கு கைகளைக் கீறிக் குருதியில் தோய்த்து ஒரு கடிதம் எழுதினேன், தமிழகத்தில் இல்லையென்றாலும் வாழ்கிற பெங்களூர் மாநகரில் என்னால் இயன்ற போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறேன், பல்வேறு தமிழ் அமைப்புகள் நிகழ்த்திய போராட்டங்களில் தவறாது கலந்து கொண்டிருக்கிறேன்.

அன்றைய கர்நாடக காவல்துறை இணை ஆணையர் (டாக்டர் ரமேஷ்) அலுவலகத்தில் அவரோடு ஒரு மணி நேரம் விவாதம் செய்து அனுமதி பெற்றுப் போராடி இருக்கிறேன், கர்நாடக உளவுத் துறை அதிகாரிகளால் மிரட்டப்பட்டிருக்கிறேன்.

இன்றைய தமிழக முதல்வரின் தீர்மானம் என்னைப் போல தனது மொழியின் மீதும், தனது சமூகத்தின் மீதும் அன்பு கொண்ட எண்ணற்ற மனிதர்களின் கூட்டுழைப்பில் உருவானது, இதனை என்னுடைய வாழ்வின் நிறைவான வெற்றியாகவும் என்னால் பார்க்க முடிகிறது. இந்த வெற்றி முகமறியாத பல மனிதர்களின் உழைப்பிலும், தீவிர எண்ணங்களாலும் உருவாக்கப்பட்டது என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

நான் வாழ்கிற வாழ்க்கை நிறைவான சமூக அக்கறை கொண்ட வாழ்க்கை என்கிற பெருமிதம் இந்தக் கணங்களில் தோன்றுகிறது, இந்த நேரத்தில் விழித்திரைகளில் பலரது முகங்கள் நிழலாடுகிறது.

தூக்கு விதிக்கப்பட்ட மனிதர்களில் பெரும்பாலானவர்கள் குற்றமற்றவர்கள் என்று முதல் நாளில் இருந்து இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிற எனது தந்தையார், முதல் நாளில் இருந்து இன்று வரை போராடும் திரு.வை.கோ, வழக்கை நிதிச் சிக்கல்களில் இருந்து காப்பாற்றிய ஐயா.நெடுமாறன்.

பிறகு தமிழக வீதிகளில் மூவரின் விடுதலையை ஒரு அரசியல் பொருளாக மாற்றிக் காட்டிய அண்ணன் சீமான், தொடர்ந்து இடை விடாது குரல் கொடுத்து வந்திருக்கிற அண்ணன் திருமா, இணையத்தில் பல சறுக்கல்கள் இருந்தாலும் திரும்பத் திரும்ப எழுந்து தனது குரலைப் பதிவு செய்யும் தம்பி பாக்கியராசன், வழக்கறிஞர் மணி செந்தில்.

இன்னுயிர் ஈந்த செங்கொடி, முத்துக்குமரன், வழக்கறிஞர் கயல், மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி, ராஜ்குமார் பழனிச்சாமி, Save Tamils இயக்கத்தின் பெங்களூர் செயல்வீரர் நற்றமிழன் பழனிச்சாமி, தம்பிகள் தமிழன்பன், மணிமாறன், நிலவன், அண்ணன் அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் ஸ்ரீதர், ஐயா தமிழ்மறவன், தமிழ் மக்களின் அரசியலுக்கு ஒரு புதிய அடையாளம் கொடுத்த புதிய தலைமுறையின் திரு. பாரிவேந்தர் (பச்சமுத்து), ஒரு நாள் முழுதும் போராட்ட களத்தில் இருந்த எனது அன்பு மகள் நிறைமொழி, போராட்டங்களுக்குச் செல்கிற போதெல்லாம் தடை சொல்லாத துணைவியார் இன்னும் எண்ணற்ற முகங்கள்.

இவர்கள் எல்லோரையும் இப்போதே சந்தித்து கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது இப்போது, ஆனாலும், அவரவர் வாழ்வின் பாதையில் ஓடிக் கொண்டிருப்பார்கள், என்னைப் போலவே, இறுதியாக எனது பல்லாயிரம் ஆண்டு கால மொழியின் இந்தச் சொற்களில் அவர்கள் அனைவரும் இணைந்தே இருப்பார்கள், தமிழே எம்மை இணைக்கிறது எல்லா வேறுபாடுகளில் இருந்தும்.

தமிழக முதல்வர் அம்மாவுக்கும், பாசப் போராட்டம் நிகழ்த்தி வென்று காட்டிய அற்புதம் அம்மாவுக்கும் நன்றியெல்லாம் கிடையாது ஒரு ராயல் ஓ. பி. எஸ் பாணிக் கும்பிடு, கலைஞரையும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல வச்ச உங்க டைமிங் சென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு,

சோ. ராமசாமி, சுப்புரமணியசாமி, அமெரிக்க ஆப்ரிக்க நாராயணசாமிகள், காங்கிரஸ் கொரடா மொரடா A B C D E F G H இளங்கோவன் போன்ற இன விரோதக் காமெடி பீசுகளுக்கு ஒரு வேண்டுகோள் “எங்களை ஒன்றிணைக்க இன்று போல் என்றும் ஓயாது நீங்கள் பாடுபட வேண்டும்”.
“விடுதலை என்பது யாராலும் உங்களுக்கு வழங்கப்படுவதல்ல, நீங்களே போராடிப் பெற்றுக் கொள்வது” என்கிற யாரோ ஒரு அறிஞனின் சொற்கள் நினைவுக்கு வருகிறது.

——————–

இன்று கோயம்பேடு செங்கொடி திடலுக்கு சென்றிருந்தேன். நம் தாய் தமிழ் உறவுகள் பலரும் வந்திருந்தனர். எழுவர் விடுதலை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றே நோக்கத்தில் அனைவரும் அங்கே கூடி இருந்தனர். எந்த திடலில் நம் போராட்டம் வீரியம் பெற்றதோ அதே திடலில் இந்த போராட்டம் இனிதே நிறைவு பெற்றது.

நமக்கு நினைவு தெரிந்து ஈழத்தின் வீழ்ச்சிக்கு பிறகு முதன் முறையாக ஒட்டு மொத்த தமிழினத்திற்கு இதுவே மிகப்பெரிய வெற்றியாகும். சுப்ரமணிய சாமி நடுங்கும் ஒரே மனிதர் திருச்சி வேலுச்சாமி அங்கு வந்திருந்தார். நம் இன உணர்வு இப்போது மேலோங்கி உள்ளது என்பதை பற்றி அவர் கூறும் போது , ஈழத்தில் ஒரு இலட்சம் தமிழர்கள் இறந்து தமிழக தமிழர்களுக்கு இன உணர்வை வரவழைத்து உள்ளனர் என்று கூறினார் . 2009 முன் இனஉணர்வு அற்று இருந்த தமிழர்களை உண்மையில் ஈழத் தமிழர்கள் தான் தட்டி எழுப்பி உள்ளனர் என்றால் அது மிகையல்ல .

அற்புதம் அம்மாவை சந்தித்து அவருக்கு நம் வாழ்த்துகளை பகிர்ந்தோம். அம்மாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கவிஞர் தாமரை உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் குளமாக காட்சி அளித்தார் . முதல்வர் தமிழராக இல்லை என்றாலும் இப்போது அவர் செய்த காரியத்தால் அவர் தமிழராக உருபெற்றுவிட்டார் என்று கூறினார். பின்பு மூவர் விடுதலை நெருப்பை தமிழகமெங்கும் பரப்ப காரணமாக இருந்த மூன்று புரட்சி பெண்கள் அங்கயர்க்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகியோர்களை சந்தித்து நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம் . அவர்கள் செய்த அந்த ஒப்பற்ற போராட்டத்தின் போது நாம் என்னென்ன செய்தோம், எப்படி இணையத்தில் செய்தியை பரப்பினோம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டு மகிழ்தோம். செங்கொடி திடலின் உரிமையாளர் திருச்சி சௌந்தர்ராஜன் ஐயா விற்கு நமது நன்றியை உரித்தாக்கினோம். அவர் மட்டும் அப்போது இடம் கொடுக்கவில்லை எனில் இப்போராட்டம் வெற்றி பெற்றிருக்காது . அதை அவரிடம் சொன்ன போது அவர் அதை ஏற்க மறுத்தார். அது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. பின்னர் நிறைய கல்லூரி மாணவர்கள் , உணர்வாளர்கள் , களப்பணியாளர்கள் வந்திருந்து ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது . இதே உணர்வுடன் தமிழர்கள் இன்னும் சிறுது காலம் போராடினால் தமிழ் நாடு தமிழரின் கையில் என்பதில் ஐயமில்லை. வளர்க தமிழர் ஒற்றுமை. அனைவருக்கும் நம் நன்றிகள்.

இராச்குமார் பழனிசாமி செயலாளர், தமிழர் பண்பாட்டு மையம்.

இந்த மனுஷியை பற்றியும் தெரிந்துக் கொள்ளுங்கள்…
ankayatkanni
மூன்று தமிழர்களின் கருணை மனு இந்திய குடியரசு தலைவரால் ஆகஸ்டு 2011ல் நிராகரிக்கப்பட, செப்டம்பர் 9 அன்று தூக்கு என்ற நிலை உருவானது.. மூவரையும் காப்பாற்ற, இவருடன் சேர்த்து மூன்று பெண் வழக்கறிஞர்கள் கோயம்பேட்டில் சாகும் உண்ணாவிரதம் இருக்க துவங்கினர். சிறு பொறியாக கிளம்பிய அந்த உணர்வலை எங்கும் படர, தங்கை செங்கொடி இக்கோரிக்கையை முன்வைத்து தன்னை தீக்கு இறையாக்கினார்.

கோரிக்கை இன்னும் வலுக்க, தமிழக முதலமைச்சர் தனது அமைச்சரவை கூட்டி ‘மரண தண்டனையை குறைக்க’ குடியரசு தலைவரை கேட்டுக் கொண்டார். அது சட்டமன்ற தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் கருணை மனுக்கள், மீண்டும் வழக்கு என தொடரப்பட்டு, நேற்று அதன் தீர்ப்பு மூன்று தமிழரை தூக்கில் இருந்து காப்பாற்றி இருக்கிறது.இன்று, தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கிறது…

எல்லா பயணங்களும் முதல் காலடியில் துவங்குவதுபோல, 2011ல் ஒரு கையறு நிலையில் போராட்டத்தை துவங்கிய சகோதரி அங்கயற்கண்ணிக்கு நன்றி சொல்ல வேண்டியது இந்த நேரத்தின் அவசியமாகிறது…

—————————-

தாய்மை உள்ளம் கொண்ட செங்கொடி உயிர் கொடுத்து போராடிய போராட்டம் …ஒட்டு மொத்த தமிழினத்தின் ஒன்று பட்ட இடைவிடாத போராட்டம் இன்னமும் உயிர் ஊசலாடும் மாந்த நேயத்தின் இறுதி எச்சதிற்கு கிடைத்த இந்த வெற்றி ஒட்டு மொத்த தமிழ் உலகையும் பெரும் மகிழ்ச்சி கொள்ள வைத்திருக்கின்றது!

senkodi9
“விடுதலை செய்!
விடுதலை செய்!
நிரபராதிகளை விடுதலை செய்!”
-அன்று வீதிதோறும் போர் செய்து இன்னுயிரீந்த நம் சகோதரி தோழர் செங்கொடி.
“சாவு சாவதற்கு செத்தவள்தான் செங்கொடி!”

எங்கள் இந்த மகிழ்ச்சி தோழர் செங்கொடிக்கு சமர்ப்பணமாகட்டும்! வீர வணக்கம் தோழி!

அற்புதம்மாளுக்கு இனிப்புக்களை ஊட்டி மகிழ்ந்த நாம் தமிழர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளிகளாக ஆக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று இரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து வேலூரில் மத்திய சிறைச்சாலைக்கு முன்பாக திரண்ட நாம் தமிழர் இயக்கத்தின் தொண்டர்கள் பேரறிவாளனின் தாயரான அற்புதம்மாளுக்கு தமது சந்தோசத்தை தொிவித்ததுடன் அவருக்கு இனிப்புக்களை ஊட்டி மகிழ்ந்திருந்தனர்.

அத்தனை பேரையும் நான் மனசால கும்பிட்டுகிட்டதானய்யா இருக்கேன்.
murugan-amma
“நான் என்னய்யா சொல்ல முடியும். காஞ்சிபுரம் போய் செங்கொடியோட இடத்தை பார்த்து கும்பிட்டு வந்திருக்கேன். லண்டனில் இருந்து மற்ற பிள்ளைகள் வந்தாலும் அங்க போய் கும்பிட்டுதான் திரும்புவார்கள். எங்கள் வீட்டு பூசை அறையில், எங்களின் குலதெய்வமாக செங்கொடியின் படமும் இருக்கு. இந்த இடத்தில எத்தனை பேர் இப்படி தியாகம் செய்து அவர்களுக்காக பாடுபட்டிருக்கினம். எத்தனை பேர் சிறைபட்டிருக்கினம். எத்தனை பேர் கொடுமைய சந்திச்சிருக்கினம். ஓ…ப்பா….(கண்கள் கலங்கி நிற்கிறது)..யாரை மறக்க முடியும். யாரை விடமுடியும். அத்தனை பேரையும் நான் மனசால கும்பிட்டுகிட்டதானய்யா இருக்கேன்.”

-கண்ணீரோடு முருகனின் அம்மா சோமணி

தராசுகளை விற்ற நீதி
சிறைக்கம்பிகளில் சருகாகும் வசந்தத்தை
துயரத்தின் பசுமைக் காலங்கள் புச்சூடிக்கொள்ள
சிலுவைகளில் குடியேறிய சரீரத்தின்
குருதிகளில் வெம்புகிறது
சொற்களற்ற நீதிதேவனின் ஆன்மா.

எரியுண்ட வனாந்தரத்தின் சாம்பல்களில்
அநீதிகளின் எலும்புகள் மறைய
கோப்புகளில் வரையப்படுகிறது
அசோகச்சக்கரத்தின் குருட்டுத் தீர்ப்புக்கள்
வாதைகளின் குஞ்சுகளை
துன்பியலில் பொரித்திருந்த சந்தன மாலைகள்
பொய்மைகளின் கழுத்தில் கந்தகங்களை வீச
சப்பாத்திகளின் அமைதிக்கொலைகள்
நினைவில் வந்திருக்கக்கூடும்

பலியாடுகளின் அரத்தில் தீட்டப்பட்ட
கத்தியின் கூர்முனையில்
சிதிலங்கலானது விச விலங்கு
புனையப்படும் அநீதிகளின் கூரையேறி
கொடி விடும் மரணத்தின் மிரட்டல்
சிறையறையின் சுவர்களுக்கு பழக்கமானவை
தூக்குக்கயிற்றின் கனவளவை
அய்ந்து விரல்கள் பருமனாக்க
வெந்து துடிக்கிறது அற்புதத் தாய்மை
நடமாடும் ஒரு நீதி தேவதையாய் .

அகரமுதல்வன்
18.02.2014