அன்னிய தேசங்களால் தமிழகத்திற்கோ, தமிழக மக்களுக்கோ, தமிழக தலைவர்களுக்கோ, தமிழக முதலமைச்சருக்கோ ஏதேனும் களங்கம் ஏற்படுத்தப்பட்டால், அது இந்திய இறையாண்மைக்கோ, இந்திய தன்மானத்திற்கோ விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுவதில்லை.

ஆனால் ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த ஒரு “தெரு நாய்க்கு” ஏதேனும் நிகழ்ந்தால்கூட இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைந்ததாகக் கூறி இந்திய தேசம் பொங்கி வழியத் தயாராகிவிடும்.

இந்திய வரலாற்றில் முன்பு பலதடவை இப்படியான பல சம்பவங்கள் நடந்ததும், அதன் விளைவாக தூதர்களை திருப்பி எடுத்தததும் நேரடியாக சென்று கண்டனம் தெரிவித்தது என்றும் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

Jayalalithaa_pointing_finger_295
அண்மையில்கூட அமெரிக்காவில் தேவயானி என்ற இந்திய தூதரக அதிகாரி எந்த அறமுமின்றி மனித நேய சட்டங்களை குழிதோண்டிப் புதைத்து விட்டு உலகளாவிய அனைத்து சட்டங்களையும் மீறி தனது சொந்த நாட்டை சேர்ந்த பணியாளை நடத்திய குற்றத்திற்காக அமெரிக்க காவல்துறை கைதுசெய்த போது, தேயானியின் மீதுதான் முழுத் தவறும் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அமெரிக்க அரசு தனது செய்கைக்கு போதிய விளக்கம் அளித்தும் இந்திய அரசும் இந்திய ஊடகங்களும் இந்திய மக்களும் பொங்கி பொருமினார்கள்.

டெல்லியிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரை திருப்பி அனுப்புமளவிற்கு சென்றது இந்திய அரசு.

ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சிங்கள இனஅழிப்பு அரசின் பாதுகாப்பு அமைச்சின் இணையம் அவதூறு பரப்பியதையடுத்து இந்திய “இறையாண்மைக்கு” எந்த பங்கம் விளைந்ததாகவும் தெரியவில்லை.

இந்திய ஊடகங்களும் இந்திய மக்களும் தங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு விடயம் என்பது போல் மவுனமாக கடந்து சென்றார்கள்.

தமிழக மக்களும், தமிழக தலைவர்களும் மட்டுமே இந்த அவதூறுக்கு எதிராக போராட வேண்டிய கட்டம். இந்த போராட்டங்களையடுத்து இந்திய அதிகாரிகள் சிங்கள அரசின் இனக்கொலையாளர்களுடன் சுப்ரமணியசுவாமி போன்றவர்களை கொண்டு பின்கதவு வழியாக பேசி ஒரு “மன்னிப்பை” அந்த இணையத்தில் மட்டும் பதிவு செய்துவிட்டு தமது வேலையை பார்க்க சென்று விட்டார்கள்.

சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற இன்னபிற நாடுகளுடனும் இந்த வழி முறையை கையாண்டிருக்கலாமே! இந்திய அதிகாரிகளுக்கு அது ஏன் சாத்தியப்படவில்லை?

பதில் ஒன்றும் பூடகமானதல்ல. தமிழர்கள் “இந்தியத்தின் எதிரிகள் ” என்ற இந்திய பொதுஉளவியலின் விளைவு இது.

தமது சொந்த நாட்டு மக்களான தமிழர்களை விட அன்னிய தேசத்தை சேர்ந்த சிங்களவர்கள் இந்தியத்திற்கு நெருக்கமாக இருப்பதன் பின்னணி இதுதான்.

2009 இல் ஒரு இனத்தை கூண்டோடு அழிக்க கைகோர்க்குமளவிற்கு இந்த உளவியல் இந்திய அதிகார வர்க்கத்தை இயக்கியதென்பது நம்கண்முன் கிடக்கும் சமகால வரலாற்று உண்மையாகும்.

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் அமைச்சாகும். அதன் செயலராக மகிந்தவின் சகோதரரான கோத்தபாய இருக்கிறார்.

எனவே தமிழகம் மீது மேற்கொள்ளப்பட்ட சிங்களத்தின் நேரடியான தாக்குதல் இது.

இப்படியான ஒரு செயலை பாகிஸ்தான், சீனா, மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக்கள் வட இந்திய மாநில முதலமைச்சர்களுக்கு எதிராக செய்திருந்தால் இந்த நேரம் எல்லையில் போர் தொடங்கியிருக்கும் எனபதே கசப்பான யதார்த்தமாகும்.

இலங்கையின் தற்போதைய வெளியுறவுக்கொள்கையை தீர்மானிக்கும் வல்லமை கொண்டவர்கள் நிரம்பிவழியும் அமைச்சாக பாதுகாப்பு அமைச்சு இருக்கிறது.

தமிழக முதல்வருக்கு எதிரான இந்த அவதூறு என்பது சாதாரணமாக எழுந்தமானமாக நடந்த ஒன்றல்ல.

தமிழர்களையம் தமிழ்நாட்டையும் இந்திய அரசிலிருந்து வேறுபடுத்தி கையாளும் சிங்களத்தின் அரசியல் நிலைப்பாட்டின் விளைவு இது.

இந்த தைரியத்தையும் இத்தகைய புறநிலைகளையும் சிங்களத்திற்கு கொடுத்ததே இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான சிந்தனைதான்.

இந்த சம்பவத்திற்கு இந்திய மத்திய அரசு காட்டிய எதிர்வினையின் தன்மையிலிருந்தே இதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

எனவே தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. சிங்கள அரசுக்கு எதிராக கோபம் கொள்வது அறியாமை. இதற்கு காரணமான மத்திய அரசு மீது தமிழகம் கோபம் கொள்வதே அறமாகும்.

உடனடியாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். அதுவே மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், இலங்கையுட னான இந்திய வெளியுவுக்கொள்கையை மாற்றியமைக்கவும், மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து அவர்கள் உரிமைகளை மீட்டெடுக்கவும் வழி செய்யும்.

இதன் வழி தமிழகத்தை நம்பியிருக்கிற தமிழீழ மக்களுக்கு விடுதலை கிடைக்க வழியேற்படும்.

ஈழம்ஈநியூஸ்.