theepachchelvanகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் தோற்கடிக்க வேண்டும். ஆனால் தமிழ் கட்சிகளுக்கிடையிலான போட்டி சிங்கள தேசிவாத கட்சிகளை வெல்ல வாய்ப்பதற்கான ஆபத்தையும் ஏற்படுத்தும் நிலமையும் காணப்படுகிறது என கவிஞர் திரு தீபச்செல்வன் அவர்கள் எமக்கு பிரத்தியோகமாக வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் 17 ஆம் நாள் சிறீலங்காவில் இடம்பெறும் நாடாமன்றத் தேர்தல் தொடர்பில் ஈழம் ஈநியூஸ்இற்காக தாயகத்தில் இருந்து அவர் வழங்கிய நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு:

 

கேள்வி: தற்போதைய தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது.

 

தேர்தல் தொடர்பில் ஒரு குழப்பமான நிலையே காணப்படுகின்றது. தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒருவரை ஒருவர் தாக்கும் பிரசாரங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரான கட்சிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம். குறிப்பாக தமிழர் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்துள்ள மாவட்டங்களில் இந்தப் போட்டியால் பாதகமான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதைத் தவிரவும் தேர்தல் காலத்தில் பல்வேறு வகையான அரசியல் நடவடிக்கைகள் மக்களை குழப்பும் வித்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

 

ஒருவரை ஒருவர் சேறுபூசும் கேவலமான அரசியல்களும் சிங்களப் பேரினவாதக் கட்சியில் போட்டியிடுபவர்கள் மாவீரர்களின் இலட்சியங்களைப் பற்றிப் பேசுவதும் காலம் காலமாக இலங்கை அரசுடன் இணக்க அரசியல் செய்வர்கள் போராளிகளுக்கு சீட் கொடுக்கவில்லை என்று வேதனை அடைவதும் என பல விசித்திரமான நாடகங்கள் மக்களை குழப்ப முன்னெடுக்கப்படுகின்றன.

 

kajanசிங்களப் பேரினவாதக் கட்சிகளில் போட்டியிடுகிறவர்கள் தமிழீழ வரைபடத்துடன் போட்டியிடுகின்றனர். எந்த தமிழீழத்திற்கு எதிராக செயற்பட்டார்களோ அந்த தமிழீழ வரைப்டத்தை பயன்படுத்தி ஆசனத்தை பெற முயல்கின்றனர். மாவீரர்களைக் குறித்துப் பேசியும் ஆசனம் பெற முயல்கின்றனர். வன்னியில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஒருவர் ரணிலை மேடையில் இருத்திவிட்டு எனது தலைவர் பிரபாகரன் என்கிறார். மகிந்த போன்றவர்களுக்கும் தமிழர் தாயகத்தில் சிங்கள இனவாதக் கட்சிகளில் போட்டியிடும் பலரும் தேர்தலில் வெல்ல தலைவரைக் புலிகளைக் குறித்தும் குறித்தும் தமிழீழம் குறித்தும் வேட பேச்சுக்களை நிகழ்த்துகின்றனர். இவ்வாறான போலி வேடதாரிகளை தோற்கடிப்பது மிக முக்கியம்.

 

மக்கள் தெளிவாக தமது தீர்வையும் தேர்வையும் அளிப்பார்கள். குறிப்பாக சிங்களப் பேரினவாதக் கட்சிகளை தோற்கடித்து தமிழர் பிரதிநித்துவத்தை உரிய வகையில் வெளிப்படுத்த வேண்டும்.

 

கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புமீதும் அதன் உறுப்பினர்கள்மீதும் உரிய வகையில் என் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன். நம்முடைய விமர்சனங்கள் தமிழர் பிரதிநித்துவத்தை பலப்படுத்தவும் கொள்கைகளை இறுகப்பற்றவுமே தவிர எம்மை பலவீனப்படுத்தக்கூடாது. மக்கள் தமது பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதற்கு வெளியில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். சிங்களப் பேரினவாத கட்சிகளையும் அவைகளுடன் இணங்கம் கொண்டவர்களையும் முற்றுமுழுதாக தோற்கடிக்கும் விதமாக வாக்களிப்பதுவே எமது எதிர்காலத்திற்கு உகந்தது என்பது என் அபிப்பிராயம்.

 

கேள்வி: விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பில் யார் நின்றாலும் அவர்களுக்கு வாக்களிக்கும் நிலையில் உள்ளனரா?

 

கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஆனந்தசங்கரி தோற்கடிக்கப்பட்டார். அவர் தொடர்ந்தும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுபவர். அவருக்கு தமிழ் மக்கள் உள்ளே வைத்தே அடி கொடுத்தார்கள். இம்முறையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படும் ஒரு சிலர் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றனர். அவர்களை தோற்கடிக்கும் வாய்ப்பு வாக்காளர் வசமுள்ளது. குறிப்பாக திரு சுமந்திரனுக்குப் பதிலாக திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மக்கள் தெரிவு செய்யலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் எனில் சுமந்திரன் போன்ற சிலர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மக்களிடம் உண்டு.

 

கேள்வி: முன்னாள் போராளிகளின் கட்சி என்ற புதிய கட்சி திடீரென தேர்தல் காலத்தில் உதயமாகியதன் பின்னனி என்ன?

 

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் ஈழத்தமிழ்  மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு இயக்கம். இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்களப் பேரினவாதிகளின் இன ஒடுக்குமுறை நடவடிக்கை மாத்திரமின்றி மிதவாத தமிழ் அரசியலின் தோல்வி காரணமாகவும் அதன் விளைவாக எழுந்தது ஆயுதப் போராட்டம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் மதிவாத அரசியலில் நுழைந்தபோதும் தமிழ் மக்களுக்கான இலட்சியப் போராட்டத்தில் உறுதியாக தடம் பதித்தவர்கள் விடுதலைப் புலிகள். எனவே அந்த விடுதலைப் புலிகளின் பெயரால் கட்சி ஆரம்பிப்பது விடுதலைப் புலிகளை அவர்களின் இலட்சியத்தை கொச்சைப்படுத்தும் செயல்பாடு.

 

amparai_tna_007மிதவாத அரசியலுக்கு எதிரான மிதவாத அரசியலின் தோல்வியால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் மெளினிக்கப்பட்ட நிலையில் அதன் தலைமை தொடர்பில் இன்னமும் மர்மம் நிலவும் நிலையில் அவ் இயகத்தின் பெயரில் அல்லது அதை பிரிதிநிதித்துவப்படுத்தி கட்சி தொடங்குவது சட்டவிரோதமானது. அதேநேரம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த எவரும் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் முன்னாள் போராளிகள் கட்சி என்று ஒட்டுமொத்த போராளிகளையும் பயன்படுத்துவது உகந்ததல்ல. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 

கேள்வி: 2009 ஆம் ஆண்டு தமிழ் இனம் மிகப்பெரும் பேரழிவைச் சந்தித்த பின்னர் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது அரசியல் ரீதியாக நாம் மிகப்பெரும் நகர்வொன்றை மேற்கொள்ளவேண்டும் என்ற மனநிலை தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் வெளிப்பாடாகவே த.தே.கூ பெரும்வெற்றியை ஈட்டியது. ஆனால் மக்களின் எண்ணம் கடந்த ஐந்து வருடங்களில் ஈடேறியதா?

 

2010 ஆண்டு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 14 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தது. ஆனால் 2004ஆம் ஆண்டு தேர்தலில் 22 ஆசனங்கள் கிடைத்தன. 2010 ஆம்  ஆண்டில் வாக்களிப்பு விகிதம் குறைந்தமைக்கு தேர்தலில் வாக்களிக்கும் ஈடுபாடும் தேர்தல் அரசியல் மீதான நம்பிக்கையும் குறைந்தமை காரணம். ஆனால் அதனால் சிங்கள தேசியவாத கட்சிகள் தமிழர்களின் மண்ணில் ஆசனங்களைப் கைப்பற்றின. அதேவேளை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களின் வாக்களிப்பு விகிதம் கூடுதலாக இருந்தது. இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலும் மக்களின் வாக்களிப்பு விகிதம் கூடுதலாக இருக்கும். சிங்கள தேசிய கட்சிகளை தமிழ் மக்கள் தோற்கடிக்கும் வாய்ப்புக்கள் நிறையவே காணப்படுகின்றன.

 

ஐந்து வருடங்களின் மக்களின் எண்ணங்கள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும்சரி அல்லது வேறு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும்சரி தமிழ் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. இந்த நாட்டின் நெடுங்காலப் பிரச்சினையும் ஈழ மக்கள் ஆயுதம் ஏந்தியதும் அதற்காகவே.

 

தவிரவும் தமிழ் அரசியல் தலைமை மிதவாத அரசியலுக்கான கட்டமைப்புடனேயே இயங்குகின்றது. அது மக்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் போராட்டங்களையோ சர்வதேச கவனத்தை – ஆதரவை கோரும் போராட்டங்களுக்கோ தயாரில்லை. ஒரு தேர்தலிருந்து அடுத்த தேர்தலை அடைவதே அதன் நோக்கம். தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த அரசியல் செயற்பாடு மக்களின் எண்ணங்களை ஈடேற்றாது. தமிழர் தேசத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச அளவில் நீதியை கோரி அதன் ஊடாக நிலையான ஓர் தீர்வை தாயகத்தில் ஏற்படுத்த நாம் முயல வேண்டும். இது குறித்து தெளிவான நிலைப்பாடும் ஊக்கம் மிக்க செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை.

 

கேள்வி: தற்போதைய தேர்தலில் கட்சிகளை விடுத்து ஒவ்வொரு கட்சியிலும் மற்றும் சுயேட்சையாகவும் போட்டியிடும் தனிநபர்களை தெரிவுசெய்து வாக்களிப்பதால் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா?

 

வாக்குகளை சிதறிடிக்கும் நோக்கத்துடனேயே சுயேட்சை குழுக்கள் போட்டியில் ஈடுபடுகின்றன. அவை மக்களால் தோற்கடிக்கப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முனைந்து ஆசனம் மறுக்கப்பட்டவர் தேர்தல் சூழலில் தனது அரசியல் தேவைகளின் நிமித்தம் ஒரு கொள்கை பேசி அல்லது ஏதோ ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாய்ப்பு வழங்கியிருந்தால் அவர்களது கொள்கை எப்படி அமைந்திருக்கும்?

 

2009ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தில் மகிந்த ராஜபக்ச வடக்கு கிழக்கில் நேரடியாக தமிழர் தரப்பை பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபட்டார். தற்போது அவரது சில நண்பர்கள் அல்லது முகவர்கள் அதைச் செய்ய முனைகின்றனர். அவர்களின் நடவடிக்கைகள் வடக்கு கிழக்கில் எடுபடாது என்பதற்கு கடந்த காலத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் நல்ல எடுத்துக்காட்டு.

 

எவ்வாறானவர்களை தெரிவு செய்கின்றோம் என்பதைப் பொறுத்தே கட்சிகளின் தனிநபர்களை வெற்றி பெறச் செய்வதன் முக்கியத்துவம் அமையும். அதைப்போலவே பெரும்பாலானவர்கள் வெல்லும் கட்சி ஒன்றில் எவ்வாறானவர்களை தோற்கடிப்பது என்பதும் தோற்கடிக்கப்படும் நபர்களை சார்ந்தே முக்கியத்துவம் பெறுகின்றது.

 

vijayaகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் தோற்கடிக்க வேண்டும். ஆனால் தமிழ் கட்சிகளுக்கிடையிலான போட்டி சிங்கள தேசிவாத கட்சிகளை வெல்ல வாய்ப்பதற்கான ஆபத்தையும் ஏற்படுத்தும் நிலமையும் காணப்படுகிறது.

 

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில்?

 

ஒன்றிணைந்த இலங்கைக்குள் சமஷ்டி தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் சுயநிர்ணய உரிமையை கோரியுள்ளது. ஒஸ்லோ ஒப்பந்தத்தையும் அடிப்படையாக கோடிட்டிருக்கிறது. ஓர் விஞ்ஞாபனமாக சிறந்த ஆவணம் எனலாம். ஆனால் அதன் பாற்பட்ட செயற்பாடுகள் கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தன என்பதும் இங்கு முக்கியம்.

 

எமக்கான பிரச்சினையின் தீர்வை தெளிவாக நிரந்தரமாக நாம் கொண்டிருக்க வேண்டும். இலங்கை இனப்பிரச்சினைக்கு ஈழத் தமிழர்கள் வேண்டும் தீர்வு இதுதான் என தெளிவாக அறிவிக்க வேண்டும். தேர்தலின்போது ஒரு தீர்வும் பாராளுமன்றத்தில் ஒரு தீர்வும் இந்திய அமெரிக்கத் தலைவர்கள் வரும்போது ஒரு தீர்வும் அறிவிப்பதுதான் இங்கு சிக்கலானது.

 

கடந்த பாராளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வை அடைய முயற்சிக்கப்பட்டதா? அது உரிய வகையில் வெளிப்படுத்தப்பட்டதா? ஆக தேர்தல் விஞ்ஞாபன கொள்கைகளும் தீர்வும் யதார்த்தமாக பொருத்தமாக இருந்தாலும் அதற்கான செயற்பாடுகள் ஆரோக்கியமாக அமையவேண்டும். எமக்கு சொல்லைவிடவும் செயலே முக்கியம்.