தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 1981இல் மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்றுக் கொண்டனர்

0
700

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரை நிகழ்வு ஆக 18, 2013
ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு திருமறைக்கலா மன்ற கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது.
kumar-pon-9
இந்நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு விளக்கேற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செய்து ஆரம்பித்து வைத்தார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்தக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் “தற்கால சர்வதேச சட்ட மற்றும் அரசியல் ஒழுங்கில் போருக்குப் பின்னரான தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றினார்.

அவரது உரையின் முழு வடிவம் வருமாறு:

குமாரவடிவேல் குருபரன்
சட்டத்தரணி, சட்டத்துறை விரிவுரையாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
18 ஆகஸ்ட் 2013

திருமதி. யோகலட்சுமி பொன்னம்பலம் அவர்களே, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே, அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் எனது இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில்மகிழ்வுறுகிறேன்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபாகார்த்த குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் ‘பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்கு புக்கென’ – பாற்கடலை நக்கி உண்ணலாம் என நினைத்த பூனையினது செய்கையைப் போன்றது இராமாயணத்தை எழுத நான் விரும்பியது – எனக் கம்பன் அவையடக்கமாகக் கூறியமை எனது சிந்தனையில் மேலோங்கி நிற்கின்றது. மாமனிதர் குமார் பொன்னம்பலத்தினுடைய நினைவுப் பேருரை ஆற்ற வயதோ, அரசியல் அனுபவமோ எனக்கு இல்லை. குறையுளென பொறுத்தருள்க.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தினது அரசியலை இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம் என்பதனைப் பற்றி ஆரம்பத்தில் சில வார்த்தைகள் கூறி இவ்வுரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். சிலோன் சுதந்திரமடைந்த காலப் பகுதியிலிருந்து தமிழ் பாராளுமன்றத் தலைமைகள் தமிழத் தேசிய அரசியலுக்குரிய மொழியைப் பாவித்தராயினும் நடைமுறையில் விட்டுக்கொடுப்பு அரசியலையே நடாத்தி வந்தனர். உதாரணமாக சிங்களம் ஆட்சி மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரதமர் SWRD பண்டாரநாயக்காவுடன் நடாத்திய பேச்சு வார்த்தையில் தமிழுக்கு சில விசேட உபயோக உரிமைகளைப் பெற்றுக் கொள்வதோடு அப்போதைய தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைத்துவம் திருப்திப்பட்டுக் கொண்டது. அப்போது தமிழரசுக் கட்சியின் இளைஞரணியில் இருந்த திருவாளர்கள் இராசதுரை, அமிர்தலிங்கம் போன்றோர் திரு செல்வநாயகத்திடம் தமிழ், சிங்களத்திற்கு சம அந்தஸ்து வேண்டும் என்று கூறிக் கொண்டு பேச்சுவார்த்தைக்குப் போனதை ஞாபகப்படுத்தி அவரைக் கேள்விக்குட்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது1. 1957இல் பிராந்திய சபைகளை பண்டா – செல்வா ஒப்பந்தத்தினூடாக ஏற்றுக் கொண்ட அப்போதைய தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைத்துவம் பின்னர் 1965இல் டட்லி – செல்வா ஒப்பந்தத்தினூடாக மாவட்ட சபைகளை ஏற்றுக் கொண்டனர். 1976இல் தனித் தமிழீழப் பிரகடனத்தைச் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 1981இல் மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்றுக் கொண்டனர்.

1980களிற்குப் பின்னர் தமிழரின் பாராளுமன்றத் தலைமை பின் தள்ளப்பட்டு ஆயுதப் போராட்ட அரசியல் மேலோங்கிய சூழலில் அத்தகைய இரட்டைத் தனமான அரசியலைச் செயவதற்கான வெளி சுருங்கத் தொடங்கியது. 1994இல் ஆட்சிக்கு வந்த 1 ரீ சபாரட்ணம், ‘தந்தை செல்வா: ஓர் அரசியல் வாழ்க்கைச் சரிதை’, (குமரன் புத்தக இல்லம், 2006), பக்கங்கள், 157-162 2 G.L Peiris, ‘When Kadirgamar set out the world saw the LTTE as freedom fighters’, (August 13, 2013)
http://www.colombotelegraph.com/index.php/when-kadirgamar-set-out-the-world-saw-the-ltte-as-freedom3

பின்னர் தமிழர்களது ஆயுதப் போராட்ட அரசியலின் ஏற்புடைத் தன்மையை (legitimacy) சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் வலுக்குறைப்புச் செய்யும் ஒரே நோக்கத்திற்காக சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அரசாங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு இணைந்து அரசியலமைப்பு திட்ட யோசனைகளை முன்வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. மற்றொரு புறத்தில் தமிழ்ப் பெயர் கொண்ட ஓர் வெளிநாட்டமைச்சரை நியமித்து அந்நபரைக் கொண்டு உலகளாவிய ரீதியில் ஆயதப் போராட்ட அரசியலின் சர்வதேச ஏற்புடைமையை சனாதிபதி சந்திரிக்கா இல்லாமல் செய்ய முயற்சித்தார்2. இம் முயற்சிகளை கடுமையாக விமர்சனத்திற்குட்படுத்தி, அவற்றின் தந்திரோபாய இலக்குகளை விளங்கிக் கொண்டு ஆயுதப் போராட்ட அரசியலை முழுமையாக அங்கீகரித்த ஒரே தலைவராக அப்பொழுது குமார் பொன்னப்பலம் செயற்பட்டார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தினுடைய அரசியலை கட்சி எதிர்ப்பரசியல் என்று மலினப்படுத்துவோர் குமார் பொன்னம்பலத்தினுடைய அரசியலின் இந்த உயரிய நோக்கத்தினை விளங்கிக் கொள்வதில்லை அல்லது மூடி மறைப்பவர்கள். குமார் பொன்னம்பலத்தினுடைய இந்த அரசியலின் நீட்சயாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் நிறுவனம் உருவாக்கப்பட்டது என்பது எனது கருத்து. மிதவாத அரசியலையும் ஆயுதப் போராட்ட அரசியலையும் தமிழரசியலில் முரண் அரசியலாக (political dichotomoy) காட்டப்படுவதைத் தகர்த்தெறிந்து ஆயுதப் போராட்ட அரசியலினதும் மிதவாத அரசியலினதும் அரசியல் ஒன்றே என்பதைனைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனும் நிறுவனம். சனநாயகச் செயன்முறை ஒன்றினூடாக ஆயுதப் போராட்ட அரசியலை நடத்தும் தரப்பைத் தமது (ஏக) பிரதிநிதிகளாக மிதவாத அரசியல் தலைமைகள் அடையாளங் காட்டுவதன் மூலம் இந்த இரு துருவ நிலைப்பாட்டைத் தகர்த்தெறிவதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று மாமனிதர் தராகி சிவராம் அவர்கள் பதிவு செய்துள்ளாh3. ஒரு வகையில் பார்த்தால் குமார் பொன்னம்பலத்தினது அரசியல் சித்தாந்தமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கான அரசியல் சித்தாந்தமாகியது.

மே 2009இல் பின்னர் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று மீள 1980களிற்குப் முன்னரான மிதவாத அரசியலுக்குச் சென்று விட்டதை நாம் அவதானிக்கலாம். இத்தகைய அரசியல் மீள் சுழற்சிக்கு உடன்படாதவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட்டு 2010 பொதுத் தேர்தலின் போது வெளியேறி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் கட்சியைத் தோற்றுவித்தார்கள் என்பது அண்மைய வரலாறு. நிற்க. போருக்குப் பிந்திய சூழலை ஒரு நிலைமாறுகால சூழல் என்று வகைப்படுத்தலாம். தமிழரசியலுக்கும் இந்தச் சூழல் ஒரு நிலைமாறுகால 2 G.L Peiris, ‘When Kadirgamar set out the world saw the LTTE as freedom fighters’, (August 13, 2013)

http://www.colombotelegraph.com/index.php/when-kadirgamar-set-out-the-world-saw-the-ltte-as-freedomfighters/

3 Mark P Whitaker, ‘Learning Politics From Sivaram: Life and Death of a Revolutionary Tamil Journalist in Sri Lanka’, (Pluto Press, 2007), p. 122 4

அரசியலுக்குரிய சூழல். இந்த நிலைமாறுகாலச் சூழல் தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாரிய சவால்களை ஏற்படுத்தியுள்ள ஒரு சூழல். போராட்டம் முடிவடைந்த விதம், அது தந்த மீள முடியாத வலி, அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களிற்கெதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide), அவ்வினப்படுகொலை மூலம் ஏற்படுத்தப்படுகின்ற நுண்ணிய கூட்டு வலியின் தொடர்ச்சி என்பன எமது கடந்த கால அரசியல் தொடர்பிலான கசப்பாக மாறுகின்ற பயங்கரம் ஏற்படுமோ என்ற அச்சம் மேலோங்கியிருக்கின்ற காலப்பகுதி இது.
kumar-pon
இச்சூழலைத் வெளிச் சக்திகள் தத்தமது நிகழ்ச்சித் திட்டங்களிற்குப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இவர்களுடைய நிகழ்ச்சித்திட்டம் தமிழரசியலை தேசிய அரசியலிலிருந்து விலகிச் செல்ல வைக்க வேணடும் என்பதேயாகும். தொடர்ந்து வரும் அடக்கு முறைகள் தமிழ்த் தேசிய அரசியல் என்ற வரையறை தொடர்பில் முகமன் அளவிலேனும் இயங்கும் கட்சியையே தேர்தலில் மக்கள் தெரிவு செய்யும் நிலைக்குள் வைத்திருக்கின்றதாயினும் அவ்வரசியலானது நீண்ட காலத்தில் தமது பிரச்சனைக்கான தீர்வைத் தர மாட்டாது என மக்கள் சிந்திக்கத் தொடங்குவார்களாயின், அந்த நம்பிக்கை அற்றுப் போனால் – தமிழ்த் தேசிய அரசயலிற்கு மாற்று இல்லாவிடினும் அது தொடர்பில் அரசியல் பண்பாட்டு ரீதியான பிடிப்பு மக்களுக்கு இல்லாது போய் விடக் கூடும். அத்தகைய சூழலில் தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசிய அரசியல் என்றும், ஒற்றுமை என்றும் பேசுபவர்களுக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கத் தலைப்பட்டாலும் நாளாந்த வாழ்வில் ஒடுக்குமுறையோடு வாழ மக்கள் பழக வேண்டிய சூழல் ஏற்பட்டு விடக் கூடும். இச் சூழலில் தானும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றான ‘இணக்க அரசியல்’ எனக் கூறப்படும் அரசியல் வரையறைகளால் இப்போதைக்கு, (தொடர்ந்து நிலவும் அடக்குமுறைக் சூழலால்) தமிழ் தேசிய அரசியலுக்கு மாற்றீடாக வர முடியாது. ஏனெனில் மக்கள் எதிர் நோக்கும் ஒடுக்குமுறைக்கு அவையிடம் பதிலில்லை.

அவ்வொடுக்குமுறையை ஏற்றுக் கொண்டு அதற்குள் பிழைத்துக் கொள்வதைப் பற்றித் தான் சிந்திக்க வேண்டும் என்பது இணக்க அரசியலின் நிலைப்படாகவுள்ளது. மே 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தேசிய அரசியலானது வெறுமனே அபிலாசை அரசியலாக (aspirational politics) இல்லாமல், சிங்களப் பேரினவாதத்திற்கெதிரான எதிர்ப்பரசியலின் குறியீடாக மட்டுமில்லாமல், ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட உதவுகின்ற அரசியல் வரையறையாக உரு மாற வேண்டுமாயின் அதற்கான ஒரு ஆழமான உரையாடலைச் செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த உரையாடல் அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கி நகர்த்தப்படுகின்ற உரையாடலாக இருக்க வேண்டும். அத்தகைய உரையாடல் மூலமாகச் செய்யப்படக் கூடிய மக்கள் அணிதிரட்டலே ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட உதவுகின்ற அரசியல் வரையறையாக தமிழ்த் தேசிய அரசியல் உரு மாற வாய்ப்பளிக்கும். அவ்வுரையாடல் ஒரு வெற்று வெளிக்குள் நடக்க முடியாது. சர்வதேச வெளியைப் புரிந்து கொண்டும் செய்யப் பட வேண்டிய கலந்துரையாடலாவே இது உள்ளது. அவ்வெளி தொடர்பிலான சிறு குறிப்பாக இவ்வுரை அமைவதே மாமனிதர் குமார் பொன்னம்பலத்தினுடைய நினைவாக நாம் கூடியிருக்கும் இந்த வேளையில் செய்யப்படக் கூடியவற்றில் மிகப் பொருத்தமான செயலாக இருக்கும் என்பது எனது சிந்தனை.

பின்வரும் கேள்விகள் தொடர்பில் இவ்வுரை தனது கவனத்தைச் செலுத்த முயற்சிக்கின்றது. மே 2009 இற்குப் 5 பின்னர் தமிழ்த் தேசம் மற்றும் சுயநிர்ணயம் என்று பேசுவதற்கான வாயப்பான சர்வதேசச் சூழல் உள்ளதா? உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலா சுயநிர்ணய உரிமையை நாம் வலியுறுத்த வேண்டும்? படிப்படியாக தீர்வைப் பெற்றுக் கொள்ளலாமா? பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோருவதற்கான உரிமை உள்ளதா? நிலைமாறு நிர்வாகம் ஒன்றை வலியுறுத்த முடியுமா? இவை யாவும் யதார்த்தபூர்வமானதா? என்ற கேள்விகள் தொடர்பில் இவ்வுரையில் சில ஆரம்ப கட்டப் பதில்களை வழங்க முயற்சிக்கலாம் என எண்ணுகின்றேன். மே 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தேசம் என்றும் சுயநிர்ணயம் என்று பேசுவதற்கான வாய்ப்பான சர்வதேசச் சூழல் உள்ளதா? மே 2009இற்குப் பின்னரான சூழலில் தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் வரையயை உபயோகிப்பதில் தமிழர்களின் தற்போதைய பாராளுமன்றத் தலைமைத்துவத்திடம் ஒரு தயக்க நிலை இருக்கின்றது. இது தொடர்பில் பின்வரும் விடயங்களை நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தமிழர்களுக்கான அரசியல் வரையறைத் தெரிவாக ‘சிறுபான்மை’ என்ற வரையறை பொருத்தமானதா? சிறுபான்மை என்ற வரையறை நிலவுகின்ற ஓர் அரசின் வரையறையை ஏற்று, அவ் வரையறைக்குள் வைத்து தம்மை எண்ணிக்கையில் குறைந்தவர்களாகத் தம்மை ஏற்றுக் கொண்டு தம் இனம் சார்ந்த மொழி மற்றும் கலாசார உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் அரசியல் செய்யும் ஒரு வகையினரைக் குறிக்கும.

தேசமெனத் தம்மைக் கருதும் இனம், மதம், மொழி சார்ந்த அடையாளக் குழுமம் தாம் இயங்கும் அரசின் வரையறைகளைத் தொடர்ச்சியாக கேள்விக்குட் படுத்துவதோடு தம்மை சுயஆளுகைக்கு, சுயாட்சிக்கு தகுதியானவர்கள் என்ற அரசியல் விழிப்பு நிலையை கொண்டவர்களாவர். சர்வதேச சட்ட மொழியில் இதனைக் கூறுவதாயின் தாம் சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள் எனக் கருதும் ஓர் அரசியல் குழுமமே தேசமென வரையறுக்கப்படுகின்றது. சர்வதேச சட்டத்தில் குறிப்பாக சிவில் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச (International Covenant on Civil and Political Rights) சிறுபான்மையினருடைய உரிமைகள் தொடர்பில் தனித்து ஒரு இடத்திலும் (உறுப்புரை 27) சுயநிர்ணய உரிமை தனித்து வேறொரிடத்திலும் கூறப்பட்டுள்ளதன் மூலம் சிறுபான்மை எனத் தம்மை கருதுவோருக்கு சுய நிர்ணய உரிமை இல்லை என்ற அர்த்தம் சர்வதேச சட்டத்தால் வழங்கப்படுகின்றமை நோக்கத்தக்கது.

இச்சர்வதேச பொருத்தனை சுயநிர்ணய உரிமைக்குரித்துடையவர்களாக ‘மக்கள் கூட்டங்களை’ (Peoples) அடையாளங் காணுகின்றன. இந்த ‘மக்கள் கூட்டங்களை’ எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பில் சர்வதேச சட்டம் மௌனமாக இருக்கின்றது. ஆனால் தமக்கென வரலாற்று ரீதியான தாயகத்தில் தம்மைத் தொடர்ச்சியாக சுயாட்சிக்குரியவர்களாக ஓர் தேசமாக கருதும் தமிழர்கள் இந்த ‘மக்கள் கூட்டங்கள்’ என்ற வரையறைக்குரியவர்கள் என்பதில் நியாயமான விவாதத்திற்கிடமில்லை. ஆனால் தமிழர்களைச் 6 சிறுபான்மையினர் என்ற அரசியல் வரையறையின் பாற்பட்டு அரசியல் செய்யும் போது சுயாட்சிக்கான சுயநிர்ணயத்திற்hன கோரிக்கையை அவர்கள் கைவிட்டு விட்டதாக அர்த்தம் கொள்ளப்படலாம்.

தமிழ் மக்களைத் ‘தேசமென்று’ அழைக்கலாமா? ‘ஓர் மக்கள்’ என்று சொல்வதோடு மட்டுப்படுத்திக் கொள்ளலாமே எனச் சிலர் இன்று கேட்கின்றார்கள். சர்வதேசம் மேற்சொன்ன பொருத்தனையில் ‘மக்கள் கூட்டங்களுக்கு’ சுய நிர்ணய உரிமை உள்ளது எனக் கூறுவதால் தமிழர்களை மக்கள் என்ற வரையறைக்குள் நின்று பேசுவது போதுமானதே என்கின்றார்கள். ஆனால் மக்கள் எனும் பதத்திற்கு ஏலவே நான் கூறியது போல சர்வதேச சட்ட விவரணத்தில் தெளிவின்மை இருப்பதனால் எமது மக்களுடைய இயல்பான உரையாடலின் ஒரு பகுதியாகிவிட்ட ‘தமிழர் தேசம்’ என்ற வரையறையை பாவிப்பதற்கு தயக்கம் தேவையில்லை என்பதே எனது கருத்தாகும். சர்வதேச சட்டம் இயல்பிலேயே தெளிவான வரையறைகளை முன்வைப்பதில்லை என்று புகழ்பூத்த சர்வதேச சட்ட அறிஞர் பேராசிரியர் மார்டி கோஸ்கெனேமி கூறுவார்4. அரசியல் உரையாடல்களினூடகத் தான் இத் தெளிவின்மைகள் போக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தெளிவான வரையறைகளை சர்வதேச சட்டம் முன்வைப்பதில்லை எனப் பேராசிரியர் கோஸ்கெனேமி குறிப்பிடுகின்றார்.

ஆகவே சட்டம் என்ன என்பதனை வைத்து அரசியல் என்பதை தீர்மானிப்பது வண்டிக்கு முன்னால் குதிரையை பூட்டுவதற்குச் சமமானது. சட்டம் அரசியலை நடாத்துவதற்கான ஒரு தொழில்நுட்ப மொழியை வழங்குகின்றது என்பார் பேராசிரியர் கோசன்கேமி. ஆகவே தமிழர்களது நலன்களை முன்னிறுத்துவதற்குப் பொருத்தமான அரசியல் வரையறை என்பதனை நாம் தான் முதல் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த அரசியல் தெரிவை முன்நகர்த்துவதற்குச் சர்வதேச சட்டம் எவ்வாறு பயன்படும் என்பதனைப் புரிந்து எமது வேலைத்திட்டத்தை நகர்த்த வேண்டும். சட்டத்தில் என்ன இருக்கின்றது: என்ன இல்லை என்பதனை வைத்துக் கொண்டு அரசியிலை முன்நகர்த்துவோர் சட்டத்தின் இயல்பையும் சமூகத் தொழிற்பாட்டையும் விளங்கிக் கொள்ளாதவர்களே.

நீதிமன்றங்களில் வழக்காடும் வகையிலான சட்டத்தை மட்டுமே சட்டமாக விளங்கிக் கொண்டவர்களாக அதனுடைய அரசியல் சமூகவியல் தொழிற்பாட்டை விளங்கிக் கொள்ளாதவர்களாக, அரசியலில் இருந்த, இருக்கும் சட்டத்தரணிகளின், அப்புக்காத்துக்களின் அரசியல் தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பிரச்சனையே. அதற்காக எல்லா அப்புக்காத்துக்களும் அப்படித்தான் சட்டத்தையும் அரசியலையும் விளங்கிவைத்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறுவது சரியில்லை. தேசம், சுயநிர்ணயம் என்று பேசுவது தனிநாட்டைப் பற்றிப் பேசுவதாகாது. எமது கூட்டிருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு – எமது தேசத்தைப் பாதுகாத்துக் கொள்வதென்பது – தனியே தனியரசு என்ற வரையறைக்குள் 4 ஆயசவவi 4 Martti Koskenniemi, ‘From Apology to Utopia: The Structure of International Legal Argument’ (Cambridge University Press, 2005)7 மட்டுமே சாத்தியமென்று கூறுவதற்கில்லை.

தேசம், சுயநிர்ணயம் என்று பேசுவது தொடர்பில் எனக்குத் தெரிந்த வரையில் சர்வதேச சமூகத்தினருக்குப் பிரச்சனைகள் இல்லை. தனிநாடு என்று பேசுவது அவர்களுடைய இன்றைய பூகோள அரசியல் இலக்குகளிற்கு இடைஞ்சலாக இருக்கின்றது. அதன் காரணமாகவே ஆயுதப் போராட்டத்தை நடாத்தியவர்களை ஆரம்பத்தில் தடை செய்தவர்கள5; பின்னர் அதனை முடிவிற்குக் கொண்டு வந்தார்கள். ஆயுதப் போராட்டம் மனித உரிமைகளை மதிக்காமல் நடந்து கொண்ட படியால் தான் அழிந்து போனது என்று கூறுவது பிழையான வியாக்கியானம். ஆகவே போருக்குப் பிந்திய சூழலில் தேசம், சுயநிர்ணயம் என்று பேசுவதில் தயக்கம் இருக்கத் தேவையில்லை. உள்ளக சுயநிர்ணய உரிமை என்றொன்று உண்டா? தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையையே கேட்கின்றார்கள் என்றும் சிலர் பேசத் தலைப்பட்டுள்ளார்கள். இதைப் பற்றி நாம் சற்று ஆழமாகப் பார்ப்பது நன்மை பயக்கும் எனக் கருதுகிறேன் .

சர்வதேச சட்டம் பங்கு பிரிக்கப்படாத சுயநிர்ணய உரிமையைப் பற்றியே குறிப்பிடுகின்றது. எந்தவொரு சர்வதேச சட்டப் பொருத்தனை அல்லது ஆவணத்திலோ உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பற்றிய குறிப்பில்லை. மரபு சார் சட்டத்திலும் உரிமை என்றளவில் உள்ளக சுயநிர்ணய உரிமை உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் சந்தேகம் உள்ளது. கனேடிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றில் தொடர்ச்சியாக உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமை அம்மக்களுக்கு உரித்தாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது6. ஆனால் இதன் மரபு சார் சர்வதேச சட்ட அந்தஸ்து தொடர்பில் சந்தேகங்கள் உள்ளன.

சர்வதேச சட்டம் ஒரு புறம் ஆள்புல ஓற்றுமையை (territorial integrity) வலியுறுத்துகின்றது. மறுபுறத்தில் சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசுகின்றது. இவை இரண்டுமே சர்வதேச சட்டத்தின் அதிகார படிநிலைகளில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. சுயநிர்ணய உரிமை காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகள் சுதந்திரம் பெறுவது தொடர்பிலான கோட்பாடு என மட்டுப்படுத்தப்பட்ட கருத்து நிலை ஆரம்பத்தில் நிலவினாலும் காலனியாதிக்கத்திற்குப் பிற்பட்ட உலக ஒழுங்கினுள் அக்கோட்பாடு உயிர்ப்புடன் சர்வதேச சட்டத்தில் தொடர்ந்து உள்வாங்கப்பட்டுள்ளமை இன்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

பிரச்சனை என்னவென்றால் ஆள்புல ஒற்றுமையை பாதுகாத்தல் என்ற கோட்பாட்டையும் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டையும் எவ்வாறு சர்வதேச சட்டத்தில் இணக்கம் காண வைப்பது என்பதுவே. ஆள்புல ஒற்றுமை என்ற கோட்பாட்டிற்கு விதிவிலக்காக சில சூழ்நிலைகளை அடையாளம் காணுவதற்கு மரபுசார் சர்வதேச சட்டத்தின் மூலமாக முயற்சிகள் இடம் பெற்றுள்ளன. இனத்துவ ஒடுக்குமுறை அரசுகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பது பொதுவாகவே சுயநிர்ணய கோட்பாட்டின் ஆரம்ப காலங்களிலிருந்தே ஏற்றுக் Suthaharan Nadarajah and Dhananjayan Sriskandarajah, ‘Liberation Struggle or Terrorism: Politics of Naming the LTTE”, 26 (1) Third World Quarterly (2005) pp. 87-100.
6 Canadian Supreme Court, In Reference re Secession of Quebec [1998] 2 S.C.R. 217
கொள்ளப்பட்டாலும் ‘ஒடுக்குமுறை’ என்பதனை எவ்வாறு வரைவிலக்கணப்படுத்துவது என்பது கடினமானதாகவே இருந்து வருகின்றது. அதன் விளைவாக குறிப்பாக கொசோவோவினது அனுபவத்தின் பாற்பட்டு ‘கொடூரங்களிற்கு ஆட்பட்டதன் விளைவாக பிரிந்து போகும் உரிமை’ ‘remedial right to secession’ என்ற கருத்துருவாக்கம் முக்கியம் பெற்றது. மனிதாபிமான சட்டங்களை மீறியமைக்காக, இனப்படுகொலை, போர்க் குற்றங்களை இழைத்ததன் விளைவாக – தொடர்ந்து அந்த அரசோடு வாழ முடியாதொரு சூழலில் அக்கொடூரங்களிற்கு உட்படுத்தப்பட்ட மக்களுக்குப் பிரிந்து போவதற்கான உரிமை உண்டு என்ற கருத்துருவாக்கமே இந்த ‘remedial right to secession’ என்ற விடயம். எனினும் இவ்விடயம் தொடர்பில் கருத்துரைக்கும் சில புலமையாளர்கள் இது ‘ஓர் உரித்தாக ஃ உரிமையாக’ கருதப்பட முடியாது (not an entitlement) என்று கூறுகின்றனர்.

ஆள்புல ஒற்றுமைக் கோட்பாட்டிற்கான விதிவிலக்குச் சூழலில் ஒன்றாகக் கருதப்படலாம் என்றளவிலேயே ‘remedial right to secession’ ஐக் கருதலாம் என இவர்கள் கூறுகின்றனர்7. கொசோவோவிற்கு பின்னரான சர்வதேச அரசியல் சூழலில் சுயநிர்ணயத்தைப் பற்றி எழுதுகின்ற பேராசிரியர் சிடீபன் வூல்ப் கொசோவோவிற்கு தனிநாடு கொடுக்கப்பட்டமைக்கான காரணம் கொசோவோ மக்களிற்கெதிராக புரியப்பட்ட கொடுமைகள் மட்டுமல்ல என்றும் தொடர்ச்சியான சர்வதேச முயற்சிகளின் பின்னர் கூட எந்தவொரு நிறுவன ரீதியான ஏற்பாட்டுக்கும் சேர்பியா இணங்க மறுத்தமையே காரணம் என்று கூறுகிறார்8.

பேராசிரியர் வூல்ப்பின் கருத்து கனேடிய உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தோடு இயைபுடையது என்பதனைக் கவனிக்கலாம். கொசொவோவிற்குத் தனிநாட்டந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன் நின்று செயற்பட்ட அமெரிக்காவும் எங்கே அது சுயநிர்ணய உரிமைப் பிரச்சனைகளுக்கு முன்னுதாரணமாகி விடுமோ என்ற அச்சத்தில் கொசோவோ ஒரு உதாரணமல்ல என்றும் அது கொசொவோவின் விNஷட சூழ்நிலைக்குரிய பிரத்தியேக தீர்வென்றும் (sui generis) கூறி வருகின்றது.

சர்வதேச உறவுகள் தொடர்பிலான கற்கை நெறி இன்றைய உலகவொழுங்கில் தனிநாடொன்று அமையப் பெறுவதற்கு ஆயுதப் பலமும் உயரிய இடத்தில் நணபர்களும் (பலமான அரசுகளின் தயவு) தேவை என்று கூறுகின்றது. தனிநாடு ஒன்று உருவாகும் முறை தொடர்பில் சர்வதேச சட்டம் ஒழுங்குபடுத்துவதில்லை9. போருக்குப் பிந்திய தமிழரசியலைப் பற்றி சிந்திக்கும் போது பின்வரும் இரண்டு விடயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகின்றது. ஒன்று இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையைத் தொடர்ச்சியாக வலியுறுத்துவதற்கும் அரசியல் தீர்;வை காணுவதற்கான செயன்முறைக்கும் தொடர்புண்டு என்பது. “Remedial right to secession” என்பதனை முன்வைத்து ஏலவே கூறிய விடயங்களை முன்னிறுத்தி இது

7 J Vidmar, ‘Remedial Secession in International Law: Theory and (Lack of) Practice’ (2010) St Antony’s International Review 37
8 Stefan Wolffa & Annemarie Peen Rodt, ‘Self Determination After Kosovo’, 65 (5) Europe-Asia Studies, 799-822.

9 International Court of Justice, Judgment ‘In Accordance with international law of the unilateral declaration of independence in respect of Kosovo’ (Advisory Opinion), 22 July 2010.

தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இதனை நான் சொல்வதன் மூலம் இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணையை நாம் ஓர் உபகரணத் தேவைக்காக கோர வேண்டும் என்பது பொருளல்ல. இரண்டுக்கும் இடையில் தொடர்பொன்றை சர்வதேச சட்டக் கொள்கை வகுப்பாளர்கள் இனங்கண்டுள்ளனர் என்பதையே வலியுறுத்த விரும்புகின்றேன். இரண்டாவது விடயம், எவ்விதத்திலும் பயனற்ற 13ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தோடு சம்பந்தப்பட்ட மாகாண சபை முறையைத் தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்வதன் மூலமாக ஒரு உண்மையான தீர்வை அடைந்து கொள்வதற்கான பாதை அடைபட்டுப் போகும் என்பதனைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக மாகாண சபை முறைமையை உள்ளக ரீதியாக எமது சுயநிர்ணய உரிமையை நாம் நிலைநாட்டுவதற்கான ஆரம்பப் புள்ளி என்று கூறுவது அபத்தமானது. ஆபத்தானது. சுயநிர்ணய உரிமையைக் கோரி வரும் தரப்பு அதனைப் பிரயோகிப்பதற்கான ஒரு நிறுவனத்தை கண்டடைந்து விட்டது என்று நாம் கூறுவதற்கு அது ஒப்பானதாக அமையும். உள்ளக சுயநிர்ணம் தொடர்பாக இறுதியாக ஓர் வார்த்தை சுயநிர்ணய உரிமையின் நிறுவனப் பிரயோகமானது ஓர் அரசிற்குட்பட்ட (உள்ளக) சுயாட்சியாக இருக்க முடியும் என்பதனை நான் மறுக்கவில்லை.

சுயநிர்ணய உரிமை என்றால் தனிநாடு மட்டுமே என்று கூறுவதில் எந்த அடிப்படையும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு தேசத்திற்கு ஃ மக்களுக்கு ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ மட்டுமே உள்ளது. அதனைத் தான் நாம் கோருகின்றோம் என்று கூறுவதில் ஓர் தர்க்க ரீதியான ஃ சட்ட ரீதியான வழு ஒன்று உள்ளது. சுயநிர்ணய உரிமை என்பது ஒன்று தான். அதனை நாம் அரசிற்குட்பட்டும் பிரயோகிக்கலாம். அதற்கு வெளியிலும் பிரயோகிக்கலாம். அந்தத் தெரிவு யாருக்குரிய தென்றால் யார் அந்த உரிமைக்குரியவர்களோ அவர்களே. உங்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது.

ஆனால் உள்ளக சுயநிர்ணய உரிமை மட்டும் தான் உண்டு. அதனை மட்டும் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று கூறுவது அறத்தின் பாற்பட்டதும் அல்ல சர்வதேச சட்டத்தின் பாற்பட்டதும் அல்ல. படிப்படியாக தீர்வைப் பெற்றுக் கொள்ளலாமா? தேசியம், சுயநிர்ணம் என்று பேசுவது வெறுமனே ஒரு கருத்தியல் சார்ந்த நிலைப்பாடல்ல. இத்தகைய எண்ணக்கருக்களை முன்னிறுத்திய வலியுறுத்தல் அரசியல் தீர்வு தொடர்பில் உண்மையான அர்த்தம் சேர்க்கும் தன்மையிலானவை என்று காட்ட இது வரை முயற்சித்துள்ளேன். இதில் மற்றுமோர் விடயத்தையும் உங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். தமிழ் மக்களது தீர்வைப் பெறுவதற்கான அரசியல் செயன்முறையில் எனது பார்வையில் ‘அரசியலமைப்பிற்கு முந்திய நிலை’ (pre- constitutional issue) என்ற கட்டம் ஒன்று உள்ளது.

இலங்கையில் இன முரண்பாடென்பது அடிப்படையில் இலங்கை அரசின் தன்மை அல்லது அடையாளம் (character of the state) பற்றியது. இலங்கை அரசின் தற்போதைய அடையாளம் அது ஒரு சிங்கள பௌத்த அரசென்பதாகும். இலங்கை சிங்கள பௌத்தமல்லாத அரசாக பரிமாணிக்க வேண்டுமென்றால் முதலாவதாக இலங்கையின் பல்வேறுபட்ட தேசங்களுக்கிடையில் புதிய 10 அரசொன்றை உருவாக்குவதற்கான ஓர் சமூக உடன்பாடொன்றைச் செய்வதற்கு சிங்கள் தேசம் சம்மதிக்க வேண்டும். இதனொரு அங்கமே தமிழர்கள் ஓர் தேசம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை என்பதை ஏற்றுக் கொள்ளல். இத்தகைய ஏற்றுக்கொள்ளலின் பின்னணியில் உருவாகும் அரசியலமைப்பே நடைமுறையில் வேலை செய்யும்.

சிங்கள பௌத்த அரசு என்ற அடையாளத்துடன் தேசங்களுக்கிடையில் சமத்துவம் அடையப்படாத (parity of status), அதிகாரப் படி நிலை அரசொன்றில் (hierarchical state) எந்தத் தீர்வும் நடைமுறையில் வேலை செய்யாது, அது சமஷடி அரசியலமைப்பாக இருந்தால் கூட. ஆகவே தான் ‘அரசியலமைப்பிற்கு முந்திய நிலை’ என்ற கட்டத்தில் தமிழ்த் தேசமும் அதனது சுயநிர்ணயமும் அங்கீகரிக்கப்படுவது அர்த்தமுள்ள அரசியல் தீர்வு அடையப்படுவதற்கு முக்கியமானது எனக் கூறுகிறேன். மேற்சொன்ன காரணங்களுக்காக தற்போதைய சூழ்நிலையில் படிப் படியாக தீர்வை அடைந்து கொள்ளும் செயன்முறை ஒன்றைத் (incremental process) தமிழர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என நான் கருதுகிறேன். ‘அரசியலமைப்பிற்கு முந்திய நிலை என்ற கட்டத்தில்’ தமிழ்த் தேசமும் அதனது சுயநிர்ணயமும் அங்கீகரிக்கபட்டால் அத்தகைய செயன்முறையைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.

இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் உண்டு. உதாரணமாக பெல்பாஸ்ட் உடன்பாட்டில் (Belfast Agreement), எதிர்காலத்தில் வட அயர்லாந்தைச் சேர்ந்த பெரும்பான்மையினர் தாம் அயர்லாந்தோடு சேர்ந்து கொள்ள வேண்டுமென்று பொது சன வாக்கெடுப்பொன்றின் மூலம் தீர்மானித்தால் அதற்கு பிரித்தானியா தான் தடை போடாது என்று அயர்லாந்தோடு செய்து கொண்ட சர்வதேச ஒப்பந்தம் மூலமாகவும் தான் இயற்றிய சட்டம் மூலமாகவும10 உறுதியளித்தது. இது தொடர்பில் வட அயர்லாந்தின் சுயநிர்ணய உரிமையை பிரித்தானியா வெளிப்படையாக அங்கீகரித்தது. அதன் பின்னரே வட அயர்லாந்தின் சுயநிர்ணயத்திற்காகப் போராடியவர்கள் பிரித்தானியாவோடு ஒரு அரசியலமைப்பு ஏற்பாடொன்றிற்கு உடன்பட்டார்கள்.

பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோருவதற்கான உரிமை எடின்பரோ (Edinburugh) பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீபன் டயர்னி கடந்த வருடம் வெளியிட்ட ‘அரசியமைப்பு ஒப்பங்கோடல்கள்: குடியரசுக் கதையாடல்களின் தத்துவார்த்துவமும் நடைமுறையும்’11 என்ற நூலின் பொதுசன வாக்கெடுப்புக்கள் அண்மைக் காலமாக நான்கு வகையான 10 10 Northern Ireland Act of 1998. Section 1(2): But if the wish expressed by a majority in such a poll is that Northern Ireland should cease to be part of the United Kingdom and form part of a united Ireland, the Secretary of State shall lay before Parliament such proposals to give effect to that wish as may be agreed between Her Majesty’s Government in the United Kingdom and the Government of Ireland. Good Friday Agreement: Article 1(1): “Recognise the legitimacy of whatever choice is freely exercised by a majority of the people of Northern Ireland with regard to its status, whether they prefer to continue to support the Union with Great Britain or a sovereign united Ireland”;
11 Stephen Tierney Constitutional Referendums: The Theory and Practice of Republican Deliberation (Oxford University Press, 2012)

அரசியமைப்புச் செயன்முறைகளுக்குப் பயன்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றார். 01. புதிய நாடுகளை உருவாக்கும் பொருட்டு (உதாரணம்: மொன்டிநீக்ரோ 2006, தென்சூடான் 2011) 02. புதிய அரசியலமைப்புக்களை உருவாக்கல் அல்லது நிலவுகின்ற அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரும் பொருட்டு (உதாரணம்: ஈராக், 2005) 03. புதிய சிக்கலான உப-அரச அலகிற்கான சுயாட்சி மாதிரிகளை உருவாக்கும் பொருட்டு (உதாரணம்: ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் 2014) 04. அரசிடமிருந்து பல்லரசு நிறுவனங்களிற்கு அதிகாரங்களைக் கையளித்தல் பொருட்டு (உதாரணம்: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஐரோப்பிய அரசுகள் அதிகாரங்களை கையளித்தல் தொடர்பில் நடாத்தப்பட்ட பொதுசன வாக்கெடுப்புக்கள்) மேற்கூறியவற்றில் முதலாம், மூன்றாம் விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அனுமதியோடு ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து போவதா என்பது தொடர்பில் ஸ்கொட்லாண்டில் 18 செப்டம்பர் 2014 அன்று பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடைபெறவுள்ளது. அதே போன்றதொரு பொதுசன வாக்கெடுப்பை ஸ்பெயினில் இருந்து பிரிந்து போவது தொடர்பில் கட்டிலோனியா நடத்த உத்தேசிக்கின்றது. 2006இல் மொன்டிநீக்ரோ தனிநாட்டிற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தியது. 2002இல் பெல்கிரேட் ஒப்பந்தத்தினூடாக யுகோஸ் லாவியாவின் உடைவு பூரணப் படுத்தப்பட்டதாக கருதப்பட்டாலும் மொன்டிநீக்ரோ, கொசோவோ பிரச்சினைகள் தொக்கு நின்றன. 2006இல் பொன்டிநீக்ரோவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்த பொன்டிநீக்ரோக்களும் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர். 55மூமானவர்கள் சாதகமாக வாக்களித்தால் ஐரோப்பிய ஒன்றியம் தனிநாட்டை அங்கீகரிப்பதாக வாக்களித்திருந்தது. 55.5மூமானவர்கள் சாதகமாக வாக்களித்தார்கள். பிராந்திய ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்காக இந்த பொதுசன வாக்கெடுப்பை நடாத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்திருந்தது12. 2011இல் தென்சூடானில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பு ஒரு சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக நடைபெற்றது.

தென்சூடானில் உள்ள எண்ணெய் மீது அக்கறையோடிருந்த மேற்குலகம் சூடானில் ஸ்திரத்தன்மை இருந்தால் தான் அவ் எண்ணெயைப் பிரயோசனப்படுத்தலாம் என்பதற்காகவே பொதுசன வாக்கெடுப்பையும் தனிநாட்டையும் ஆதரித்ததாகவே கூறப்படுகின்றது. எனினும் அமெரிக்க அரசாங்கத்தின் சக்தி தகவல் நிர்வாகப் பணியகத்தின் தகவல்படி தென்சூடானில் எண்ணெய்யைப் கூடுதலாகப் பாவிப்பவர்கள் சீனாவும் ஜப்பானும் இந்தியாவுமே13. சீனாவும,; ஜப்பானும் தென்சூடான் தனி நாடாவது தொடர்பில் அமைதிப் பங்காளிகளாக இருந்தமையை நாம் கவனிக்க வேண்டும். தென்சூடான் உருவாகிய மறுநாளே இந்தியா தென்சூடானை ஒரு
12 International Crisis Group, ‘Montenegro’s Referendum’ (30 March 2006) http://www.crisisgroup.org/en/regions/europe/balkans/montenegro/b042-montenegros-referendum.aspx
13 US Energy Information Administration, http://www.eia.gov/countries/country-data.cfm?fips=SU

நாடாக அங்கீகரித்தது14. யுத்தத்னின் போது தென்சூடான் போராட்டக்குழுக்கள் இந்தியாவின் எண்ணெய் வயல்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதமும் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 1990களில் டார்பூரில் (Darfur) நடைபெற்ற கொடூரங்களைத் தொடர்ந்து சூடானுக்கெதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. இந்தச் சந்தர்ப்பத்தைக் பயன்படுத்தி உள்நுழைந்த சீனா தனது பொருளாதார நலன்களைக் கவனிப்பதற்காக அடித்தளங்களை இட்டது. தென்சூடான் பிரிந்து போவது என்பது உறுதி செய்யப்பட்ட பொழுது சீனா தென்சூடானையும் அங்கீகரித்தது. அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகியன தமிழர்கள் தொடர்பில் இலங்கை தொடர்பில் கொண்டிருக்கும் வெளியுறவுக் கொள்கையை மேற் சொன்னவற்றிலிருந்து எப்படி விளங்கிக் கொள்ளலாம் என்ற வியாக்கியானத்தை நான் உங்களிடமே விட்டு விடுகின்றேன்.

மே 2009 இற்குப் பின்னரான சூழலில் பொது சன வாக்கெடுப்பைக் கோருவது என்ற உத்தி தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக தமிழர்களது அரசியல் தீர்வு செயன்முறை ஒன்றை அணுகுவது என்பது சனநாயக ரீதியாக முன்வைப்பு (democratic articulation) என்ற வகையில் அறவியல் சார்ந்து மறுதலிக்க முடியாது. சனநாயகம் என்ற ஒற்றை சுலோகம் தாங்குபவர்கள் இதற்கு மறுப்பு சொல்வது என்பது முடியாத காரியம். ஸகொட்லாண்டில், கட்லோனியாவில, மொன்டி நீக்ரோவில், தென்சூடானில் அத்தேசங்களைச் சார்ந்த மக்களுக்கு இந்த சனநாயக வாய்ப்பு இருக்குமென்றால் சர்வதேச அரசியல், குடியியல் பொருத்தனை கூறுகின்ற ‘தாம் விரும்கும் அரசியல் தெரிவை மேற்கொள்வதற்கான’ சுயநிர்ணய உரிமையைச் செயற்படுத்தும் கருவியாக தமிழர்கள் பொதுசனவாக்கெடுப்பை கோருவதற்கான தார்மீக உரிமை உண்டு.

இந்தப் பொதுசனவாக்கெடுப்பில் தமிழர்கள் என்ன தெரிவு செய்யப் போகின்றார்கள் என்பதனைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஒரு செயன்முறை சார்ந்த முன்வைப்பாக (process-related articulation) நாங்கள் இதனை முன்வைக்கவேண்டும். நிலைமாறு நிர்வாகம் (transitional administration) ஒன்றை வலியுறுத்தல் அரசியல் தீர்வு ஒன்று வரும் வரை தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் துன்பங்களிலிருந்து – அவர்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலையிலிருந்து – அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அதனை எவ்வாறு செய்யலாம் என்பதனைப் பற்றிய கருத்துருவாக்கத்தைச் செய்வதும் இன்றியமையாதது.

13வது திருத்தம் மூலமாக இதனைச் செய்யலாம் என்று கூறுபவர்கள் எனது அபிப்பிராயத்தில் 13வது திருத்தத்தை வாசித்தறியாதவர்கள் அல்லது தெரிந்து கொண்டே பொய்யுரைப்பவர்கள். ஆகவே தான் அரசியல் தீர்வு வரும் வரைக்கான ஒர் இடைக்கால நிலைமாறுகால நிர்வாகம் ஒன்றைக் கோருவது அவசியமாகின்றது. கிழக்குத் தீமோர் மற்றும் கொசொவோவில் இத்தகைய (14 Hindustan Times, ‘India’s stake in South Sudan’, (July 08, 2011) http://www.hindustantimes.com/worldnews/ Africa/India-s-stake-in-South-Sudan/Article1-718966.aspx)நிலைமாறுகால நிர்வாகங்களை ஐக்கிய நாடுகள் சபை நடத்தியிருந்தது. (United Nations Interim Administration in Kosovo, United Nations Transitional Administration in East Timor)

பாரியவொரு யுத்தத்தின் பின் புலத்திலேயே இந் நிர்வாகங்கள் உருவாக்கப்பட்டன. இந் நிலைமாறுகால நிர்வாகங்கள் அந் நாடுகளின் அரசியலமைப்பிற்கு வெளியே உருவாக்கப்பட்டவையாக இருந்தன. இந் நிர்வாகங்கள் வெளியேறும் போது அவை பொதுவாக பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி தாம் ஆட்சி செய்த பிராந்தியங்களின் பொறுப்பை அப்பகுதி மக்களிடம் ஒப்படைத்துச் சென்றனர். கொசோவில் அவ்வாறாக ஒப்படைத்த பின்னரும் மேற்பார்வை யாளர்களாக நிலைமாறுகால நிர்வாகங்கள் தொடர்ந்து செயற்பட்டன. கொசோவோ இதன் நிமிர்த்தம் சுதந்திரம் பெற்ற செயன்முறையை ‘மேற் பார்வையிடப்பட்ட சுதந்திரம்’ (‘Supervised Independence’) என்று கூறுவார்கள15;. இத்தகைய ஐ.நா மேற்பார்வையிலான நிலைமாறு நிர்வாகங்களை நவ-காலனியாதிக்கத்தின் அடையாளங்களாக விமர்சிப்பவர்களும் உண்டு16. இவ் விமர்சனத்தில் நியாயமில்லாமல் இல்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டாலும் ஒடுக்குமுறையை, இனப்படுகொலையை எதிர்கொள்ளும் குழுமங்களுக்கு இத்தகைய விமர்சனங்கன் ஓர் செல்வந்தப் பேச்சாகவே தோன்றுகின்றன.

இலங்கைத்தீவில் தமிழர் வாழும் பிரதேசங்கள் தோல்வியடைந்த அரசின் பண்புகளையே காட்டுகின்றன. ஒரு முழுமையான ஏகோபித்த இராணுவ ஆட்சியின் கூறுகளே வடக்கு கிழக்கில் மேலோங்கியிருக்கின்றன. இறைமையின் கடடுப்பாடு என்ற அம்சத்பை; பொறுத்த வரையில் வடக்கு கிழக்கு தோல்வியடைந்த அரசாக கருதப்படமுடியாதென்றாலும் இனத்துவ அரசின் (ethnocracy) பண்பின் நிமித்தம் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக ஏற்புடைத்தன்மையற்ற ஓர் அரசாக இலங்கை அரசு இருக்கும் காரணமாகவும் ஆக்கிரமித்த அரசொன்றின் ; (Occuping State) மனநிலையுடனேயே இலங்கை அரசு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் ஆட்சி செய்து வருகின்றது.

இது வெறுமனே ஒரு சனநாயக குறைபாடு (democratic defict) மட்டும் இல்லை. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இது ஒரு அரசாங்கம் தொடர்பிலான சனநாயகக் குறைபாட்டுப் பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் இதுவொரு மிக அடிப்படையிலான அரசின் ஏற்புடைத்தன்மை தொடர்பிலான பிரச்சனயாகும். எமது பிரச்சனைகளுக்கான தீர்வை அணுகும் போது இந்த வித்தியாசத்தை அங்கீகரித்தல் முக்கியமானது. இன்றைய அரசியலமைப்பு, அரச வரையறைக்குள் தீர்வு காணப்பட முடியாது என்பது கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவினது பரிந்துரைகளிற்கு
15 International Crisis Group, “Setting Kosovo Free: Remaining Challenges” (September 2012), http://www.crisisgroup.org/en/regions/europe/balkans/kosovo/218-setting-kosovo-free-remainingchallenges.
16 Ralph Wilde, International Territorial Administration: How Trusteeship and the Civilizing Mission Never Went Away (Oxford University Press, 2008), Simon Chesterman, You, The People: The United Nations, Transitional Administration, and State-Building (Oxford: Oxford University Press, 2004). ஏற்பட்ட கதியிலிருந்து உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. நிலைமாறு கால நிர்வாகம் ஒன்றைக் கோருவதனைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

தமிழ்த்தேசிய அரசியலும் நடைமுறைச் சாத்திய ஃ யதார்த்த அரசியலும் தமிழ்த்தேசிய அரசியலைத் தொடர்ந்து பேசுவது யதார்த்தத்தின் பாற்பட்டதா எனக் கேட்கிறார்கள். யதார்த்த அரசியல் என்னும் தொடர்பில் நாம் சற்று ஆழமாகச் சிந்தித்து பார்க்கவேண்டியுள்ளது. யதார்த்த அரசியலுக்கு வரையறைகள் மட்டுப்பாடுகள் என்பது இல்லை. குறைந்த பட்ச நிலைப்பாடு (minimum positions) என்று ஒன்று இல்லை. உதாரணமாக இலங்கை அரசாங்கம் மாகாணசபைகள் தீர்வாக முடியாது மாவட்ட சபைகளே தீர்வு எனக்கூறி சர்வதேச சமூகம் அதற்கிணங்குமாயின் யதார்த்த அரசியல் என்ற வரையறைக்குள் நாளை மாவட்ட சபைகளைத் தீர்வாக முன்வைக்க வேண்டி வரும். அவ்வாறாக யதார்த்த அரசியலுக்கு குறைந்த பட்ச நிலைப்பாடு என ஒன்று இருக்குமானால் அவர்களது அரசியல் தெரிவாக அந்தக் குறைந்த பட்ச நிலைப்பாடு கருதப்படவேண்டும். அக்குறைந்த பட்ச நிலைப்பாடு அடையாளங்காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வாகாது (யதார்த்தத்திற்கு முரணானது) என்பதனை அவர்கள் அறிந்த மாத்திரத்திலேயே அவர்கள் யதார்த்த அரசியல் என்ற முகமூடியை அணியத் தலைப்படுகின்றனர். ஆகவே யதார்த்த அரசியலைப் பேசுபவர்கள் தாம் தெரிவு செய்துள்ள அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதில் திராணியற்றவர்கள்.

இக்குறைபாட்டை நீக்குவதற்கான ஒரு முக மூடியே யதார்த்த அரசியல். அடிக்கடி மற்றையவர்களைப் பார்த்து தமது அரசியல் தெரிவிற்கு மாற்றாக என்ன தீர்வை வைத்திருக்கின்றீர்கள் என இந்த யதார்த்தவாதிகள் கேட்பதுண்டு. அதற்குப் பதிலாக எதைக் கூறினாலும் அதனை யதார்த்தமற்றுது எனக் கூறுவார்கள். இத்தகைய வியாக்கியானம் சுழற்சிகரமானதும் (circular reasoning) போலியானாதும். மிகவும் ஒடுக்குமுறையான சூழலில் யதார்த்தமான நிலைப்பாட்டை எடுப்பது என்பது அவ்வொருக்குழுறையை ஏற்றுக்கொள்வதாகத் தான் இருக்கும் அரசியல்வாதிகள் அவ்வாறான தெரிவை மேற்கொள்வதானது அவ் ஒடுக்குமுறைச் சூழலிற்குள் மக்களைத் தாமும் சேர்ந்து தள்ளிவிடுவதாக அமையும். அதற்காக யதார்த்த பூர்வமாகச் சிந்திப்பது என்பது அவசியமற்றது என்பதல்ல எனது கருத்து. யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளவேண்டும். ஆனால் அது எமது அரசியல் எண்ணப்பாடுகளை முழுமையாக ஆக்கிரமிக்க நாம் விடக்கூடாது என்றே கூறுகிறேன்.

முடிவுரை சர்வதேச சட்டத்தின் தொழிற்பாடானது கூடுதலாக சர்வதேச அரசியலின் போக்கில் தங்கியுள்ளது. சர்வதேச சட்ட மொழியானது எங்களுக்கு சர்வதேச அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த உதவும் ஒரு கருவியே. இந்த மட்டுப்பாடுகளை விளங்கிக் கொள்வது அவசியமானது. முறையாக சர்வதேச சட்டத்தையும் சர்வதேச அரசியலையும் விளங்கிக் கொள்ளல் ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவும். அந்தளவிலேயே தற்போதைய சர்வதேச சட்ட மறறும் சர்வதேச அரசியல் ஒழுங்கில் போருக்குப் பிந்திய தமிழர்களின் சுயநிர்ணய 15 போராட்டத்தின் அமைவிடத்தை நான் இவ்வுரை மூலம் அடையாளங்காண முற்குறிப்பிட்டுள்ளேன்.
தமிழர்களுடைய சுயநிர்ணயப் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கு உள்ளக, வெளியகக் கொள்கைகளில் தெளிவு வேண்டும். வெளியகக் கொள்கை என்பது சர்வதேச சக்திகள் விரும்பியதைச் செய்வது என்றவாறாகவன்றி தமிழர்களது நலன்கள் என்ன என்பதனை முன்வைத்ததாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசிய நலன் சார் வெளியுறவுக் கொள்கை ஒன்று உருவாக்கம் பெறுதல் வேண்டும். (Tamil national interests based foreign policy). அக் கொள்கை யாரையும் பகை நாடாகக் கருத வேண்டியதில்லை. அக்கொள்கைக்கான அடிப்படைகள் இந்தப் பிராந்தியத்தின் பூகோள அரசியலை விளங்கிக்கொண்டு அதில் தமிழரசியலின் வகிபாகத்தைப் புரிந்து கொண்டு முன்னகர்த்தப்படவேண்டும்.

ஆனால் ஏலவே நான் எனது உரையின் ஆரம்பத்தில் கூறியவாறு ‘சர்வதேச காய்நகர்த்தல்கள்’ மட்டுமே போதுமானதாக இருக்கப் போவதில்லை. இந்த ‘நகர்த்தல்கள்’ சர்வதேச அரங்கில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்குப் பின்னால் மக்கள் அணிதிரள்வு ஒன்றிருத்தல் வேண்டும். சர்வதேசத்திற்கான அணிதிரட்டல் என்ற நோக்கில் செய்யப்படும் அணிதிரட்டலாக சுருங்காமல், நிலை கடந்த வலி, துயரம் என்பதற்குமப்பால் தமது எதிர்காலம் பற்றி சிந்திப்பதற்கான, அதைத் தாமே திட்டமிடுவதற்கான வெளியை உருவாக்குவதற்கான அணிதிரட்டலாக இது இருத்தல் வேண்டும். அந்த வெளி தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய மீள்-கதையாடலுக்கு (rearticulation) இட்டுச் செல்ல வேண்டும்.

இதெல்லாம் நடக்கவே நடக்காது என்ற சாய்மனைக் கதிரை மனநிலையில் நாம் தொடர்ந்திருக்க முடியாது. எல்லாம் செப்படி வித்தை என்று வாழாவிருக்க முடியாது. தமிழ்த் தேசிய அரசியலை மே 2009 இற்குப் பின்னர் தொடர்ந்து செய்வோருக்கு சுய சிந்தனை இல்லை அவர்களை வெளியார் தூண்டுகின்றனர் என்ற மட்டந்தட்டலை நாம் வெளிப்படையாக உதாசீனம் செய்ய வேண்டும். இளம் சமூகத்தினருக்கு யதார்த்தம் தெரியாது அவர்கள் உசுப்பேற்றப்படுகின்றார்கள் என்ற வெற்றுப் பேச்சுக்கு நாம் தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மிகக் கடினமான காலப்பகுதியில் புதியதொரு உலகத்தைப் படைத்திடுவதைப் பற்றிச் சிந்திப்பவன் தான் உண்மையான சமூகச் செயற்பாட்டாளன். தோல்வி மனப்பான்மையைக் கைவிட்டு தமிழ்த் தேசத்திற்கின் விடிவற்காய் களப் பணியாற்ற அனைவரும் திட சங்கற்பம் பூணுவதே மாமனிதர் குமார் பொன்னம்பலம் போன்று தமிழ்த் தேசத்திற்காகப் போராடி உயிர் நீத்தவர்களுக்கு நாம் செய்யும் மகத்தான நன்றிக் கடன்.

வணக்கம்.