TN-2016ஒரு விடுதலைப்போராட்டம் நிலைத்து நீடிப்பதற்கு ஒரு உறுதியான பின்தளம் தேவை. அதுதான் எண்பதுகளின் தொடக்கத்தில் புலிகள் மட்டுமல்ல ஏனைய பேராளி இயக்கங்களும் தமிழகத்தை தமது பின்தளமாகக் கண்டடைந்து தமது போராட்டத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.

 

பிற்பாடு இந்திய படைகளுடனான மோதலையடுத்து தமிழகத்தை பின்தளமாக்கி போராட்டத்தை வளர்த்துச்செல்வதில் நடைமுறைச்சிக்கல்கள் ஏற்பட்டது மட்டுமல்ல யாழ் குடவை விட்டு பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் சொந்த மண்ணிலேயே ஒரு உறுதியான பின்தளத்தை

 

வளர்த்தெடுப்பதுதான் அடுத்தகட்ட போராட்டத்தை பன்முகப்படுத்தி வளர்த்துச்செல்ல ஏதுவாக இருக்கும் என்ற புரிதலுடன் வன்னி பெருநிலப்பரப்பை புலிகள் தமது பின்தளமாக்கி கொண்டார்கள்.

 

2009 மே 18 இற்கு பிறகு மீண்டும் ஒரு நெருக்கடிக்குள் போராட்டம் தள்ளப்பட்டபோது பின்தளம் எதுவென்பதில் ஒரு குழப்பகரமான நிலை.

 

‘போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் மாறாது’ என்ற தேசிய தலைவரின் சிந்தனை வரிகளுக்கு ஏற்ப நாம் பேராட்ட வழிமுறையை மாற்றி நடந்த இனஅழிப்புக்கு நியாயம் கேட்கும் ஒரு இராஜதந்திர போராட்ட வழிமுறையை கையிலெடுத்தபோதே அந்த பின்தளமாக இயல்பாகவே புலமும் தமிழகமும் மாறிவிட்டன.

 

ஆனால் தமிழர் தரப்பு அதை சரியாகக் கணிக்கவில்லை என்பது வேதனையானது. நடந்த இனஅழிப்பின் பின்விளைவாக எமது பின்தளத்தைக்கூட இனங்காண முடியாமல் அல்லது இனங்காண விடாது தடுக்கும் ஒரு நிகழச்சி நிரலுக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம்..

 

2009 நடந்து முடிந்த இனஅழிப்பிற்கு பிறகான நமது தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடான ஒரு தெளிவற்ற – குழப்பகரமான – எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் ஒரு மனநிலையின் வெளிப்பாடாக அமைந்த எமது மதிப்பீடுகளின் விளைவு இது.

 

எமது இந்த மனநிலையை எதிரிகளும் அவர்களின் அடிவருடிகளும் தமக்கு சாதகமாக்கி தமிழகத்தையும் புலத்தையும் போராட்டத்திலிருந்து துண்டித்துவிட இன்றுவரை துடியாய்த் துடிக்கிறார்கள்.

 

இதற்கு நம்மவர்கள் பலரும் பலியாகியிருப்பது துரதிஸ்டவசமானது. மே 18 இற்கு பிறகு எமது பேராட்டத்தை மீளெழவிடக்கூடாது என்பதன் செயற்பாட்டு அர்த்தம் எமக்கான ஒரு பின்தளத்தை நாம் உருவாக்கக்கூடாது என்பதிலேயே தங்கியிருக்கிறது.

 

எதிரிகளும் பிராந்திய மேற்குலக சக்திகளும் ஒன்றிணைந்து புலம் மற்றும் தமிழக போராட்டசக்திகளை எதிர்க்கும் அல்லது தமக்கு சார்பாக வளைக்கும் தந்திரத்தின் பின்புலம் இதுதான்.

 

எனவே இந்த குரல்களை நாம் இனங்கண்டு புறக்கணிப்பது மட்டுமல்ல புலமும் களமும் ஒன்றிணைந்து ஒரு பின்தளத்தை உருவாக்குவதனூடாகவே எமது அடுத்த கட்டப் போராட்டத்தை வலுப்படுத்த முடியும்.
இந்த பின்னணியில் நின்றுதான் நாம் தமிழக தேர்தலை நோக்க வேண்டும்.

 

தமிழீழத்தின் விடுதலை என்பது தமிழகத்தில் தங்கியிருக்கும் ஒரு அரசியல் – இராஜதந்திர அம்சம். மே 18 இற்கு பிறகு இதில் மேலும் கணிசமான இடம் தமிழகத்திற்கு போய் விட்டது மட்டுமல்ல மீண்டும் எமது விடுதலைப் பேராட்டத்தின் பின்தளமாகவும் தமிழகம் மாறியிருக்கிறது.

 

எனவே தமிழக அளவில் போராட்ட அரசியல் இராஜதந்திர வழிமுறைகள் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் புரட்சியிலிருந்து ஆட்சியை கைப்பற்றுவது வரை இறங்கி வேலை செய்ய வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான ஒரு நெருக்கடி.

 

ஆனால் மே 18 இற்கு பிறகு குழு – கும்பல்களாக பிளவுபட்ட நாம் தமிழகத்திற்குள்ளும் அதை கொண்டு நகர்த்தி அங்கும் பிளவுகளை விரிவுபடுத்தியதுதான் நமது சாதனை.

 

இனஅழிப்புக்குள்ளாகி விடுதலை வேண்டி நிற்கும் ஒரு இனமாக நாம் நேச சக்திகளை சரியாக இனங்கண்டு அதன் பின் நிற்க தவறியதன் விளைவுதான் நமது இன்றைய இழிநிலை.

 

முழுமையாக நமது அரசியலுடன் – விடுதலையுடன் உடன்படும் ஒரு சக்தியை இனங்காண்பது கடினம்.

 

அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. குறைந்த பட்ச வேலைத்தி;ட்டங்களின் அடிப்படையில் முரண்பாடுகள் இருந்தாலும் எமக்கேயுரிய நிபந்தனைகளுடன் அந்த சக்தியை அரவணைத்து நமது நிகழ்ச்சி நிரலை கொண்டு நகர்த்த வேண்டும்.

 

ஆனால் நாம் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலக்குள் சிக்கி நமது நேச சக்திகளையும் பகைத்து கொண்டது அல்லது ஒதுக்கி தள்ளியது சமகால உண்மை.

 

தமிழக சட்ட மன்ற தேர்தலை ஈழத்தமிழர்களாகிய நாம் எப்படி அணுக வேண்டும் என்ற புரிதலில் ஒரு குழப்பமே காணப்படுகிறது.

 

ஏனென்றால் தமிழீழ ஆதரவு சக்திகள் கூட பிரிந்து நின்று தேர்தலை எதிர்கொள்கின்றன. அது தமிழக கள யதார்த்தத்தின் விளைவு. நாம் அதை கேள்விக்குட்படுத்த முடியாது.

 

தமிழக தேர்தல் களத்தை மையமாக்கி ஈழ ஆதரவு சக்திகள் மோதிக் கொள்வதை ஈழத்தமிழர்கள் விரிவுபடுத்துவதும் அதை வளர்த்துச் செல்வதும் கண்டிக்கப்பட வேண்டியது. இதை இனஅழிப்பை சந்தித்த ஒரு இனத்தின் அரசியல் சாணக்கியமாகக் கருத முடியாது.

 

அத்தோடு ஒரு தேர்தல் வெற்றி நமது அரசியலை புரட்டிப்போட்டுவிடும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. ஆனால் மீண்டும் ஒரு பின்தளமாக இயங்க வேண்டிய தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தில் தமிழீழ ஆதரவு சக்திகள் பேரம் பேசும் வல்லமையுடன் தமது இருப்பை தக்க வைப்பது இங்கு முக்கியமாகிறது.

 

தமிழீழ ஆதரவு சக்திகளான நாம் தமிழர், மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என்பவை கணிசமான இடங்களை கைப்பற்றுவதனூடாக இந்த இருப்பை தக்க வைக்க முடியும்.

 

அதுவே என்றோ ஒரு நாள் தமிழக அளவில் வெடிக்ப்போகும் தமிழீழத்திற்கான மக்கள், மாணவர் புரட்சிக்கான ஒரு சாதகமான நிலையை பொத்திப் பாதுகாப்பது மட்டுமல்ல சமகாலத்தில தமிழகம் நமது பின்தளமாக நின்று போராட்டத்தை விரிவுபடுத்தவும் உதவும்.

 

எனவே முரண்பாடுகள் இருந்தாலும் ஈழ ஆதரவு சக்திகளின் வெற்றியை உறுதிப்படுத்துவதும் தேர்தலின் பின் அவர்களை ஒன்றிணைத்து ஒரு பொதுவேலைத்திட்டத்தின் கீழ் ஒருமுக்பபுடுத்துவதுமே அரசியல் சாணக்கியமாக இருக்க முடியும்..

 

அதை விடுத்து எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அவர்களை பிரித்தாள்வது அல்ல..

 

சிந்திப்போம்.. செயற்படுவோம்..