தமிழகத்தின் உறவுகள் தற்போது மிகப்பெரும் அவலத்தை சந்தித்துள்ளனர். கஜா புயலின் தாக்கத்தினால் தமிழ் மக்கள் உயிரிழப்புக்களை சந்தித்துள்ளதுடன், மிகப்பெரும் பொருளாதார இழப்புக்களையும் சந்தித்துள்ளனர்.

 
தமிழ் மக்கள் சந்தித்த இந்த போரிழப்பு குறித்து இந்திய மத்திய அரசோ அல்லது இந்திய மற்றும் தமிழக ஊடகங்களோ அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும், அதனை உலகறியச் செய்வதற்குரிய தமது கடமைகளில் இருந்து அவர்கள் தவறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

 
அவை உண்மையும் கூட, தமது கட்சிகளின் பெயரில் கூட தமிழை இணைக்காது மிக நுட்பமாக தவிர்த்துள்ள திராவிடக் கட்சிகளிடமும், அதன் முதலாளிகளிடமும் நாம் எந்த கருணையையும் எதிர்பார்க்க முடியாது.

 
எனினும் ஊடகங்களின் வஞ்சகத்தை முறியடித்து, பதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் தமது பணியை சிறப்பாக செய்துள்ளன. அது மட்டுமல்லாது, இளைய சமூதாயமும், புதிதாக தமிழ் இனப்பற்றுடன் தமிழை தனது கட்சியின் பெயரில் கொண்டுள்ள அரசியல் கட்சிகளும் மக்களோடு மக்களாக நின்று அழிவைச் சந்தித்த மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துவருவதுடன், உதவிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

 
எதிர்பார்த்தது போல இந்திய மத்திய அரசின் அடிமைகளான தமிழகத்தின் இரட்டை முதல்வர்கள் தமது கால்கள் மண்ணில் படாது, உலங்குவானூர்தியில் வலம்வந்து சென்றுள்ளனர்.

 
தமிழ் மக்கள் குறிப்பாக விவசாய மக்களின் இந்த இழப்பு இந்திய மத்திய அரசுக்கும், தமிழின விரோத சக்திகளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் நாம் அதனை முறியடித்து பாதிக்கப்பட்ட மக்களை உயர்த்த வேண்டும்.

 
அண்டைய மாநிலங்களில் அழிவுகள் ஏற்பட்டபோது தமிழக மக்கள் பெருமளவு உதவிகளை வழங்கியிருந்தனர், ஆனால் தற்போது அவர்களும் தமிழ் மக்களுக்கு உதவ முன்வரவில்லை.

 
அதற்கான காரணம் தெளிவானது, அதாவது விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணி தராத அவர்கள் உதவிகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பது தவறானது. ஆனால் நாமும் எதிர்வரும் காலங்களில் அவர்களின் வழியை பின்பற்ற வேண்டும்.

 
தமிழை தனது அரசியல் கட்சியின் பெயரில் கொண்டிராத கட்சிகளை நாம் புறம்தள்ள வேண்டும், தமிழ் மக்களின் துயரங்களை வெளிக்கொண்டுவராத ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும், இதனை நாம் ஒரு போர்க்கால அடிப்படையாக கொண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் ஏனெனில் அழிவில் இருந்து எமது இனத்தைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றில் நாம் தற்போது உள்ளோம்.

 
பொய்யான செய்திகளை பிரசுரித்த நாளோடு ஒன்றை பாதிக்கப்பட்ட மக்கள் தீயிட்டு எரித்துள்ள தகவல்களும் உள்ளன. ஆனால் நாம் அதனுடன் எமது கோபத்தை நிறுத்திவிடாது இந்த ஊடகங்களை பணம் கொடுத்து வாங்குவதையோ அல்லது இந்த ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதையோ தவிர்க்க வேண்டும்.

 
அரச இயந்திரங்களின் ஊடாக வழங்கப்படும் நிதிகளையும் இயலுமானவரை தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில் நிவாரண நிதியிலும் அவர்கள் ஊழல்களை மேற்கொள்வதுடன், வரிகளையும் அறவிட்டுக் கொள்வார்கள்.

 
எமது எதிரிகளை இனம்காணுங்கள், அவர்களின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்யுங்கள், பொருட்களை, ஊடகங்களை, திரைப்படங்களை புறக்கணியுங்கள், ஆலயங்கள் எங்களை புறம்தள்ளுமானால் அவர்களுக்கான நன்கொடைகளையும், வழங்கும் நிதிகளையும் நிறுத்துங்கள். ஆந்த நிதியைக் கொண்டு வேறு பல நல்ல காரியங்களை ஆற்றுங்கள், அது தான் எதிரிக்கு நாம் கொடுக்கும் பதிலடி என்பதுடன், அவர்களை தோற்கடிப்பதற்கான திட்டமுமாகும்.

 
மேற்குலகத்தின் கொள்கையும் அதுவே, ஏனைய நாடுகளை தண்டிப்பதற்கு அவர்கள் எப்போதும் பொருளதாராத்தையே கையில் எடுப்பதுண்டு. அங்குள்ள மக்களும் தற்போது தேவாலயங்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டனர், நிதிவழங்குவதையும் குறைத்துக்கொண்டனர். அரசினால் எல்லா தேவாலயங்களுக்கும் தொடர்ந்து நிதிகளை வழங்க முடியாது, எனவே பிரித்தானியாவில் பல தேவாலயங்கள் களியாட்ட விடுதிகளாக மாறி வருகின்றன அல்லது கைவிடப்படுகின்றன. ஒரு பாரிய மாற்றத்தின் ஊடாகத் தான் தமிழ் இனம் தன்னைக் காப்பாற்ற முடியும்.

 

 

எனவே இந்த இழப்புக்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு உலகத் தமிழ் மக்கள் தமது உதவிகளை வழங்கவேண்டும் என்பதுடன், அதனை தமிழக அரசு அல்லது இந்திய மத்திய அரசின் ஊடாக வழங்காது நேரிடையாக வழங்கவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

 

ஈழம் ஈ நியூஸ்.