கன்னியாகுமரி பா.ம . உறுப்பினர் மற்றும் பாஜக மாநில தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் அவர்களை சென்னை கமலாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபச்கேவை அழைக்கக் கூடாது என்ற கோரிக்கை கடிதத்தை கொடுத்தனர். தமிழர்களின் நிலைப்பாடு இது தான் என்று தெளிவாக அவரிடம் நாம் சொல்லிவிட்டோம் . மேலும் இலங்கை மீது மோடியின் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளோம். இந்த சந்திப்பில் திரு அதியமான், இராஜ்குமார் பழனிசாமி, அக்னி மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். தமிழர்களுக்கு ஆதரவாகத் தான் மோடியின் அரசு செயல்படும் என்று உறுதி அளித்தார் பொன்.ராதா கிருஷ்ணன் .

கோரிக்கை கடிதம் வருமாறு.

பெருமதிப்புக்குரிய தமிழர் திரு.பொன்னார் அவர்களுக்கு அன்பு வணக்கம்.

tna-bjp
இந்திய ஒன்றியத்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு.நரேந்திர மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சி இலங்கை அதிபரும், போற்குற்றவாளியுமான ராஜபக்சேவை அழைத்திருப்பது பத்து கோடி தமிழர்களின் நெஞ்சங்களை புண்படுத்தி உள்ளது. இலங்கையில் ஒரு மாபெரும் இனப்படுகொலை அரங்கேறி ஐந்து ஆண்டுகள் முடிவடைந்தும் , இதுவரை தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையான தீர்வும் எட்டப்படாத நிலையில், இன்னும் அகதிகளாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஈழத்தில் இருந்து தமிழர்கள் தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் என்பதை தாங்கள் அறிவீர்கள் . ஐ.நா மனித உரிமை ஆணையர் இலங்கை மீது பன்னாட்டு மனித உரிமை மீறல் , மற்றும் போர்குற்ற விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

இருப்பினும் இலங்கை அரசு இதுவரை அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் புறக்கணித்து விட்டது. இன்றுவரை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். ஈழத்தில் இப்போது உள்ள தமிழர்கள் ஒரு மிகப்பெரிய அச்சத்தின் நடுவே வாழ்ந்து வருகிறார்கள். எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு, அவர்கள் மண் பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்ந்து வருகிறார்கள் தமிழர்கள். இதை ஐ.நா வோ உலக நாடுகளோ தட்டிக் கேட்டால், அவை எவற்றையும் பொருட்படுத்துவதில்லை இலங்கை அரசு. ஒரு அடங்காத அரக்கனை போல் நடந்து கொள்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே . இப்படி ஒரு மனநிலையில் உள்ள இலங்கை அதிபரை உலக நாடுகள் தனிமைப்படுத்தி, இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிப்பதின் மூலமாகத் தான் ஒரு தீர்வை எட்ட முடியும் என்று கருதுகின்றனர் தமிழர்கள்.

இந்நிலையில் ராஜபக்சேவை மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிப்பது, இராஜபக்சேவிற்கு நாம் கொடுக்கும் நற்சான்றிதழ் போல ஆகிவிடும். மேலும் அவருக்கு கொடுக்கப்படும் மரியாதை தமிழர்களுக்கு அவமரியாதையாக கருதப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் அரசின் மீது இதே காரணத்திற்கு தான் தமிழர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இப்போது பாஜகவும், காங்கிரஸ் அரசைப் போலவே ராஜபக்சேவிற்கு மரியாதை செய்ய நினைத்தால் இந்த அரசும் தமிழர்களின் கோபத்திற்கு உள்ளாகும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதனால் உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக நாங்கள் உங்கள் முன் வைப்பது, இராஜபச்கேவை பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பது தான். அதன் பின்னர் தமிழர்களுக்கான தீர்வை குறித்து நாம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். முதலில் இப்படியான இனப்படுகொலை செய்தவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வருதல் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் இந்த செய்தியை உங்கள் தலைமைக்கு தெரியப்படுத்தி தமிழர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.