சமரசங்களை மறுத்து தன்னலன்களை வெறுத்து பிறர் இன்புற்றிருக்க போராடுகிற தமிழக மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் இடம்பெற்ற “புலிப்பார்வை” இசை வெளியீட்டு நிகழ்வில், ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்புக்களை காட்டச் சென்ற தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சியைத் தருகின்றது.

ravikaran
மிக நெடிய காலமாக ஈழத் தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட இன அழிப்பானது 2009 இல் உச்சத்தைத் தொட்டது. இறுதிப்போரின் இறுதிக் கணங்களில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்கள் காணொளி மற்றும் புகைப்பட பதிவுகளாக வெளி வந்து உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறன. அன்று வேடிக்கை பார்த்த உலகின் மனச் சாட்சியை இன்று தட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அதன் விளைவாக எழுந்த தமிழக மாணவர் எழுச்சி தமிழின வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இதன் விளைவாக, தமிழக மக்களின் உணர்வின் வெளிப்பாடாக தமிழக சட்டசபையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எண்ணிலடங்காத ஒப்பற்ற தியாகங்களால் கட்டி எழுப்பப்பட்ட தமிழரின் உரிமைப்போராட்டத்தின் நோக்கங்களை சிறுமைப்படுத்தும் வகையிலும், உலகின் மனச்சாட்சியைக் கேள்வி கேட்ட பல உண்மைப் பதிவுகளை செயலிழக்கச் செய்யும் வகையிலான காட்சிகள் “புலிப்பார்வை ” திரைப்பட முன்னோட்டக் காட்சியில் இருந்தமை உலகத்தமிழினத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொடர்ந்து திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்வையிட்ட தமிழக மாணவர்கள் மற்றும் உணர்வாளர்களின் கருத்துக்கள் மூலம் அப்படைப்பு முற்றிலும் தவறான கருத்தியலால் புனையப்பட்டது என நிரூபணமாகியுள்ளது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தவறான கருத்தியலைக் காவும் படைப்புக்கு எதிராக தமது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்திய தமிழக மாணவ தம்பிகள் தாக்கப்பட்டது உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழர் விடிவு தொடர்பில் சமரசங்களை மறுத்து தன்னலன்களை வெறுத்து பிறர், இன்புற்றிருக்க போராடுகிற தமிழக மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்தார்.