தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமது தேவைகளுக்காக பெயரளவில் வைத்திருக்கின்றார்களே தவிர அதனை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதனை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தமிழ் மக்களின் பலத்தை அதிகரிக்க தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். -என்று கோரிக்கை விடுத்துள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.
Rayappu-Josh

 

நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால், ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

 

“தமிழர் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதில் தமிழ் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தமிழர்கள் தனித்துவமான ஒரு தேசிய இனமாக வாழ்ந்தபோதும், சிங்கள பேரினவாதிகளால், நாம் சிறுபான்மை இனம் என்றே அழைக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பது தவறு என்று நான் முன்னாள் ஜனாதிபதிகள் எல்லோருக்கும் கடிதம் எழுதியிருந்தபோது, சந்திரிகா பண்டாரநாயக்கா என்னை “பக்கா ரைகர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

தமிழர்களுக்கு எதிரான போரில் உண்மைகள்தான் புதைக்கப்பட்டன. அப்பாவி மக்களைக் குண்டுவீசி அழித்துவிட்டு, புலிகளையும்,அவர்களது ஆயுதங்களையும் அழித்துவிட்டதாக தமது ஊடகங்களினூடாகப் பொய்யான தகவல்களைப் பரப்பி வந்தனர்.

 

இந்த நிலையில் தமிழ் ஊடகங்கள் உண்மையை வெளிக்கொண்டு வருவதில் சரியான பங்கை வகித்தன. தமிழர்களிடையே நிலவுகின்ற பல்வேறு முரண்பாடுகள், வேறுபாடுகள் காரணமாக நாங்கள் பிரிந்து நிற்பதால்,ஆட்சியாளர்களுக்கே அது சாதகமாக அமைந்துவிடும் என்பதை தமிழ் கட்சிகள் புரிந்து செயற்பட வேண்டும்.

 

தமிழ் கட்சிகள் ஒவ்வொரு பக்கமாகப் பிரிந்து நிற்காது, ஒன்றாகச் செயற்பட்டாலேயே பலமாக இருக்கமுடியும். அப்பொழுது தான் காத்திரமான ஒரு தனித்துவமான அரசியல் கட்சியாகச் செயற்பட முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தமிழ் மக்களின் பலத்தை அதிகரிக்க தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முன்மொழிவை நான் சமர்ப்பிக்கின்றேன். இதற்கு நான் மட்டுமல்லாது, தமிழ் சிவில் சமுக அமைப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றன.என்றும் அவர் தெரிவித்தார்