சினிமாவின் வழியே ‘புரட்சி’ யை உள் வாங்கி அதன் வழியே வந்தவர்களையே புரட்சியின் குறியீடுமாக்கி அவர்களிடமே ஆட்சி அதிகாரத்தையும் கையளித்து ஒரு பொதுப் புத்தியை உருவாக்கிய ஒரு தலைமுறையிடம் ‘புரட்சியை’ அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் விளங்கி் அதையே தனது போராட்ட வழிமுறையாகக் கொண்ட தமிழரசன் புரிந்து கொள்ளப்படாதது ஆச்சரியமான ஒன்றல்ல..

 

ஆனால் அது எவ்வளவு நோய்க்கூறு நிரம்பிய சமூகமாக அதை மாற்றியிருக்கின்றது என்பதை அணமையில் கருணாநிதி மறைவின்போது அறியக்கூடியதாக இருந்தது.

 

தேர்தல் அரசியல்வாதிகள் தொடக்கம் புத்திஜீவிகள், படைப்பாளிகள், கலைஞர்கள், இடதுசாரிகள் மட்டுமல்ல தேர்தல் பாதையை விட்டு இயக்க அரசியல் செய்பவர்கள்கூட இந்த நோய்க்கு பலியாகி ஓவென்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

அப்போதும் கூட தமிழரசன் வழி வந்த ஒரு சிறிய குழு தன்னந்தனியாக இதற்கு எதிராக வாளை வீசிக் கொண்டிருந்தது.

 

மேற்படி கூட்டு பேரிரைச்சலில் அது அப்படியே அமுங்கிப்போனது.

 

ஆனாலும் எமக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு எதிர்வினை அது.

 

எமக்கு ஒரே ஒரு கவலைதான், 2009 தமிழின அழிப்பு நேரம் தமிழரசனை கிரமமாக உள்வாங்கிய ஒரு தலைமுறை தமிழகத்தில் உருவாகியிருந்தால் கருணாநிதி போன்றவர்களின் அரசியல் சூழ்ச்சிகளையும் தாண்டி தமிழக மக்களின் ஒட்டுமொத்த எழுச்சி வேறு வடிவம் எடுத்திருக்கும். தமிழின அழிப்பு தடுக்கப்பட்டிருக்கும்.

 

அது தமிழீழத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் ஒரு விடிவைத் தந்திருக்கும்.

 

காலம் கடந்த ஞானம் இது. நமது தவறும் இதில் இருக்கிறது.

 

இனியாவது தமிழகப் பரப்பில் தமிழரசன் போன்றவர்களுக்கான இடம் நிறுவப்பட்டு இது குறித்த உரையாடல் நீட்டிக்கப்பட வேண்டும்.

 

ஏனெனில் கருணாநிதி குடும்பத்திடம் வாழையடி வாழையாக ஆட்சியைக் கையளிப்பதையே இலட்சியமாகக் கொண்ட அறிவுஜீவிகளும், அரசியல் இயக்கங்களும் அண்மையில் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இது தமிழகத்திற்கு மட்டுமல்ல , விரைவில் தமது போராட்ட வழிமுறைகளை மாற்றியமைக்கும் சாத்தியங்களுடன் உள்ள தமிழீழத்திற்கும் ஆபத்து.

 

இவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கூட ஒரு இனத்தின் அரசியல் ஒரு குடும்பத்தைச் சுற்றியே சுழல்வது அந்த இனத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே பேராபத்து.

 

எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவாவது தமிழரசன் போன்றவர்கள் குறித்த விழிப்புணர்வு அவசியம்.

பரணி கிருஸ்ணரஜனி