பாஜகவின் தருண்விஜய் தமிழை அங்கீகரிக்கிறார், புகழ்கிறார் எனவே அவரைப் பாராட்டவேண்டுமென்பதன் அவசியம் என்ன?
இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் பின்வாசல் வழியாக தமிழர்களின் அரசியலை,பண்பாட்டினை, மொழியை ஆக்கிரமிக்க நுழைவதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் முட்டாளாக நம்மால் இயலாது.

”இந்தியா பலமான நாடாக இருக்க வேண்டுமென்றால் தென்னக மொழியை வட இந்தியர் கற்றுக்கொள்ள வேண்டும், குறிப்பாக தமிழைக் கற்கலாம், திருவள்ளுவரை இந்தியாவின் பெருமையாக அறிவிக்கலாம் “ என்று இது போல பலவற்றினை பேசியதை கருத்தில் கொண்டு அவருக்கு பாராட்டு விழா செய்யப்படுகிறது.

கவிஞர் வைரமுத்து இந்தியாவின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்காத தேச பற்றாளர்’ என்பது அறிந்த ஒன்றுதான். அவரும் தருண் விஜயும் பாராட்டிக்கொள்வதில் நமக்கு புதிதாக ஏதும் இல்லை.ஆனால் தமிழ்த்தேசியத்தினை முன்னெடுக்கும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

ஒருபுறம் தமிழை இந்தியாவின் அடையாளமாக ஏற்றுக்கொள்வதில் ஏதும் பிரச்சனை எமக்கில்லை. இதன் மூலம் இந்தியா பலமடையும் என்று ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் நம்புகிறது. அமெரிக்காவின் அமைதி முகமாக நார்வே இருக்கிறது என்று எப்படி புலிகள் சொன்னார்களோ அதைப் போன்ற அமைதிமுகம் தருண் விஜய்.

மறுபுறம், ராஜேந்திரச் சோழனை இந்தியாவின் அடையாளமாக மாற்றிவிட நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். சோழர் காலத்தின் பாதகங்களை நாம் விமர்சனத்தோடே அனுகுகிறோம், ஆனால் அதற்காக இந்துத்துவ கும்பல் இதை கொள்ளையடித்து தமிழர் வரலாற்றினை ’இந்திய’ வரலராறாக மாற்றி எழுதுவதை ஏற்க இயலாது.

”தமிழர்களை பரந்து பட்ட இந்தியாவிற்குள்ளான அங்கமாக நாங்கள் முன்னிலைபடுத்துகிறோம். ஏனெனில் நீங்கள் தனித்துவமானவர்கள்” என்பதும் உங்களை கூடிக்கெடுப்பது மட்டுமே உகந்த சாணக்கிய வழி என்பது புரிகிற காரணத்தினால் பார்ப்பனியம் இதை செய்கிறது.

புத்தம், சமணம் என பல்வேறு சிந்தனைகள் இவ்வாறே சிதறடிக்கப்பட்டன என்பதை நாம் மறக்க இயலாது. பார்ப்பனியம் அடுத்து கெடுக்கும் வலிமை உடையது.

தருண்விஜய் பேசுவதால் தமிழ் வளரப்போவதோ, தாழ்வதோ இல்லை. ஆனால் இந்த கும்பல்களுக்கு அங்கீகாரம் அளிப்பது நமக்கு நாமே சவக்குழி வெட்டுவது போன்றது. ’தி இந்து’ வின் குடும்பத்தின் நிர்வாக கட்டுபாட்டில் இயங்கும் மியூசிக் அகடெமியில் வைரமுத்து பேசி மகிழ்வது அவரது சொந்த பெருமைக்கே தவிர தமிழுக்கு என்றுகருத முடியாது.
ஈழத்தமிழன் செத்து விழுந்த பொழுது வராத கவிஞர்கள், இன்றூ தமிழின் பெருமை பேச அரங்கம் ஏறுகிறார்கள். தமிழன் இல்லாமல் தமிழ் எங்கே வாழ்வது?

பார்ப்பனியத்தின் வெற்றியே அடுத்தவர் அடையாளத்தினை தனதாக்கிக்கொள்வது. இதற்கு பல படிகளை அது முன்வைத்து கடந்து உள்ளே வரும்.

1) பிறர் மொழியை அங்கீகரிக்கும், தனதாக்கிக்கொள்ளும், பின் ஆக்கிரமிக்கும், அதன் வளமையை அழிக்கும்.

2)அடுத்து, அம்மக்களின் பண்பாட்டின் மீது தனது ஆளுமையை செலுத்த பின்வாசல் வழியாக நுழையும். அம்மக்களின் தொன்மத்தினை தனது பண்பாட்டு அடையாளத்துடன் இணைத்து திரிக்கும். ஒரு கட்டத்தில் அவர்களது பண்பாடே நமது பண்பாடு என்பது போன்று திரிபு ஏற்படும்.

3) பின்னர், அம்மக்களின் வரலாற்றினை கொண்டாடும், பின் வரலாற்றினை திரிக்கும்.

இது தமிழகத்தில் நிகழ ஆரம்பித்திருக்கிறது. எப்பொழுதும் போல சுயநல கும்பல் அதிகார மையத்தின் கண் அசைவிற்காக காட்டிக்கொடுக்கும் வேலையை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

நன்றி: திருமுருகன் காந்தி.