tiger-flag‘உலகில் இனப்படுகொலைகள் அதிகரித்து வருவதை தடுக்க நாம் துணிச்சலுடனும், விழிப்புடனும், உறுதியுடனும் செயற்படவேண்டும்’ என்று ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் எலியாசன் அண்மையில் கூறியிருந்தார்.

‘இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கும் மற்றும் பிற சிறுபான்மைக் குழுக்களுக்கும் எதிராக நாசியர்களால் மனித சமுதாயத்துக்கு இழைத்த குற்றங்களின் எதிரொலியாக 1948ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி நடந்த ஐ.நா. பொதுச்சபையின் முதல் கூட்டத்தில் உலக ஒப்பந்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இனப்படுகொலை, அனைத்துலகச் சட்டத்தின்கீழ் குற்றம் எனக் கூறப்பட்டது. இந்த உலக ஒப்பந்தத்தை இன்று உலகில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் நடைமுறைப்படுத்துகின்றன. இனப்படுகொலையைச் செய்வோர், அதற்குத் தூண்டுகோலாய் இருப்போர், அதற்குத் திட்டம் தீட்டுவோர் ஆகிய அனைவரும் இச்சட்டத்தின்கீழ் குற்றவாளிகள் ஆகின்றனர்’ என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், இதே ஐ.நா. இருக்கின்ற நிலையில்தான் தமிழ் மக்கள் மிகமோசமான இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். உலக நாடுகளையும் ஒன்றிணைத்து இந்த இனப்படுகொலையை செய்துமுடித்திருக்கின்றது சிங்களப் பேரினவாதம். இந்த இனப்படுகொலையை கண்டும் காணாமல் இருந்து, அதற்குத் துணைபோயிருக்கின்றது ஐ.நா. என்பது ஆதாரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பை, போர்க் குற்றம் என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட்டு தப்பிக்கப்பார்க்கின்றது ஐ.நாவும் மேற்குலகமும்.

போர் நடைபெறாதபோதும், மக்களுக்கு ஆயுததாரிகளால் அவலம் ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே இன்று சில நாடுகளில் தனது அமைதிப் படைகளை ஐ.நா. களமிறக்கிவிட்டிருக்கின்றது. ஆனால், போர் நடைபெறப்போகின்றது, அழிவு நிகழப்போகின்றது என்பதைத் தெரிந்தும் இலங்கையில் இருந்து தனது பணியாளர்களைக்கூட வெளியேற்றியதன் மூலம் சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட சாட்சியமற்ற இனஅழிப்பிற்கு துணைபோனது ஐ.நா.

அத்துடன், இந்த இன அழிப்பிற்கு மேற்குலகமும் துணைநின்றது. பயங்கரவாத முத்திரை குத்தி விடுதலைப் புலிகள் மீது தடைகளை விதித்து, விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்களை கைது செய்து சிறைகளில் அடைத்து, அமெரிக்கா முதல் ஐரோப்பிய ஒன்றியம் வரை மலேசியா முதல் அவுஸ்திரேலியா வரை என சிங்கள இன அழிப்பிற்கு துணைநின்றது உலகம். இவர்களின் கைதுகளும் விடுதலைப் புலிகள் மீதான தடைகளுமே சிங்களப் பேரினவாதம் தனது இனஅழிப்பை துணிவோடு முன்னெடுக்க வழிவகுத்துக்கொடுத்தது மட்டுமல்ல, தமிழினம் தங்கள் மீது கட்டவிழ்த்த இனஅழிப்பை தடுக்கமுடியாமல் போனதற்கும், தமிழினம் மேற்கொண்டது ஒரு விடுதலைப் போராட்டமே என்பதை உலக மக்களிடம் நியாயப்படுத்த முடியாமற் போனதற்கும் காரணமாக அமைந்தன. அத்துடன், இராணுவ ரீதியாகவும் சிறீலங்காவின் படைகளைப் பலப்படுத்தும் அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்தன.

இப்போது குற்றச்சாட்டுக்கள் தங்கள் மீதும் வீழ்ந்துவிடும் என்பதால்தான், சர்வதேச நாடுகள் தலையிடாதவாறு, கொலையாளிகளே தாங்கள் செய்த கொலைகளை விசாரிப்பதற்கு அனுமதிப்பதுபோன்று, சிறீலங்கா அரசாங்கத்திடமே இனப்படுகொலைக்கான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றது. உங்கள் விரல்களாலேயே உங்கள் கண்களைக் குத்திக்கொள்ளுங்கள் என்று யாராவது கூறினால் குத்திக்கொள்வார்களா என்ன..? சிங்களப் பேரினவாதத்திடம் இதனை எதிர்பார்க்கின்றது உலகம்.

கடந்த வாரம் கூட, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற அவசரத்தினால் கொண்டுவரப்பட்டதல்ல, சர்வதேச விசாரணை என்று இறங்கினால் சுட்டுவிரல் தங்களையும் நோக்கியும் நீளும் என்ற அச்சத்தினால்தான்.

அவர்களின் அச்சத்தை உறுதிப்படுத்துவதுபோல்தான் கடந்தவாரம் ஜேர்மனியின் பிரீமன் நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கள் அமைந்துள்ளன. 30 பேரின் சாட்சியங்களை ஆதாரங்களுடன் பதிவு செய்து 11 நீதிபதிகள் ஒன்றிணைந்து வழங்கிய தீர்ப்பிது. மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கள் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியாது போனாலும், மணி கட்டிய மாடுகள் சொன்னால் கேட்பார்கள் என்பதுபோல், இவர்களது முடிவுகள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முடிவுகளாக இருப்பதால் தமிழர்களின் நீதிக்கான தேடலில் டப்பிளின் தீர்பாயம் போல், பீரிமன் தீர்ப்பாயத்தின் முடிவுகளும் காத்திரமாக இருக்கும்.

இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழர்களின் கைகளுக்கு வலுவான ஓர் ஆயுதம் கிடைத்திருக்கின்றது. நடந்தது இனப்படுகொலைதான் என்பதை பீரிமன் தீர்பாயம் ஆதாரங்களுடன் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கின்றது. நடந்தது இனப்படுகொலை என்பதால் அந்த இனம் பிரிந்து சென்று தனித்துவாழும் உரிமையைப் பெற்றுவிடுகின்றது. இனப்படுகொலை என்ற சொல்லை உச்சரிப்பதற்கு இந்த உலகம் அஞ்சுவது இதற்காகத்தான்.

எனவே, இந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்களை இலங்கை, இறையாண்மை என்று கூறிக்கொள்ளும் உலகம் அத்தனை இலகுவில் ஒன்றும் ஏற்றுக்கொண்டுவிடாது. ஆனால், இந்த வலுவான ஆயுதத்தை தமிழ் மக்கள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கவேண்டும். இந்த உலகம் நடந்தது இனப்படுகொலைதான் என்று ஏற்றக்கொள்ளும் வரைக்கும் தமிழ் மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடமுடியாது.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு….