மாமனிதர் தராகி சிவராமின் நினைவு நாளை முன்னிட்டு ஈழம்ஈநியூஸ். இந்த கட்டுரையை மீள பதிவு செய்கிறது.

தீர்க்க தரிசனம் மிகுந்த எழுத்துக்களை தமிழீழ விடுதலைப்போராட்ட களத்திற்கு வழங்கிய சிவராமின் எழுத்துக்களில் இது சமகால தமிழ் அரசியல் தலைமைகள் கடைப்பிடிக்க வேண்டிய வரலாற்று கடமையை நினைவுறுத்துகிறது.

தமிழர் தம் இறைமையை விட்டுக் கொடுக்க இயலாது

போரால் பறிக்க முடியாமல் போன நாகலாந்தின் இறைமையை இன்று பேச்சுவார்த்தைகள் மூலம் மடக்கிப் போட முனைந்து வருகிறது இந்திய அரசு. அதாவது தமிழ் மக்கள் தமது இறைமையை சுதந்திர இலங்கையின் முதலாவது அரசுருவாக்கத்தில் இம்மியளவும் விட்டுக் கொடுக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக இயங்குவதாயின் விதிகள் அல்லது சட்டங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரங்கள் அவற்றின் அடிப்படையில் அமைந்த நீதி பரிபாலனம், அம்மக்கள் கூட்டம் உருவாக்கும் செல்வத்தில் ஒரு பகுதியை (உபரி) சேகரித்து சமூகத் தேவைக்கு பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், அம்மக்கள் கூட்டத்தின் உள்ளும் புறமும் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஒழுங்குகளை ஏற்படுத்தல், மேற்கூறியவற்றை செய்வதற்குரியவர்களை தெரிவு செய்தல் என்பன அவசியமாகும்.

july-1983-p
ஒரு புவியியல் பரப்பினுள் மேற்படி கூறப்பட்ட அனைத்தும் செய்யப்பட்டபொழுது அரசுகள் உருவாகின. இந்த வகையில் உலகின் மிகப் பழைய சமூக நிறுவனம் அரசே ஆகும். சமூக, அரச உருவாக்கத்திற்கான மேற்படி செயல்களை ஆற்றும் தகைமையையே நாம் இறைமை (Sovereignty) என்கிறோம். மன்னர் ஆட்சிக் காலத்தில் மேற்படி செயல்கள் அனைத்தையும் செய்யும் தகைமை, உரிமை அரசனுக்கு மட்டுமே இருப்பதாக கொள்ளப்பட்டது. பல பழைய சமூகங்களில் இவ்விறைமை மன்னனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டதாகவும் சில மக்கட் குழுமங்களில் இது மக்களாக உடன்பட்டு அரசனுக்கு வழங்கியதாகவும் பலவாறாக கருதப்பட்டது. முடியாட்சிகள் மக்களாட்சிகளாக மாறியபோது மேற்படி இறைமை ஒரு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியதாயிற்று. ஒரு மக்கட் கூட்டம்தான் ஒரு சமூகமாக இயங்குவதற்கு என மேற்படி விடயங்களை செய்கையில் அது தன் இறைமையை செயற்படுத்துகின்றது எனக் கொள்ளப்படும்.

இவ்வாறு ஒரு சமூகம் தனது இறைமையை தன் சொந்த விருப்பின்படி பிரயோகிப்பதே அதன் சுய நிர்ணய உரிமை எனப்படுகிறது. ஒரு சமூகம் தான் சுமூகமாக இயங்குவதற்கும் தனது நலன்களை பேணி பாதுகாத்து நிலை நிறுத்துவதற்கும் ஏற்றவகையில் அது தனது இறைமையை எவ்வாறு செயல்படுத்துவது என்பது விரிவாக வரையறுக்கும் ஆவணமே ஒரு அரசின் அரசியல் யாப்பாகும்.

இந்த வகையில் ஒரு மக்கட் குழுமம் தன் இறைமையை செயல்படுத்தி ஒரு அரசியல் யாப்பை அதாவது ஒரு அரசை ஏற்படுத்தலாம் அல்லது தனது சொந்த விருப்பின்பேரில் இன்னொரு சமூகத்துடன் இணைந்து அதைச் செய்யலாம் அல்லது இன்னொரு மக்கட் குழுமம் உருவாக்கும் அரசியல் யாப்பு, அரசு தனது உகந்ததெனக் காணுகையில் தனது இறைமையை அந்த உருவாக்கத்திற்கு தன் நலன்களை பேணிடக்கூடிய நிபந்தனைகளோடு ஒப்புக்கொடுக்கலாம்.

வரலாற்றை பொறுத்தவரையில் தம்மைத் தனித்துவமான சமூகங்களாக கருதிய எல்லா மக்கட் குழுமங்களுக்கும் தமது இறைமையை தங்கு தடையின்றி செயல்படுத்திட முடிந்ததில்லை. வன்முறை மற்றும் அரசியல் வழிப்பட்ட மேலாதிக்க முறைகள் மூலம் அவை தமது இறைமையை முழுமையாக செயற்படுத்த முடியாதபடிக்கு தடைகள் போடப்பட்டன. தன்னுடைய இறைமையை முழுமையாக செயல்படுத்தி அரசுருவாக்கத்தில் ஈடுபடும் ஒரு சமூகம் தனது அதிகாரத்தினுள் இன்னொரு சமூகத்தினை அதன் இறைமை ஒப்புதல் இன்றி வைத்திருப்பதையே நாம் காலணியாதிக்கம் என்கிறோம்.

ஒரு சமூகம் தனது ஆதிக்க எல்லைக்குள் வாழும் வேறு எந்த மக்கட் குழுமமும் தனது இறைமையை முழுமையாக செயல்படுத்த முடியாதபடி ஒரு அரசை உருவாக்கும்போது அது ஒற்றையாட்சி எனப்படுகிறது. இந்த வகையில் தன்னகத்தே இறைமையுள்ள வேறு சமூகங்களை உள்ளடக்கிய ஒற்றையாட்சிக்கும் காலனியாதிக்கத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. வரலாற்றில் இவ்வாறான சூழலில் அகப்பட்டுக் கொள்ளும் சமூகங்கள் ஒன்று, தமது இறைமையை எந்த அடக்குமுறைகளின் கீழும் விட்டுக் கொடுக்காது போராடுகின்றன. இரண்டு பகுதியாகவோ, முழுமையாகவோ தமது இறைமையை விட்டுக்கொடுத்து அதன் காரணமாக இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றன. மூன்று, தமது இறைமை முற்றாக பறிக்கப்பட்ட நிலையில் ஆதிக்க சமூகங்களினுள் கரைந்து போயின.

முதலாவது வகையில் நாம் இந்தியõவின் வட கிழக்கில் உள்ள நாகா இன மக்களையும் இந்தோனேஷியாவின் ஆச்சே மக்களையும் இலங்கைத் தமிழரையும் குறிப்பிடலாம். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நாகலாந்து ஒரு தனியரசாக இருந்து வந்தது. அதை நீண்டகால போருக்கு பின்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கைப்பற்றி தனது இந்திய காலனி அரசின் ஒரு அங்கமாக இணைந்தது.

1947இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாகா இன தலைவர்கள் காந்தியை சந்தித்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் பறித்தெடுக்கப்பட்ட தமது மக்களின் இறைமையை மீள்நிலைநாட்டிடும் வகையில் தாம் மீண்டும் ஒரு சுதந்திர நாடாக செயல்படப் போவதாகக் கூறினார்கள்.

அவர்களை அப்படி செய்ய வேண்டாமெனவும் நாகலாந்து தற்காலிகமாக இந்தியாவுடன் பத்து வருடங்கள் இணைந்திருந்த பின் பிரிந்து போகலாம் எனவும் காந்தி விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பத்து வருடங்களின் பின்னர் காந்தியோடு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நாகலாந்து தனது சுதந்திரத்தை இறைமையை நிலைநாட்ட முற்பட்டபோது இந்திய படைகள் அங்கு அனுப்பப்பட்டன. பெரும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. எனினும் நாகா மக்கள் 50 வருடங்களிற்கு மேலாக தமது இறைமையை இம்மியளவும் விட்டுக் கொடுக்காமல் போராடினர். போரால் பறிக்க முடியாமல் போன நாகலாந்தின் இறைமையை இன்று பேச்சுவார்த்தைகள் மூலம் மடக்கிப் போட முனைந்து வருகிறது இந்திய அரசு.

ஆச்சே மக்களது இறைமையும் ஒல்லாந்தரால் பறிக்கப்பட்டது. பின்னர் ஆச்சே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு கையளிக்கப்பட்டது. இந்தோனேஷிய தீவுகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்றபோது ஆச்சே மக்கள் இந்தோனேஷிய பெரும்பான்மை அரசின்கீழ் கொண்டுவரப்பட்டனர். ஆயினும் அவர்கள் இன்றுவரை தமது இறைமையை விட்டுக்கொடுக்காது போராடி வருகின்றனர்.

1947இல் இலங்கைக்கு பிரித்தானியா சுதந்திரத்தை வழங்கியபோது உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பு சிங்களப் பெரும்பான்மையின் இறைமைக்குரியதாக மட்டுமே உள்ளது. இதில் தமிழர்கள் ஒரு காலனியாதிக்க கீழ்நிலையிலேயே வாழ வேண்டி வரும். இந்த யாப்பின் கீழ் அவர்கள் தமது இறைமையை இம்மியளவும் செயல்படுத்த முடியாது என்ற அடிப்படையில் தமிழர் அதை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி தமிழ் காங்கிரஸ் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது.

தமிழர் தாயகத்தில் அந்நேரம் இருந்த 13 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அது போட்டியிட்டு 7இல் வெற்றி பெற்றது. சோல்பரி ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஆதரித்த ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு கிழக்கில் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இதனடிப்படையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேறு மாற்றுத் தீர்வு இல்லாததாலும் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ் காங்கிரஸ் பிரித்தானிய அரசைக் கேட்டுக் கொண்டது. இங்கு தெளிவாக நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது தமிழ் மக்கள் தமது இறைமையை சுதந்திர இலங்கையின் முதலாவது அரசுருவாக்கத்தில் இம்மியளவும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதே அதுவாகும். இதன் பின் வந்த சிங்கக் கொடி தமிழர் தாயகத்தை அழித்திடும் சிங்களக் குடியேற்றங்கள், தனிச் சிங்கள சட்டம், 1958 தமிழர் படுகொலை, வடக்கு கிழக்கில் நடைபெற்ற அமைதி வழி அரசியல் போராட்டங்களின் மீது சிங்களப் படைகள் ஏவப்பட்டமை ஆகியன தமிழர் தமது இறைமையை எந்த வகையிலும் சிங்கள் பேரினவாத ஒற்றையாட்சியினுள் விட்டுக்கொடுக்க முடியாதென்பது உறுதிப்படுத்தின.

indra-srima
1972இல் சிங்கள தேசம் தனது முழு இறைமையை நிலைநாட்டும் வகையில் ஒரு சிங்கள மேலாதிக்க அரசியல் யாப்பை உருவாக்க முனைந்தது. இந்த முயற்சியில் தமிழருடைய இறைமை ஒரு பகுதியாகவேனும் உள்ளடக்கப்படாது விட்டால் தனது ஒற்றையாட்சி அமைப்பு அதனூடாக நாட்டின் தேசிய செல்வத்தையும் நிர்வாகத்தையும் தனது கைக்குள் மட்டுமே வைத்திருப்பதும் முழுமையாக நியாயப்படுத்த முடியாது போய் விடும் என்பதை சிங்கள மேலாண்மையாளர் உணர்ந்தனர். எனவே மறைந்த திரு.எம்.திருச்செல்வம் அவர்களூடாக தந்தை செல்வாவை ஆசைகாட்டி புதிய அரசியல் யாப்பிற்கு உடன்பட வைக்கப் பார்த்தனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

1972இல் தந்தை செல்வா தமது நாடாளுமன்ற பதவியை துறந்ததும் 1974இல் மீண்டும் போட்டியிட்டதும் தமிழ் மக்கள் தமது இறைமையை தாமாக பிரயோகிப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை என்ற அடிப்படையிலேயாகும். இதையே வட்டுக்கோட்டைத் தீர்மானம் விரிவாக எடுத்தியம்பியது.

1978இல் மிக மிக இறுக்கமான ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கியபோதும் அதில் தமிழரை அணைக்கும் முயற்சி எள்ளளவேனும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னர் நடைபெற்ற அனைத்தும் (பயங்கரவாத தடைச் சட்டம், யாழ். நூலக எரிப்பு, 83 தமிழர் படுகொலை இன்னோரன்ன) சிங்கள மேலாண்மை ஒற்றையாட்சியினுள் தமிழர் பாதுகாப்பாக வாழ்வதானால் தமது இறைமையை தாமாகவே செயல்படுத்துவதைவிட வேறு வழியில்லை என்பதை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த வகையில் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நோக்கில் தமிழர் மேற்கொள்ளும் எந்த பேச்சுவார்த்தையும் அவர்களுடைய கைவிடப்படா முழு இறைமையின் அடித்தளத்தில் நின்றே செய்யப்பட வேண்டும் என்பதே வரலாற்றுக் கட்டாயமாகும்.

டி. சிவராம் 22.06.2003