tn-2015decவரலாறு காணாத பெருமழையால், சென்னை மாநகரமே, வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது. இதனால், கட்டடத் தீவுகளாக சென்னை நகரம் காட்சி அளிக்கிறது. இலட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, இருப்பிடம், உணவு, அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.

 

சென்னை நகரம் சந்தித்துள்ள வரலாற்றுப் பெருந்துயராக அமைந்துள்ள இந்த இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாத அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

 

தமிழகத்தில் இயற்கை அனர்த்தத்தில் சிக்குண்டு வெள்ளத்தில் மூழ்குண்டு தவிக்கும் அன்னை தமிழக உறவுகளுக்கும் இந்த வெள்ளத்தில் உயிர் இழந்த தமிழ் உறவுகளுக்கும் உதவுவது புலத்தில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று கடனாகும்.

 

இயற்கையின் இந்த பேரிடரில் இருந்து மீண்டு எம் உறவுகள் மீண்டும் இயல்பு வாழ்வு வாழ தாய் தமிழக உறவுகளுக்கு உலக தமிழ் உறவுகளும் கை கொடுக்க வேண்டும்.

 

நேற்றுக்காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், சென்னை தாம்பரத்தில் மட்டும் 490 மி.மீ. மழை பதிவாகியது.

 

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து, அங்கிருந்து நீர் திறந்து விடப்பட்டதால், சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும், பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

 

அடையாறு உள்ளிட்ட ஆறுகளின் கொள்ளவை மேவி வெள்ளம் பாய்வதால், சைதாப்பேட்டை, அடையாறு பாலங்களுக்கு மேலாகவும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் முக்கிய பாலங்கள் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

சென்னை நகருக்கும் வெளியிடங்களுக்குமான தரைவழிப்பாதைகள் அனைத்தும், வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், இன்று மூன்றாவது நாளாகவும் தரை மற்றும் தொடருந்து போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளன.

 

நேற்றுமுன்தினம் தொடக்கம் விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.

 

சென்னை மாநகர் மட்டுமல்லாது, அதன் புறநகர்ப் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 

லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர். சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

 

TN-flood-2015-decஇதனால், மின்கலங்களுக்கு அமின்னேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவசர உதவிகளுக்கும் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தமுடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தரைவழித் தொலைபேசி, கைத்தொலைபேசி சேவைகளும் முடங்கியுள்ளன.

 

நேற்றுக் காலையில் மழை ஓரளவு தணிந்திருந்த போதிலும், மாலையிலிருந்து மீண்டும் இரவிரவாக மழை கொட்டியதால் மக்கள் பெரும் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.

 

சென்னை நகரில் பெரும்பாலான வீடுகளின் தரைத்தளங்களில் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து, மக்கள் மாடிகளிலும், மொட்டை மாடிகளிலும் தஞ்சமடைந்தனர்.

 

ஆனால், இப்போது பல இடங்களில் வெள்ளம் முதல் மாடிக்கும் புகுந்துள்ளதால், மொட்டைமாடிகளில் பல் தஞ்சமடைந்துள்ளனர்.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் முப்படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

எனினும், மிகப்பரந்தளவு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரனர்த்தத்தினால், உதவிகளை உரிய முறையில் வழங்க முடியாமல் தமிழ்நாடு அரசாங்கம் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

 

சென்னையில் கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, மாம்பலம், வடபழனி, அசோக்நகர், கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர், ஆவடி, அம்பத்தூர், அமைந்தகரை, வளசரவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி,கே.கே.நகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், வில்லிவாக்கம், கொரட்டூர், ஆவடி மற்றும் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்டவை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 

ஈழத்தில் மக்கள் துயருற்ற போதெல்லாம் தானாடா விட்டாலும் தசை ஆடும் என்பதற்கிணங்க ஓடோடி வந்து எமக்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தியதோடு ஈகியர்கள் வடிவில் உயிரும் அள்ளி கொடுத்த எம் தமிழ் உறவுகள் இன்று துயர் உற்று இருக்கையில் அவர்கள் அவலம் போக்கும் பணியில் உலகத் தமிழர்கள் நாமும் பங்கேற்பது எம் காலக் கடனாகும் .

 

இன்றளவும் ஈழத்தில் எம் மக்களுக்கு நடந்த சொல்லொணா கொடிய இனப்படுகொலைகளின் போதெல்லாம் உலகில் எமக்காக குரல் கொடுக்க ஒரு தேசம் இல்லை என நாம் அழுதாலும் எமக்காக எம் தமிழ் உறவுகள் தமிழகத்தில் உள்ளார்கள் என்றே எம் கண்ணீர் துடைத்து தோள் கொடுத்தவர்கள் எம் தாய் தமிழக உறவுகள். இன்று அவர்களுக்கு ஒரு இன்னல் என்றால் நாம் பார்த்திருக்க முடியுமா?

 

உறவுகளே எம் அன்னை தமிழக உறவுகளின் கண்ணீர் துடைக்கும் காலப்பணியில் இணைந்து கொள்ளுங்கள்.

 

தமிழக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் வெள்ள அவலங்களின் துயர் தீர்க்க சிறு துளி பெரு வெள்ளம் என உதவ வாருங்கள்.