தமிழர்களுக்கு நிறைய உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன. அதை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது போலும்.

 

புலிகளுக்கு அனைத்துலக ஆதரவு கிடைக்காததற்கு – குறிப்பாக இந்தியாவின் ஆதரவு கிடைக்காததற்குக் காரணம் மாற்றுக் கருத்துக்களுக்கு -ஜனநாயகத்திற்கு இடமளிக்காமை, அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகளை படுகொலை செய்தமை என்று ஒரு பட்டியலை வெளியிலிருந்து மட்டுமல்ல எமக்குள்ளிருந்தும் பல மூளை வீங்கிய ஆட்கள் காவித் திரிவதை அறிவோம்.

 

இது அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் திட்டமிட்டே மிகைப்படுத்தப்பட்ட – ஊதி பெருப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.

 

இதில் பகுதியளவே உண்மை உள்ளது. ஒரு ஆயுதப் போராட்டத்தில் இத்தகைய விபத்துக்கள் தவிர்க்கப்பட முடியாதவை.

 

ஆனால் அரசுகள் இதை விட மோசமாக செயற்படும் போது யாரும் விமர்சிப்பதுமில்லை – கேள்வி கேட்பதுமில்லை.
அது வரலாற்றில் மறக்கப்பட்டும் விடும்.

 

உதாரணம் இந்திய அரசு.

 

இந்திய அரசு தமிழர் தேசத்தை வல் வளைப்பு செய்வது என்று முடிவெடுத்தவுடன் இந்தியப் படைகள் தமிழ் பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகளை கைது செய்தது மட்டுமல்ல படுகொலையும் செய்தார்கள். தமது அழித்தொழிப்பை அதாவது இன அழிப்பை மறைக்க பத்திரிகை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்த்தார்கள்.

 

மருத்துமனைகள், வணக்கத் தலங்கள் கூடத் தப்பவில்லை. மக்கள் அங்கு தஞ்சம் அடையாமல் இருக்கவும் காயம்பட்டவர்கள், நோயாளிகள் சிகிச்சையை தடுக்கவும் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர்கள், மருத்துவ விரிவுரையாளர்கள், தாதிகள் உட்பட பலரையும் படுகொலை செய்தார்கள்.

 
இப்படி பெரியதொரு பட்டியல் இருக்கிறது.

 

இவ்வளவுக்குள்ளும் கருத்து சுதந்திரம், ஜனநாயகம், அகிம்சை என்ற ஏதாவது சாமான் இருக்கிறதா?

 

எனது அறிவுக்குட்பட்டு பயங்கரவாதிகள், பாசிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்ட ISIS, தலிபான், அல்கொய்தா கூட இப்படி கூட்டு வெறியாட்டம் நடத்தவில்லை.

 

ஆனால் இதை ஒரு அரசு இன்று 31 வருடங்களுக்கு முன்பு செய்தது.

 

எந்த பத்திரிகை அலுவலகத்திற்கு புலிகள் குண்டு வைத்தார்கள்? எந்த வணக்கத் தலத்தை தகர்த்தார்கள்?

 
முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய போது கூட ஒரு முஸ்லிம் மதகுருவையோ, ஒரு அறிவுஜீவியையோ புலிகள் கொலை செய்யவில்லை. பள்ளிவாசல்களை அப்படியே விட்டு வைத்தார்கள்.

 
அந்த வெளியேற்றத்திற்கு கூட காலங்கடந்து மன்னிப்பு கேட்டார்கள். மீளக் குடியமர அழைப்பு விடுத்தார்கள்.

 

அதுதான் அறம் – அதுதான் புலிகள். அந்த அறம் (பயங்கரவாத) அரசுகளிடம் இல்லை

சொல்லுங்கள் உண்மையில் யார் பயங்கரவாதிகள்…?

 

ஒரு முஸ்லிம்கள் வெளியேற்றத்தை, ஒரு ராஜினி திரணகமவை, ஒரு கதிர்காமரை வைத்து இந்த உலக ஒழுங்கு புலிகளை பயங்கரவாதிகள் என்று கட்டமைப்பதை இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் நம்ப போகிறீர்கள்? ( இந்தக் கொலைகளை புலிகள்தான் செய்தார்கள் என்ற எந்த அடிப்படை ஆதாரம் கூட இல்லை என்பது வேறு ஒரு தனிக்கதை)

 

புலிகளை “குற்றவாளிகள்” என்று சொல்லும் தகுதி பயங்கரவாத அரசுகளுக்கும் அதன் அடிவருடி அமைப்புக்களுக்கும் இல்லை – குறிப்பாக இந்திய அரசுக்கு இல்லை.

 

அதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அப்போதுதான் நாம் ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவத்தைக் கண்டடைய முடியும்.

 

அதற்கு முதலில் பிராந்திய – மேற்குலக அரசுகள் குறித்த மாயையிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.

பரணி கிருஸ்ணரஜனி