டெசோ அமைப்பின் சுயநலக் கூத்துக்கள் நமக்கு தெரியாததல்ல. ஆனாலும் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் “ஐநா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும்” என்று முன்வைத்த கோரிக்கை மிக முக்கியமான ஒன்று.

புலிகளையும் குற்றவாளிகளாக்கும் ஐநா விசாரணைப் பொறிமுறைக்கு தமிழர் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட ஒரு “செக்” அது.

ஏனைய தமிழக தமிழ்த்தேசிய இயக்கங்களும் தமிழக மாணவர் அமைப்புக்களும் கூட இந்த கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும்.

tn-protest
அத்தோடு இனஅழிப்பிலிருந்து தப்பி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்களை பெற்று விசாரணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இது ஐநா எமக்கு நீதியை தூக்கித் தந்துவிடும் என்பதற்காக அல்ல.

மேற்குலக நலன்களை மையப்படுத்திய ஐநா நகர்வுகளுக்கும் பிராந்திய வல்லரசான இந்தியாவையும் தமிழர் தரப்பு ஒரு இக்கட்டினுள் தள்ளி தமிழர் போராட்டத்தையும் போராட்ட சக்திகளான புலிகளையும் காத்துக்கொள்வதற்காகத்தான்..

ஏனென்றால் நாம் கேட்டவுடன் எதோ இந்தியா விசாரணைக்குழுவிற்கு விசாவைக் கொடுத்து உள்ளேவிடப்போவதில்லை.

தமிழின அழிப்பிற்கு உடந்தையாக இருந்த இந்திய ஆளும் வர்க்கம் அதை எப்படி அனுமதிக்கும்?

எனவே நாம் இந்த நிபந்தனையை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்துவதனூடாக இந்திய அரசை அம்பலப்படுத்துவதுடன் தமிழர் தேசத்திற்கு எதிரான ஐநா நகர்வுகளையும் கட்டுப்படுத்தலாம் அல்லது எமக்கு சார்பாகத் திருப்பலாம்.

குறிப்பாக புலிகளை போர்க்குற்றவாளிகளாக்கி எமது போராட்ட நியாயத்தை மழுங்கடிக்கும் தந்திரத்தை இதனூடக முற்றாகக் கேள்விக்குட்படுத்தலாம்.

அதாவது முக்கிய சாட்சிகளான பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடாத்த சிங்கள அரசு விசா வழங்காமல் அனுமதி மறுத்திருக்கிறது. இனஅழிப்பிலிருந்து தப்பியவர்களில் எஞ்சியவர்களில் பலர் தமிழகத்திலேயே தங்கியுள்ளார்கள்.

எனவே இந்த இரு தொகுதி மக்களிடம் நேரடியாக விசாரணை செய்யாமல் எப்படி ஒரு விசாரணை முழுமயடைய முடியும்? எப்படி தீர்ப்பு எழுத முடியும்?

எனவே இங்கு யார் குற்றவாளிகள்? விசாரணைக்கு அனுமதி வழங்காத சிங்களமும் அதற்கு முண்டு கொடுக்கும் இந்தியாவுமா? அல்லது திறந்த மனத்துடன் விசாரணைக்கு தயாராக நிற்கும் தமிழர் தரப்பா?

எனவே தாயக மக்களிடமும் தமிழகத்திலுள்ள தமிழர்களிடமும் சுதந்திரமான விசாரணை நடத்தாமல் புலிகளை குற்றாளிகளாக்கவே முடியாது.

எனவே நாம் “தீர்ப்பு” வழங்குவதற்கு முன்பே இந்த நிபந்தனைகளை முன்வைத்து போராடிய வரலாற்றை பதிவு செய்வோம்.

தமிழக மாணவர், மக்கள் இயக்கங்கள் “ஐநா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை ஆரம்பித்து தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக பிராந்திய சக்திகளை அம்பலப்படுத்தி அவற்றின் நகர்வுகளை முறியடித்து எமது விடுதலைக்கு சார்பாக உலக ஒழுங்கை திருப்புங்கள்.

உங்களால் முடியும்!

ஈழம்ஈநியூஸ்.