இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு,

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்

 

ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை

 

சல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் ஒற்றுமையுடனும், கட்டுப்பாடுடனும், அமைதியாகவும், யாருக்கும் எவ்வித இடையூறில்லாமலும் ஒருவார காலமாக நடத்தியப் போராட்டம் மக்களின் பேராதரவைப் பெற்றது.

 

இதன் விளைவாக டில்லிக்கு விரைந்து சென்ற தமிழக முதல்வர் பிரதமருடன் கலந்து பேசி சல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்தார். ஆனால், மாணவர்கள் நிரந்தரமான சட்டம் வேண்டும் எனக் கூறி தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

 

இன்று, மாலையில் சட்டமன்றம் கூடி சல்லிக்கட்டை நிரந்தரமாக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விதம் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் மாணவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதைக் கண்டு மனநிறைவுடன் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார்கள்.

 

ஆனால், அதுவரை பொறுத்திராமல் இன்று அதிகாலையில் சென்னை கடற்கரையிலும் தமிழகமெங்கும் அமைதியாக போராடிக்கொண்டிருந்த மாணவர்களைப் போராட்டக் களங்களில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் வேலையை காவல்துறை அவசரம் அவசரமாக செய்ததினால் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுவிட்டன.

 

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மீதும் மக்கள் மீதும் காவல்துறை நடத்திய கொடுமையான தாக்குதல்களின் விளைவாக கலவர சூழ்நிலை உருவாகிவிட்டது.

 

போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை எத்தகைய வன்முறையிலும் மாணவர்கள் ஈடுபடவில்லை. காவல்துறையினரின் வேண்டாத நடவடிக்கையின் விளைவாக கலவர சூழ்நிலை உருவாகி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

 

சட்டமன்றத்தில் சல்லிக்கட்டுக்கான நிரந்தரச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் முதலமைச்சர் மாணவர் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி அவர்களின் சந்தேகங்களைப் போக்க முன்வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.

 

தமிழக பண்பாட்டினைக் காப்பதற்காகவே மாணவர் போராட்டம் மக்களின் ஆதரவுடன் நடைபெற்றது என்பதை யாரும் மறக்கக்கூடாது. தமிழகத்தின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் யாரும் செயல்படவேண்டாம் என வேண்டிக்கொள்கிறோம்.

 

தமிழகத்தில் உருவாகியுள்ள கலவரச் சூழ்நிலை மாற்றப்படவேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள், மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாக விடுதலைச் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.

 

ஒப்பம்

ஆர். நல்லகண்ணு

பழ. நெடுமாறன்